என் மலர்
சினிமா செய்திகள்
பிரவீன் சட்டரு இயக்கத்தில் சித்து, நரேஷ், ரேஷ்மி கவுதம், ஸ்ரத்தா தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இம்சை அரசி’ படத்தின் விமர்சனம்.
நாயகன் சித்து, நரேஷ் இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். நரேஷ் மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.
யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், சித்து வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ரேஷ்மி கவுதம் மீது சித்துவுக்கு காதல் வருகிறது.
இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து சித்துக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் நரேஷுக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.
இதற்கிடையே சித்து, நரேஷ் திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசும் இவர்களை தேடுகிறது.

கடைசியில், சித்து, நரேஷ் இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், திருட்டு போன்ற காட்சிகளில் சித்து தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரத்தா தாஸுடன் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். நரேஷ் குருவாக வர, சித்து அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். நரேஷ் காமெடியால் சிரிக்க வைக்கிறார்.
ரேஷ்மி கவுதம் காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன் சட்டரு. முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
ஸ்ரீ சரண் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராம் ரெட்டி ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `இம்சை அரசி' குறைவான இம்சை.
தெலுங்கு பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் பிரபல நடிகை ஒருவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் 'ஆச்சார்யா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்தப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ஒரு படத்தில் கூட தனியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடாத இவர் தற்போது தான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். காரணம் கேட்டால், நடனம் ஆடுவது என்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதிலும் சிரஞ்சீவியுடன் ஆட அழைப்பு வந்தபோது ரொம்ப யோசிக்கும் வேலையெல்லாம் என் மூளைக்கு கொடுக்கவே இல்லை.. உடனே ஒப்புக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தை இயக்கிய மிஷ்கின் வெளியேறினார். இதனால் இப்படத்தை நடிகர் விஷாலே இயக்கி இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக விஷால் அறிவித்தார். அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் துப்பறிவாளன் 2 பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் நடிகர் லோகேஷை மருத்துமனையில் விஜய் சேதுபதி சந்தித்து நலம் விசாரித்தார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் லோகேஷ் பாப். தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சில படங்களில் நடித்து வரும் லோகேஷுக்கு தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவரை நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இரண்டு மூன்று தினங்களில் லோகேஷ் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு தம்பியாக நடிப்பவரின் விவரம் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஐதராபாத் மற்றும் சென்னையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடிகர் ராஜ் அய்யப்பா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ் அய்யப்பா, ஏற்கெனவே அதர்வா நடித்த 100 என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதோடு, அஜித் உடன் அமராவதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பானு பிரகாஷின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்யாவை திருமணம் செய்து ஓராண்டு ஆன நிலையில், அவருக்காக உருகி ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருக்கிறார் சாயிஷா.
கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடித்தார். அப்போது இருவரும் காதலிக்கத் துவங்கினர். சில காலத்துக்குப் பின், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 10ல், ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக தங்களுடைய திருமண விழாவை நடத்தினர்.
அதில் திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இருவரும் அதை கொண்டாடி வருகின்றனர். இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டு, நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இப்போது மட்டுமல்ல, என்றுமே, உங்களை நேசிப்பேன்; காதலிப்பேன் என உருகி இருக்கிறார்.
ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரகுரு படத்தின் முன்னோட்டம்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரகுரு’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிரடியான திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
திரெளபதி கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அப்படத்தின் இசையமைப்பாளர் ஜுபின் டுவிட் செய்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் திரெளபதி. ரிச்சர்டு நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை கடந்து வெளியான இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனிடையே, தனது அடுத்த படத்தின் தலைப்பும் கடவுள் பெயராக தான் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திரெளபதி படத்தின் இசையமைப்பாளர் ஜுபின் தனது டுவிட்டர் பக்கத்தில், இயக்குனர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்டு உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் திரெளபதி பட கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.
விபத்துகளை தவிர்க்க சினிமா ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப் பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப் பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார்.
இதையடுத்து கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு ‘பாதுகாப்பு குழு’ ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் வரலாற்று படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் குவிகிறது. ஏற்கனவே நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.
ஸ்ரீராமராஜ்ஜியம், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற புராண சரித்திர கதைகளிலும் நடித்துள்ளார். தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் ‘மூக்குத்தி அம்மன்’ பக்தி படத்தில் விரதம் இருந்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகும் ராஜவீர மடகாரி நாயகா என்ற சரித்திர கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருந்தாலும் கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக சூப்பர் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படம் 10 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன்னடத்துக்கு போகிறார். இந்த படத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கிறார். சுமலதா, ரம்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம்.

அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமல், மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘பார்த்த முதல் நாளே பாடல்’ வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனை இயக்குனர் கவுதம் மேனன் சந்தித்து பேசினார். அப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.






