என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் டி.சிவா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுபாப்பு அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.
பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும், 2 செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே சதீஷ்குமார் ஆகியோரும், 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபுகணேஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
சென்னையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், இந்த சமூகம் பெண்களை போதை பொருளாக பார்ப்பதாக கூறியுள்ளார்.
தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன. சிலர் ஆபாசமாக திட்டி கருத்து பதிவிட்டனர்.
இதற்கு பதிலடி கொடுத்து ரகுல் பிரீத் சிங் கூறியிருப்பதாவது:- “நடிகைகளை சிலர் கேவலமாக பார்க்கிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள்தானே இவர்களால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால் சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும். சமூக வலைத்தளத்தில் ஒருவர், நான் அணிந்த உடை குறித்து எல்லை மீறி ஆபாசமாக பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை திட்டினேன்.
போலி கணக்குகள் பின்னால் ஒளிந்து உண்மையான முகத்தை வெளிகாட்ட துணிச்சல் இல்லாத கோழைகள்தான் நடிகைகளின் வலைத்தள பக்கத்தில் இதுபோன்ற ஆபாச கருத்துகளை பதிவிடுகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் கணக்குகள் தொடங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். அப்படி என்றால்தான் இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க முடியும்”.
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் சினிமா மற்றும் டி.வி சீரியல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. தமிழகத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.
இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். இதனால் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்று தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறினார். இந்த நிலை அடுத்த மாதமும் நீடித்தால் இந்த இழப்பு அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜீவா நடிப்பில் உருவான படத்திற்கு 18 ஆண்டு பழமையான இசையை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பயன்படுத்தி இருக்கிறார்.
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜிப்ஸி’. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் மட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ஜிப்ஸி படத்தில் வரும் தேசாந்திரி பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறு தகவலை பகிர்ந்துள்ளார். 'தேசாந்திரி பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த இசையமை 2002-ல் கம்போஸ் செய்தேன். சொந்த ஊரில் இந்த பாடலை கம்போஸ் செய்த போது வந்த மழையும், காற்றின் வாசமும் இன்னும் நினைவில் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட கிருஷ்ணா, ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். திரைத்துறையினர் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா வைரஸை யாரும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முடிந்த வரை தடுக்கவும்" என்று கூறினார்.

இதை பார்த்துவிட்டு ஒருவர் "உங்களுக்கு என்ன கோடி கணக்கில் வெச்சிருப்பீங்க.. உட்காந்து சாப்பிடுவீங்க... ஏழைகள் என்ன பண்ணுவாங்க?" என கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா "என்னை சார்ந்து இருக்கும் டிரைவர், பணியாளர், வாட்ச் மேன் உள்ளிட்டவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்களும் செய்யுங்கள். உங்களை சார்ந்து இருப்பவர்களை பார்த்து கொண்டால் நல்லது" என பதில் அளித்துள்ளார். கிருஷ்ணாவின் இந்த பதிவு பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நடிகை சஞ்சனா விஜ் பிடிக்க, மூன்றாவது இடத்தை பி.வி.சிந்து பிடித்துள்ளார். அதிதிராவ் ஹைதரி நான்காவது இடத்தையும், பூஜா ஹெக்டே ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக சமந்தா கூறுகையில், நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், பிடித்தமானவளாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவருக்குமே நம்பிக்கை ஒரு பெரிய காரணி. உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பதக்கவராக மாற்றுகிறது என நான் கருதுகிறேன்’ என்றார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அசுர காதல் என்னும் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒன் கிளன் எனும் பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்து பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து பாடல் இசை வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார்கள்.
I am happy to launch 'Asura Kadhal' Music Video - Stop Violence Against Women! Congrats to @OneLove_OneClan, the revolutionary music team from Singapore! Watch & Share this Video with everyone! Lets spread the message! ✌🏽😊https://t.co/12wdiaCuNy
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 18, 2020
இந்த பாடலை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஜேகே சரவணா மற்றும் அவரது டன்ட்ரா ஸ்டுடியோஸ் இணைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகளை செய்துள்ளார்கள். பெண் வன்முறைக்கெதிரான தமிழ் ஹிப் ஹாப் வீடியோ பாடல் உலக ரசிகர்களை கவரும் என்று குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீசாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் பேச்சுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 9-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 20-ம் தேதி மற்றும் 27-ம் தேதி வெளியாகவிருந்த படங்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டன. இதனால், படங்களின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 'மாஸ்டர்' வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் விசாரித்தபோது, " 'மாஸ்டர்' வெளியீடு கண்டிப்பாக ஏப்ரல் 9-ம் தேதி இருக்கும். அதற்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.
மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழலில், 'மாஸ்டர்' படம் அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக இருக்கும் என நம்புகிறோம். இப்போதைக்கு எங்களுடைய வெளியீடு ஏப்ரல் 9-ம் தேதிதான்" என்று குறிப்பிட்டனர்.
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தாராள பிரபு திரைப்படம் கொரோனாவுக்குப் பின் மீண்டும் ரிலீசாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த 'தாராள பிரபு' படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'தாராள பிரபு' படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ”இன்று உலகையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது.

கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் 'தாராள பிரபு' திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எங்களது 'தாராள பிரபு' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த இக்கட்டான சூழலைக் கடந்த பின், அதன் மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்”. இவ்வாறு ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சிவா நடிப்பில் வெளியான தமிழ்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன், வீட்டுலயே சில் பண்ணு மாப்பி என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. கொரோனாவால் நாடு முழுக்க திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லன்றத உணரனும். நம்ம ஆபீஸ்ல, போயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோருக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்டுலயே கொஞ்சம் சில் பண்ணு மாப்பி”. என கூறியுள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் தயாராகிறது.
இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். அவருடன் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.






