என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் சட்டப்படி குற்றம், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆகிய படங்களில் நடித்த கோமல் சர்மா, தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.
மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தப்படம் வெளியாக உள்ளது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, “இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது.

மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார். மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர். மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன்.
மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார். இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்’ என்றார் கோமல் சர்மா.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டி விழாவில் நடிகர் விஜய்சேதுபதிக்கு பேச்சுக்கு நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கொரோனாவை விட தற்போது இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி வருடங்களாக இருக்கிறது.
சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மகாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்.
சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள். அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக் கொடுங்கள்.
கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம் தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோஷமாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள். மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது” என்று பேசியிருந்தார்.

விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது, “இன்னொரு மனிதரை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். நாங்களெல்லாம் ஊமை என்று நீங்கள் நினைத்தால் மன்னித்து விடுங்கள்.
எளிதில் பொய் சொல்லக்கூடிய வெறுக்கக் கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்புவதற்கு சாரி. வாழ்க்கை கடவுளால் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமனிதன் மூலம் தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளைத் தான் நம்புவேன்’ என்று கூறினார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம், விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்து டுவிட் செய்திருக்கும் காயத்ரி, “நான் விஜய் சேதுபதியின் பேச்சைக் கண்டிக்கவில்லை. அவர் சுதந்திரமாக பேசுவது தான் ஜனநாயகம். நான் அவருடைய கருத்தில் ஒத்துப் போகவில்லை. அது என்னுடைய சுதந்திரம்.
எல்லோரும் கடவுளை நம்புவதை நிறுத்த வேண்டுமென்று, விஜய் சேதுபதி சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்களை நம்புவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மதச்சார்பின்மை என்ற பெயரில் பகுத்தறிவாளர்கள் விஜய் சேதுபதியின் பேச்சை விரும்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் அட்டகத்தி, திருடன் போலீஸ், ஆறுவது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அட்டகத்தி, திருடன் போலீஸ், ஆறுவது சினம், தர்மதுரை, முப்பரிமாணம், சாமி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
சிறப்பாக நடிக்கிறார் என்று அவருக்கு பெயர் கிடைத்தாலும் அம்மா வேடத்தில் நடிப்பதால் அவரை ஜோடியாக நடிக்க ஹீரோக்கள் யாரும் அழைப்பதில்லையாம். இதனால் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது, 'சினிமாவில் ஹீரோயினுக்கு தேவையான தகுதிகளுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அம்மா வேடங்களிலும் நடித்தேன். இதனால் எனக்கு வயது அதிகமாகி விட்டதாக நினைக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள். இனி அம்மா வேடத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்' என தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. தமிழில் வெற்றி பெற்ற ‘96’ படத்தை தெலுங்கில் சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து, வெளியிட்டு தோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அது அந்தந்த வயதில் நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதையே கொஞ்சம் மாற்றி எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும்.

சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது. அப்போதே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து இருந்தால் என்னை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.
கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. அதற்கு 10 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது”.
இவ்வாறு சமந்தா கூறினார்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமி’ படத்தின் முன்னோட்டம்.
ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் லட்சுமண் கூறியதாவது:- “விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருக்கிறது. ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக வருகிறார். அவர் தஞ்சாவூருக்கு திரும்பி விவசாயத்தை காப்பாற்ற போராடுவதும் அதற்கு பின்னணியில் உள்ள சம்பவங்களும் கதை. நமது நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் இல்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளை படம் பேசும். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாய கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிக ரீதி படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக இது தயாராகி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையின் போது காவல்துறையினர் துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.
பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது.

இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார். விபத்து நடந்தது குறித்து மீண்டும் மீண்டும் நடித்துக்காட்ட மத்திய குற்றப்பிரிவினர் வற்புறுத்துவதாக கமல் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ, தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரே தெரிவித்துள்ளார். ‘எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக இருப்பதுதான் இதன் முதல் அறிகுறிகள். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை சீரியசாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.
அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஐடிரிஸ் எல்பா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஐடிரிஸ் எல்பா. 47 வயதாகும் ஐடிரிஸ், கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ் முன்னெச்சரிக்கையாக தனக்கும் சோதனை செய்துள்ளார்.
தற்போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை எந்தவித அறிகுறியும் இல்லை; தான் எப்போதும் போல நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
This morning I tested positive for Covid 19. I feel ok, I have no symptoms so far but have been isolated since I found out about my possible exposure to the virus. Stay home people and be pragmatic. I will keep you updated on how I’m doing 👊🏾👊🏾 No panic. pic.twitter.com/Lg7HVMZglZ
— Idris Elba (@idriselba) March 16, 2020
தற்போது ஐடிரிஸ் தனது மூன்றாவது மனைவியான ஷப்ரினாவுடன் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு இன்னும் சோதனை செய்யவில்லையாம். மேலும் மக்கள் அனைவரும் இதுகுறித்து மிக அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ஒருவருக்கொருவர் விலகியிருங்கள்; அடிக்கடி கைகளை நன்றாக கழுவுங்கள்; எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களிடம் இருந்து கூட இந்த வைரஸ் பரவுகிறது; நோய் அறிகுறி இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்; நாம் பல பகுதிகளில் பிரிந்து வாழ்ந்தாலும் இதனை சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும்; யாரும் பயப்பட வேண்டாம்’ என அனைவருக்கும் அறிவுரையும் கூறியுள்ளார்.
ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படத்துக்கு, கே.ஜி.எப் 2 படத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'கே.ஜி.எப்' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 'கே.ஜி.எப் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டன்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீடு 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் என தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினரோ அக்டோபர் 23-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி படத்துக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது. ரஜினி நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.

இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அக்டோபர் 23-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்தனர். இதே தேதியில் தான் 'கே.ஜி.எப் 2' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வியாபாரம் உள்ளது.
ஆனால், 'கே.ஜி.எப் 2' படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, 'அண்ணாத்த' படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். இதனால் ’அண்ணாத்த’ அக்டோபர் 23-ம் தேதி வெளியிடப்படுமா அல்லது வேறு வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் என டுவிட் செய்துள்ளார்.
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘அந்தக் கண்ண பாத்தாக்கா’ பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இதேபோல் குவிட் பண்ணுடா எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், முதன்முறையாக விஜய் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: “விஜய் சாருக்காக நான் எழுதிய முதல் பாடல் இது. இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன். அனிருத், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் ஆகியோரால் இது சாத்தியமானது. இந்த பாடலை உலகமெங்கும் இருக்கும் தளபதி விஜய்யின் அற்புதமான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவின் திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனது சொந்த வாழ்க்கையில் சிலர் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை. நான் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்றனர். இப்போது விவாகரத்து ஆனவருடன் திருமணம் என்று வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
2 ஆண்டுகள் இடைவெளிவிட்டு ‘நிசப்தம்’ படத்தில் நடிக்கிறேன். பாகுபலி, பாகமதி படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன். படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டன. அந்த காயங்கள் ஆறத்தான் இந்த இடைவெளி ஏற்பட்டது. நடிக்க வந்து 15 ஆண்டுகள் எப்படி கடந்தது என்று புரியவில்லை. எடையை குறைத்து வருகிறேன். குண்டாக இருக்கிறோமா, ஒல்லியாக இருக்கிறோமா என்று வெளி தோற்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எல்லோரையும் நல்லா இருக்கிறீர்களா? என்றுதான் கேட்போம். இப்போது ஏன் ஒல்லியாக இருக்கிறாய்? ஏன் கறுத்து விட்டாய்? என்று கேட்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறாயா? ஆரோக்கியமாக இருக்கிறாயா? என்று கேட்பது இல்லை. உடலை பற்றிதான் கேட்கிறார்கள். இப்போது நிறைய பேருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் இப்படி கேட்பதுதான். நாம் எப்படி இருக்கிறோமோ? அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்தன்மையை இழந்து விடக்கூடாது”.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
டகால்டி படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சந்தானம் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகியுள்ளது. சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த கூட்டணி புதிய படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் சந்தானம் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.






