என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார்.

கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். ஏற்கனவே சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது.
விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்து தெலுங்கில் பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு குட்டி கதை என்ற பாடலை வெளியிட உள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வதை விஜய் வழக்கமாக வைத்திருப்பார். தற்போது ஒரு பாடலே அப்படி வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்சேதுபதி - திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ‘‘3 வருடங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகும் அர்த்தத்தில் நான் எதையும் பேசவில்லை. 10 வருடங்களுக்கு மேல் நடிகையாக சினிமாவில் நீடிப்பேன். திரையுலகம் சவால் நிறைந்தது. இங்கு நடிகைகள் தொடர்ந்து இருப்பது கஷ்டம். என்னால் நடிக்க முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன். தொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம். அதை வைத்து சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது.’’
இவ்வாறு சமந்தா கூறினார்.
மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சண்டிமுனி படத்தின் விமர்சனம்.
மனைவியும் பெற்றோரும் ஒரு விபத்தில் மரணமடைந்த நிலையில், தனியாக வாழ்ந்துவருகிறார் நட்ராஜ். அவர் வசித்து வரும் வீட்டில் பேய் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் தகவல் பரப்புகிறார். அப்பகுதி மக்களும் அது உண்மை என்று நம்பத் தொடங்குகின்றனர். ஆனால் நட்ராஜ் இதனை நம்ப மறுக்கிறார்.
இந்த சூழலில் பள்ளியொன்றில் பணியாற்றும் மனிஷா செல்லும் இடமெல்லாம் பேய்கள் விடாது துரத்துகின்றன. இதற்கு தீர்வு காண மனிஷாவின் குடும்பத்தினர் ஒரு சாமியாரைச் சந்திக்கின்றனர். அவர் சொல்லும் தீர்வினால், மனிஷாவும் நட்ராஜும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். காதல் மலர்கிறது. அதுவே, அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கக் காரணமாகிறது.

இதன்பின்னர், நட்ராஜின் கண்களுக்கும் பேய் தென்படத் தொடங்குகிறது. அந்த பேய் மனிஷாவைக் கொல்ல முயற்சிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடையும் நட்ராஜ், மனிஷாவை விட்டு பேய் விலக என்ன செய்தார்? அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சண்டிமுனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்ராஜ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கஞ்சனா படத்தில் லாரன்ஸ் செய்வது போல், பேய் தன்னுள் புகுந்ததும் பெண் போல் நட்ராஜ் நடித்துள்ள காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நாயகி மனிஷா யாதவ் தாமரை, ராதிகா என இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பில் வித்யாசம் காட்டி இருக்கிறார்.

ஆர்த்தி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார். யோகிபாபு பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் வந்து தலையை காட்டிவிட்டு செல்கிறார். ஒருவர் மீது கொண்ட அன்பு மரணமடைந்த பின்னும் தொடரும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது மிகப்பெரிய மைனஸ்.
ஏ.கே.ரிஷால்சாயின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், பின்னணி இசை இன்னும் மிரட்டலாக கொடுத்திருக்கலாம். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘சண்டிமுனி’ தொய்வு.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிகர் அஜித்தை டார்கெட் செய்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் சில படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிறந்த திரைப்படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் திரைப்படம் விஜய் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் கொரியன் படமான பாராசைட் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் அப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த திரைபடத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம் வரலாறு படைத்துள்ளது.

பாராசைட் திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அப்படத்தின் கதை, விஜய் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது.

இதையொட்டி இப்படத்தின் அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் தேவரகோண்டா, மக்களின் ரசனை மாறி கொண்டே இருப்பதால், இனி காதல் தொடர்பான படத்தில் நடிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு புது அனுபவங்களை தரும் படத்திலேயே நடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, நடிகை அனுஷ்காவுடன் பட வெளியீட்டில் மோத உள்ளார்.
விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படம் காடன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா' எனவும், இந்தி பதிப்புக்கு `ஹாதி மெரே சாதி' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். மேலும் புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.
இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனிடையே படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருபடி மேலேபோய் ரசிகர்களுடன் செல்பியே எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு வேன் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி முதலில் கையசைத்தார்.
அதனையடுத்து தன்னுடைய செல்போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த விடியோ நேற்று முழுவதும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'நன்றி நெய்வேலி' என செல்பி புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ளார்.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஹெலன் என்ற படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் அருண் பாண்டியன் வாங்கி இருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன்.
தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
இந்த தகவலை அறிந்த தந்தை ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை நிறுத்துகிறார். இதனால் வேதனையில் ஹெலன் மாயமாகிறாள். அவரை தந்தை தேடி அலைகிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெலன் என்ன ஆனாள் என்பது கதை.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரிய போட்டிக்கு நடுவில் நடிகர் அருண் பாண்டியன் வாங்கி இருக்கிறார். தமிழ் பதிப்பில் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் அருண் பாண்டியன் மீண்டும் நடிக்க வருகிறார்.
கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தமிழ், மலையாளம் திரையுலகில் வளந்து வரும் நடிகையான ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார்.






