என் மலர்
சினிமா செய்திகள்
ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2-வை கொரோனா வீழ்த்தியதாக சர்ச்சை இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக 2500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இறுதியாக பாகுபலி 2வை கொரோனா வீழ்த்தியது என குறிப்பிட்டு பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸ் பீதியால், அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாகுபலி 2 படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற வரிசையை விட இது நீளமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
It finally took coronavirus to beat the queues of @ssrajamouli ‘s Bahubali 2 ..Panicked Americans line up outside a shopping mart ..Scary sight pic.twitter.com/Yus7Urftw2
— Ram Gopal Varma (@RGVzoomin) March 18, 2020
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது நானில்லை என இளம் இயக்குனர் ஒருவர் அறிவித்துள்ளார்.
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபது வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர் ஒருவர், இது உண்மையா? என கேட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் ஞானமுத்து, “இது யார் பாத்த வேலைனு தெரியலையே” என கமெண்ட் அடித்திருந்தார். இதன்மூலம் அவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தில், பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இவருக்கு, இப்படத்தின் கதாபாத்திரமும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தனது அடுத்த படத்தின் நாயகன் குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் திரெளபதி. ரிச்சர்டு நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை கடந்து வெளியான இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இதனிடையே, தனது அடுத்த படத்தின் தலைப்பும் கடவுள் பெயராக தான் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது அடுத்த படத்திலும் ரிச்சர்டு தான் நாயகன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனது அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடிகர் ரிச்சர்டை வைத்து தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் டைட்டிலை விரைவில் ஒரு நல்ல நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 990 திரையரங்குகள் உள்ளன என்றும், இவை அனைத்துமே மூடப்பட்டது என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை ஞான செருக்கு, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், சூடு உள்ளிட்ட சில படங்களை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர்.

அந்த படங்களை தள்ளிவைத்து உள்ளனர். விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, கார்த்தியின் சுல்தான், அனுஷ்காவின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோகும் என்று தெரிகிறது.
விபத்து நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 என்ற திரைப்படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது. பெரிய அளவில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
படப்பிடிப்பின்போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். இந்த விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்கில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோரிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் உள்ளிட்ட 24 பேரை விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட மற்றவர்கள் இன்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விபத்து எவ்வாறு நடந்தது? என்று துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அஜித் குறித்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. விஜய் படங்கள் ரிலீசாகும்போது எதிராக ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் உருவாக்குவதும், அஜித் படங்கள் வரும்போது விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வதும் வழக்கமாக நடந்தன. இந்த மோதல் கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், விஜய் கோட்டு சூட்டு அணிந்து கலந்து கொண்டது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜய், “நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணலாம் என்று கோட் சூட் அணிந்து வந்தேன். எனக்கு இது பொருத்தமாக உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு தொகுப்பாளர் பிரமாதமாக உள்ளது என்றார்.

விஜய் பேச்சை, அஜித் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். நண்பர் அஜித் என்று பேசிய வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இருவரின் ரசிகர்களும் நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகிறார்கள். விஜய், அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இருவரின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்ததை பலரும் பாராட்டி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், ரசிகர்கள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அடங்காத காளை’ என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கி வருகிறார். இவர் தற்போது ரசிகர்கள் படம் பார்க்க புதிய மோபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது, ‘தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் இன்ஜினியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம்.
நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம்.

இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube ஆப்பை வெளியிடுகிறோம். இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.
நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம்.
எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும். வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும்’ என்றார்.
கொரோனாவால் பலர் ஜிம்முக்கு போக முடியாத காரணத்தால் கத்ரீனா கைஃப் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
இந்தியாவில் பள்ளி, தியேட்டர், மால், ஜிம் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் எல்லாம் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தற்போதைய சூழ்நிலையில் உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு தொடரலாம் என்பது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பிரபல உடற்பயிற்சியாளருடன் கத்ரீனா இணைந்து சில உடற்பயிற்சிகளை செய்து காட்டுகிறார். மேலும் அந்த பதிவில், “கொரோனாவால் ஜிம்முக்கு போக முடியவில்லை. அதனால் நானும் பயிற்சியாளரும் வீட்டில் செய்த உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராக தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், சங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது.

இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. சங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களின் முடிவில் கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை கொண்டாடுவதற்கு முன்னதாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் தகவல் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றி படைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மீண்டும் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார்.
சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறி வைத்து உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் கொண்டாட்டத்தையே இன்னும் முழுமையாக அனுபவிக்காத நிலையில் தற்போது சற்றும் எதிர்பார்க்காத தளபதி 65 அப்டேட் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் எந்த காலேஜில் பணிபுரிபவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் மாணவர்களுக்கு மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் விஜய், ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரல் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் ஐ.டி.கார்டு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் சென்ட் ஜெப்ரிஸ் என்ற காலேஜில் பணிபுரிபவராக அந்த ஐ.டி.கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.






