என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் மம்முட்டியின் தோற்றம் வெளியாகியுள்ளது.
    பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.

    ஒன் படத்தின் போஸ்டர்

    இதில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.

    படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது புதிய சாதனை படைத்திருக்கிறது.
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

    விஸ்வாசம் படைத்த சாதனை

    தற்போது ட்விட்டரில் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் இருந்த பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை விஸ்வாசம் பிடித்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    ஸ்ரீ பிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் பார்த்து பாராட்டியுள்ளார்.
    சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இப்படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

    நாராயணசாமியுடன் படக்குழுவினர்

    இப்படத்தில் நாயகனாக ஹரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேணி விஜய்யிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

    விஜய் - மகிழ்திருமேணி

    விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65வது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
    ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

    தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் ஜோதிகா கைவசம் உள்ளது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.

    ஜோதிகா - சசிகுமார்

    இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
    பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான நடிகர் அதர்வா மீது எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
    பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான நடிகர் அதர்வா, பரதேசி, ஈட்டி, செம்ம போத ஆகாத உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதர்வா ரூ.6 கோடி பணமோசடி செய்ததாக எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் வி.மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், அதர்வா நடித்த செம போத ஆகாதே என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதமானதால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து தருவதாக கூறினார்.

    அதர்வா

    ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் பிரபல நடிகராக இருக்கும் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து 'நேரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார்.

    இவர் நடிகை ரேஷ்மி மேனனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நேற்று (11.11.2019) ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாபி சிம்ஹா - ரேஷ்மி

    பாபி சிம்ஹா தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். 
    ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    சீறு ரிலீஸ் தேதி

    இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வருகிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கே சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக சீறு உருவாகி வருகிறது. 

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தன்னுடைய ஆக்‌ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’.  சுந்தர்.சி இயக்கி இருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்திற்கு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார். 

    இப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு விஷால் கோரிக்கை வைத்துள்ளார். ஆக்‌ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர்கள், கொடிகளை வைக்க வேண்டாம். இதற்கு ஆகும் செலவுகளை ஏழை, எளியோர்களுக்கு உதவுமாறு விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    விஷால்

    இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் - சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன் ரொமாண்டிக் படத்தில் நடித்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரொமாண்டிக் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

    காதல் காமெடி படமான இந்த திரைப்படத்தில் ஆகாஷ் பூரி மற்றும் கித்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    ரம்யா கிருஷ்ணன்

    இதற்காக படக்குழுவினர் கோவா சென்றிருக்கின்றனர். அடுத்து வரும் 30 நாட்களுக்கு ரம்யாகிருஷ்ணன் படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். 
    இயற்கை படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான குட்டி ராதிகா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அகோரியாக மீண்டும் தமிழுக்கு வரவிருக்கிறார்.
    'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்கு பின் 'தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார். 

    படம் குறித்து இயக்குனர் நவரசன் கூறியதாவது:- 'தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்தி, மலையாளம் மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. 'அருந்ததி', 'பாகமதி' ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படம் தமயந்தி. 

    இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்பு கொண்டேன். அவருக்குத் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிசியாக இருந்தார். ஒரு முறை கதையை கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இரண்டு கால கட்டங்களில் நடக்கும் இந்த கதை ஐதராபாத், பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது' என்றார். 

    குட்டி ராதிகா

    இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவி பிரசாத், சுசித்ரா பிரசாத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக நான்கு மணி நேரம் மேக் அப் போட்டுள்ளார். படத்தின் முக்கிய காட்சிகள் காசியில் படமாக்கப்பட்டது. இப்படத்தை இந்த மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள். 
    மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

    சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில், அடுத்ததாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை 13ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    வானம் கொட்டட்டும் போஸ்டர்

    முதல் பாடல், இரண்டாவது பாடல், டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020ம் ஆண்டு ஜனவரியில் இப்படம் வெளியாக இருக்கிறது.
    ×