என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.
    அதர்வா நடிப்பில் கடந்த வருடம் ‘100’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து, குருதி ஆட்டம், தள்ளி போகாதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரம்மன், மாயவன் படத்தில் நடித்துள்ளார். 

    நந்தா

    புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கும் இப்படத்தில், அதர்வா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் நந்தா வில்லனாக நடிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் எனவும் இயக்குனர் ரவீந்திர மாதவா தெரிவித்துள்ளார். 
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருந்த கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேன்ஸ் திரைப்பட விழாவை தள்ளிவைக்க முடிவு எடுத்துள்ளோம்.

    டுவிட்டர் பதிவு

    இதற்கான சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அதே நேரத்தில் பிரான்ஸ் அதிபரின் முழு அடைப்பு உத்தரவை அனைவரும் மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஒட்டு மொத்த உலகத்தோடும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் மே மாதம் 12-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறவிருந்த கேன்ஸ் திரைப்பட விழா ஜூன் மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவரை காதலித்ததாகவும், சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
    ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவரை பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுஷ்கா, ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார். 

    அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. 

    அனுஷ்கா

    அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்ததாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
    புகழ்பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த நடிகரும், நடிகையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பிரபலங்களையும் தாக்கி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஒரு படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

    நடிகை ஒல்கா குரிலென்கோ, நடிகர் இத்ரிஸ் எல்பா ஆகிய மேலும் 2 ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கி உள்ளது. ஒல்கா குரிலென்கோ, ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சொலாஸ், டாம்குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் இத்ரி எல்பா தோர், பசிபிக் ரிம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, இந்திரா வர்மா

    இந்த நிலையில் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமான கிறிஸ்டோபர் ஹிவ்ஜுவும், அதே தொடரில் நடித்த நடிகை இந்திரா வர்மா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

    நடிகர் விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

    விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சுதா கொங்கரா, அஜய் ஞானமுத்து ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. 

    விஜய்

    இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.
    விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள மாஸ்டர், 'க/பெ ரணசிங்கம்', ‘மாமனிதன்’, 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. 

    சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க, அதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

    முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி

    கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், 'இலங்கை வீரரின் கதையில் தமிழரான விஜய் சேதுபதி நடிப்பதா?' என்று சிலர் விமர்சித்தனர். இதனால், இந்தப் படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

    விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு '800' என்றே தலைப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.
    நீதிமன்ற தடையை மீறி சிவகார்த்திகேயன் படம் வெளியிடப்படுவதாக இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருந்தார். ஹீரோ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார். 

    இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும். மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

    சிவகார்த்திகேயன், மித்ரன்

    ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. 

    ”ஹீரோ” திரைப்படம் வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்த படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    சூர்யா

    இந்நிலையில், கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடித்துள்ளார். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. 

    பா.ரஞ்சித், துஷாரா

    இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார். 

    இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. 

    குழந்தையுடன் பா.ரஞ்சித்

    இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதிக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மிளிரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
    த.வினு இயக்கத்தில் பிரிட்டோ, அப்ஷரா, ரேஷ்மா நடிப்பில் உருவாகி வரும் தூங்கா கண்கள் படத்தின் முன்னோட்டம்.
    கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் "கைதி" ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் "தூங்கா கண்கள்". 70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படயாக வைத்து உருவாகியிருக்கும் படம் "தூங்கா கண்கள்". இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. 

    தென் தமிழகத்தில் "வாதை" என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து த.வினு உருவாக்கியிருக்கும் படம் "தூங்க கண்கள்". கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜார்ஜ் படம் முழுக்க நடித்திருக்கும் படம் இது. 

    இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். துரை சுதாகர், த.வினு நிக்கேஷ் ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.  செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
    வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை மற்றும் விசாரணை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இவர் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான மிக மிக அவசரம் படமும் பாராட்டுகளை பெற்றது.

    இந்நிலையில், வெற்றிமாறன் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரில்லர் கதையம்சத்தில் உருவாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் லவ்லின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 

    ஆண்ட்ரியா, வெற்றிமாறன்

    நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன வடசென்னை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதேபோல் தேசிய விருது வென்ற வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் டாப்சிக்கு ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
    ×