என் மலர்
சினிமா செய்திகள்
மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம்.

அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமல், மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘பார்த்த முதல் நாளே பாடல்’ வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனை இயக்குனர் கவுதம் மேனன் சந்தித்து பேசினார். அப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
‘மகாநதி’ ஷோபனா பாடிய ‘கந்த சஷ்டி கவசம்’ பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு இடைகால தடை விதித்துள்ளது.
மகாநதி படம் மூலம் பிரபலாமனவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசை கலைஞரான இவர் கடந்த 1995 -ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ‘கந்த சஷ்டி கவசம்‘ மற்றும் ‘ டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்‘ ஆகிய இரண்டு ஆல்பங்களை பாடி உள்ளார். இந்த இரண்டு ஆல்பங்களும் ’சிம்பொனி’ மற்றும் ‘பக்தி எப்.எம்’ என்ற பெயரில் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஷோபனா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்டரீதியாக செல்லாது என ஷோபனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் வாதிட்டார்.

மேலும், தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து பாடல்களுக்கு பயன்படுத்தியது சட்ட விரோதமானது என்பதால் இந்த இரண்டு ஆல்பங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ’மகாநதி’ ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் மற்றும் ’டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் என நடிகர் மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தொலைபேசி சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி கொரோனா விழிப்புணர்வுக்காக பிரத்யேக காலர்டியூனை வழங்கி வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் அந்தக் காலர் டியூனில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பெற்றுள்ளது.
யாருக்காவது போன் செய்தால் முதலில் இருமல் சத்தம் கேட்கிறது. அதுவும் ஒலிக்கும் குரல் அசலாக இருமுவதை போலவே உள்ளது. நாம் தொடர்பு கொள்ளும் நபருக்குத்தான் ஏதோ பிரச்னையோ என யோசிக்க வைக்கிறது. சில நொடிகள் கடந்தபின் ‘கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு’ வசனங்களை பேசுகிறது. இது பீதியை கிளப்புவதால் எப்படி தவிர்ப்பது என்று கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர்.

இந்தக் காலர் டியூன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் மாதவன் கூறியிருப்பதாவது:- இப்போதெல்லாம் நான் யாருக்கு போன் செய்தாலும், கேட்கும் முதல் இருமல் சத்தம் என்னை மிரள வைக்கிறது. அது மத்திய சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர் தான் தெரிய வருகிறது. சிறந்த பணி. சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமலை மட்டும் நீக்கி விடுங்களேன். நான் போன் செய்யும் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையே விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் துல்கர் சல்மான், அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்தப் படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதுபற்றி துல்கர் சல்மான் கூறியதாவது: தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்துள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாராட்டுவது நிஜம்.

இந்த படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது. இன்னும் பத்து வருடத்தில் தேசிங்கு மிகப்பெரிய ஆளாகிவிடுவார். தர்ஷன் ஹீரோவாகி விடுவார். 10 வருடம் கழித்து சந்தித்தால் இந்தப்படத்தை பற்றி பேசுவோம் எனத் தோன்றுகிறது. ரீத்து வர்மா சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். அவர் கண்ணிலேயே நடிக்கிறார்’. இவ்வாறு அவர் பேசினார்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தை இயக்கிய மிஷ்கின் வெளியேறினார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை வெளியிட இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.
மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 15-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் பிரபலங்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 500 பேரை மட்டுமே அழைத்து நட்சத்திர ஓட்டலில் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் முந்தைய படங்களான, சர்கார், பிகில் பாடல் விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் மாஸ்டர் பட விழாவை ரசிகர்களை அழைக்காமல் எளிமையாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பிகில் பட பாடல் விழாவில் மோதல் ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்திய சம்பவம், சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை, போலீசார் மற்றும் அரசிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள், கொரோனா வைரஸ் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனதில் வைத்து விழாவை நட்சத்திர ஓட்டலில் நடத்துவதாக கூறப்படுகிறது.
விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

‘தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஒரு கிரைம் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி, இசை கோர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு பணிகள், சிங்கப்பூரில் உள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆர்டன்ட் ஸ்டுடியோவில், பிரபல ஒலிவல்லுநர் டேனியல் வாங் முன்னிலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறை கால வெளியீடாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் குட்டி ஸ்டோரி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். வித்தியாசமான குத்துப்பாடல் போன்று அனிருத் இசையமைத்திருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

இந்த பாடலில் விஜய்யின் நடனம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் 'பேய் இருக்க பயமேன்' என்ற படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் 'பேய் இருக்க பயமேன்'. ஜோஸ் பிராங்க்லின் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கார்த்தீஸ்வர்ன் கூறும்போது, ‘இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது. பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்பதை மையக்கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த பேய் இருக்க பயமேன்.

இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது’ என்றார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்த சாய் தன்ஷிகா தற்போது குறும்படத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் சாய் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம் சினம்.

பெரிய படங்களில் பிசியாக இருக்கும் போதே குறும்படத்தில் நடித்தது ஏன் என்று கேட்டதற்கு சாய் தன்ஷிகா கூறியதாவது, 'தன் மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள் என்றவுடன், அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது' என்றார்.
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் முன்னோட்டம்.
8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.






