என் மலர்
சினிமா செய்திகள்
ஊரடங்கு சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார் என நடிகர் அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடிகர் -நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், கருத்துப் பதிவையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் வெளியில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக பலரும் ஆதங்கப்படுகிறார்கள். இதனை பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே கடுமையாக சாடினார்.
“‘ஊரடங்கின் அர்த்தம் புரியாமல் சுற்றுகிறீர்களே, உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்களும், உங்கள் குடும்பமும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று சிந்தியுங்கள். யாருமே உயிரோடு இருக்க முடியாது. படங்களில் நான் ஹெலிகாப்டர்களில் தொங்கி இருக்கிறேன். இன்று நமது வாழ்க்கையும் அதுமாதிரி அந்தரத்தில் தொங்குகிறது. முட்டாளாக வெளியே சுற்றாதீர்கள் என்று கண்டித்தார்.

தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், “இப்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார். ஒவ்வொருவரும் இத்தகைய சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகை கவுதமி தனது வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டவில்லை என்றும், அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை எனவும் கூறியுள்ளார்.
நடிகை கவுதமி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். மேலும் அங்கு கிருமிநாசினி திரவத்தையும் தெளித்தனர். ஆனால் கவுதமி தற்போது கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை கவுதமி கூறுகையில், ‘‘நான் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் அமெரிக்கா சென்று திரும்பினேன். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

என்னை யாரும் சோதனைக்கும் உட்படுத்தவில்லை. இப்போது நான் கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கிறேன். என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டவில்லை. அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை’’ என்றார். முன்னதாக கவுதமியின் பாஸ்போட்டில் இருந்த முகவரியை வைத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியதால், பெரும் சர்ச்சை ஆனது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினார்கள்.
பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தூள் படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியுள்ளார். இதைத்தவிர 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற இவர், கடந்த 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மும்பை:
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வீட்டைவிட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்று நடிகர்-நடிகைகள் வீடியோக்கள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். திரையுலகம் முடங்கி உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். இந்தநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்து இருக்கிறேன். இசையால் அனைவரும் ஒன்றிணைவோம். எனது அடுத்த சுற்றுப்பயண விவரத்தை தகுந்த நேரத்தில் அறிவிப்பேன். அனைவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் ரத்தானது அமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியிருக்கிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.
இந்தியன் 2 படத்தை அடுத்து கமல் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகையை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘வேட்டையாடு விளையாடு’. கவுதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் கமல்ஹாசனும், கவுதம் மேனனும் சந்தித்து பேசினர். அப்போது ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க அனுஷ்காவை முடிவு செய்து இருப்பதாகவும் பேசப்படுகிறது. அனுஷ்கா ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து விட்டார். இதுவரை கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கவில்லை. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டதால் சில வாரங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். தற்போது கொரோனாவால் மீண்டும் படவேலைகளில் தடங்கல் ஏற்பட்டு உள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல் டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, ‘த பிரசிடியோ’ உள்ளிட்ட பல படங்களில் மார்க் ப்ளம் நடிப்பு பேசப்பட்டது.
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ஒல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா காய்ச்சலில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடிகர் யோகிபாபு தள்ளி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு கடந்த பிப்ரவரி 5-ந்தேதி மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணத்துக்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்றும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து அடுத்த மாதம் (எப்ரல்) சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து அனைவருக்கும் திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்து வந்தார்.
இந்தநிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மலையாள நடிகர் மணிகண்டன், நடிகை உத்ரா உண்ணி, தெலுங்கு நடிகர் நிதின் ஆகியோர் திருமணங்களை தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் யோகிபாபு, “ஏப்ரல் 9-ந்தேதி எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் அது நடக்குமா? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைப்பது குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் போலீஸ் டாக்டர் சொல்லுவதை கேட்க வேண்டும் என்று நடிகை சார்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை சார்மி தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மீண்டும் சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள்.
எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார்
மாரடைப்பால் காலமான சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், 'சேதுராமன் நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா பாடலாசிரியர் வைரமுத்து, எஸ்பிபியும் இணைந்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.
கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.






