என் மலர்
சினிமா செய்திகள்
பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தில் நடித்திருந்த விஷால் - ஆர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.
ஆக்ஷன்' படத்தைத் தொடர்ந்து 'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் 'சக்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. 'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.
இதனைத் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கவும் உள்ளார். தற்போது இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக ரீத்து வர்மாவும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தில் நடித்துள்ளனர். அந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படமாக ஆனந்த் ஷங்கர் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ப.பாண்டி படத்தின், இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் 2017-ம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே தயாரித்திருந்த இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ப.பாண்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ்.

அதில் ராஜ்கிரண் மற்றும் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக படங்களில் பிசியாக நடித்து வருவதால் இப்போதைக்கு இயக்குநர் ஆசையைத் தள்ளி வைத்திருக்கிறார் தனுஷ். தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, 'ப.பாண்டி 2' படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் அதிக வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், 'கோப்ரா' படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஃபியா படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. குற்றப் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியதாவது: ‘மாஃபியா - பாகம் 1’ போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை.

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றதால், மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூரை காப்பியடித்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் பிப்ரவரி 7ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்டார்.

அதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இது ரசிகர்கள கவர்ந்துள்ளது. இருந்தபோதும், அது ஏற்கனவே நடிகை கரீனா கபூரால் செய்யப்பட்ட ஒரு விஷயம் என, சிலர் இதை கிண்டலும் செய்கின்றனர்.
பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி அடைந்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுவிட்டது. மேலும் சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால், அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. மேலும், இவர் ஒரு வருட காலமாக நீடிப்பார் எனவும் அரசாணை பிறப்பித்தது
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு அதிகாரி பதவிகாலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒருவருடத்திற்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வாதிட்டார். தற்போது, தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூன் 30-ந்தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதனை அடுத்து விஷால் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.
விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகர் விஜய் சேதுபதி “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய்யும் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் கடந்த மாதம் 31-ந் தேதி ரிலீசாக இருந்தது. அதே தினத்தில் சந்தானத்தின் மற்றொரு படமான ‘டகால்டி’ ரிலீஸ் ஆனதால், சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஒருவாரம் தாமதமாக, அதாவது பிப்ரவரி 21-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. நடிகர் விஜய் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் அவரது ஆடிட்டர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் பாடலை வித்தியாசமான முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சூரரைப் போற்று படம் விமானத்தை மையப்படுத்திய கதை என்பதால், இசை வெளியீட்டையும் இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மாறா எனும் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ’வெய்யோன் சில்லி’ எனும் பாடலை விமானத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த பாடல் வெளியீட்டிற்காக அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அந்த மாணவர்களின் ஆசை இதன் மூலம் நிறைவேறும் என படக்குழு தெரிவித்துள்ளது.






