என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
    விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகம்’ சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இயங்கி வந்தது. நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானத்தைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடக்க விழா நடைபெற்றது.

    இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான்,அமீர் உட்பட திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான் சினிமா தற்போது உள்ள நிலை குறித்து தனது வருத்தத்தைப்பதிவு செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன.

    மேலும், பண்டிகைக் காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டு விடுகின்றன.

    இதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-ஐ தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    முன்னணி நடிகர் நடிக்கும் படங்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம்; மற்ற நடிகர்களின் படங்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியும் அவை செயலாக்கம் பெறவில்லை என்பது அத்துறையில் நிலவும் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.

    200 முதல் 250 பேர் வரை அமரும் சிறிய திரையரங்குகள் மாநகராட்சிகளில் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டும் அது இன்னும் அமலுக்கு வந்தபாடில்லை. அது செயலாக்கம் பெற்றால் திரையரங்க ஒதுக்கீட்டுச் சிக்கல் ஓரளவு தீர வாய்ப்புண்டு.

    ஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப் படங்களில் இணைய தளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    சிவகார்த்திகேயன்

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படம் மூலம் விஜய் சேதுபதி-விக்னேஷ் சிவன் கூட்டணி சேர்ந்தனர். 

    2016-ம் ஆண்டே இந்த படம் குறித்த தகவல் வெளியான நிலையில், பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த படத்தின் வேலையில் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    சமந்தா, நயன்தாரா

    அதன்படி செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ராங்கி படத்திற்காக நடிகை திரிஷா கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்தாராம்.
    96, பேட்ட படங்களுக்கு பிறகு ராங்கி, பரமபத விளையாட்டு, பொன்னியின் செல்வன், சுகர் என பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கியுள்ள ராங்கி படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியிருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்றது. 

    ராங்கி படக்குழுவினருடன் திரிஷா

    அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இருப்பினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து திரிஷா நடித்துள்ளாராம். அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் வெளியிட்டுள்ளார்.
    நடிகை சாய் பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?' என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, 'அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான். 

    சாய் பல்லவி

    'தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா? அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்' என்றார். ஏற்கனவே சாய்பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ மை கடவுளே’ படத்தின் விமர்சனம்.
    சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். வாலிபம் வந்த பின்பும் இவர்களின் நட்பு தொடர்கிறது. நண்பனாக இருக்கும் அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என கருதும் ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அசோக் செல்வனும் தயக்கத்துடன் அதற்கு சம்மதிக்கிறார்.

    இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த சூழலில் அசோக் செல்வனின் சின்ன வயது சினேகிதியான வாணி போஜன் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அசோக் செல்வனை விட இரண்டு வயது மூத்தவர் வாணி போஜன். அசோக் செல்வனும் வாணி போஜனும் நெருங்கி பழகுவது ரித்திகா சிங்கிற்கு பிடிக்கவில்லை. 

    ஓ மை கடவுளே படக்குழு

    இதனால் அடிக்கடி அசோக் செல்வனுடன் சண்டை போடும் ரித்திகா சிங், ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மன உளைச்சலில் இருக்கும் அசோக் செல்வன் முன்பு விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கடவுளாக ஆஜராகிறார்கள். உனக்கு இன்னொரு வாழ்க்கையை தருகிறோம், இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என கூறுகிறார்கள்.

    அந்த வாழ்க்கையில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் பழகி வரும் அசோக் செல்வன், இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? என்பதே மீதிக்கதை.

    ஓ மை கடவுளே படக்குழு

    நாயகன் அசோக் செல்வன், இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறும்பான நண்பராகவும், ஜாலியான கணவராகவும் படம் முழுக்க வருகிறார். ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் அசோக் செல்வனுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

    ரித்திகா சிங், நண்பராக இருக்கும் போது வெகுளியாக இருப்பவர், மனைவியான பின் கணவரை சந்தேகப்படும் காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார். வாணி போஜன், காதல் தேவதையாக வருகிறார். அவர் வருகிற காட்சிகள் எல்லாமே வசீகரிக்கின்றன. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    ஓ மை கடவுளே படக்குழு

    கடவுள்களாக வரும் விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியிருக்கின்றனர். ‌ஷாரா, ஒரு நண்பனுக்கே உரிய கடமைகளை தவறாமல் செய்திருக்கிறார். ஆங்காங்கே அவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடி சிரிக்க வைக்கிறது. 

    படத்தின் முதல் பாதி காதலும், மோதலுமாக கடந்து போகிறது. இரண்டாவது பாதியில், ஆரம்பம் முதல் இறுதிவரை கவித்துவமான காட்சிகள். ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி கைதட்ட வைக்கிறார், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. 

    லியோன் ஜேம்சின் பின்னணி இசை படத்திற்கு புத்துயிர் தருகிறது. பாடல்கள் ஓகே ரகம் தான். விது அய்யண்ணா ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. 

    மொத்தத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் கலாட்டா.
    கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தின் முன்னோட்டம்.
    கிராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தை கே.எஸ்.ராமா ராவ் தயாரித்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா, இசபெல் லிட்

    காதாலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜெய கிருஷ்ணா கும்மாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாஹி சுரேஷ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள இப்படத்தில், வெங்கடெஷ்வர ராவ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
    பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்ட போவதாக தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாரம்'. தேசிய விருது பெற்ற இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோ கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது: இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். 

    ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். 

    ராம், வெற்றிமாறன், மிஷ்கின்

    அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். 

    நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். 

    இவ்வாறூ அவர் கூறினார்.
    ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீடு மூலம் நடிகர் சூர்யா அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரின் கனவை நனவாக்கி உள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது. சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.

     சூர்யா

    இதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். படமும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என்பதால் விமானத்தில் வைத்து வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் எனப் படக்குழுவினர் கருதியுள்ளனர். 

    விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார். இதற்காக மாணவர்களுக்கு கட்டுரை போட்டி வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 70 பேர் மட்டுமே இன்று விமானத்தில் சென்றனர். மீதமுள்ள 30 மாணவர்கள் தங்களுக்கு பதிலாக தங்களது பெற்றோர்களை அனுப்பி வைத்துள்ளனர். தங்களை விட தங்களது பெற்றோர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என கருதி அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் புரமோஷனுக்காக சிறப்பு விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    மாணவர்களுடன் சூர்யா

    அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு போஸ்டருடன் கூடிய விமானத்தை அறிமுகம் செய்தனர். சூர்யா படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதற்குமுன் ரஜினியின் காலா, தர்பார் படங்களுக்கு மட்டுமே விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. 
    வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். 

    மணிரத்னம், சிம்பு

    முதல் பாகம் இந்தாண்டுக்குள் எடுத்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர். மேலும் முதல் பாகத்திற்கு பின் சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
    ×