என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரானா வைரஸின் தாக்கத்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதால் நடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
    நடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கொரானா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.

    நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த  சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்... ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்.
    உதயா
    அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் "மாநாடு"படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன்.  இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தயாரிப்பாளர் ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
    மீடூ என்ற இயக்கம் மூலம் சமூகவலைதளங்களில் பிரபல நடிகைகள், உடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதன் முதலாக ஒரு நடிகர் தயாரிப்பாளர் மீது மீ டூ புகார் அளித்துள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் தான் படவாய்ப்பு கேட்டு அலைந்த காலத்தில் ஒரு ஆண் தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு அந்த தயாரிப்பாளர் வாய்ப்புக்கு ஈடாக தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கூறியுள்ளார்.

    பின் தவறாக நடக்க முயன்றார் என்றும், அதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் ஆயுஷ்மான் கூறினார். இதுபோன்ற பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
    விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது:-

    “தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் வி‌ஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு வி‌ஷயமாக சினிமா உள்ளது.

    ‘வீரம்‘தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.
    நடிகை தமன்னா
    நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமான ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்”. 

    இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். 38 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. பிரபலங்களும் இந்த நோயில் சிக்கி மடிகிறார்கள். தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் அண்டோனியா போலிவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவரை தெற்கு கொலம்பியாவில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. சிரோ குர்ரா இயக்கிய எம்ப்ராஸ் ஆப் தி செர்பன் படத்தில் அண்டோனியா போலிவர் நடித்து பிரபலமானார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

    ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், டிராய் ஸ்னீட், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், லைகா நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நின்றது. இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கடிதம் மூலமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர்.

    கமல்ஹாசன்

    இந்நிலையில், இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் பரவின. இதையடுத்து அதுகுறித்து விளக்கமளித்துள்ள லைகா நிறுவனம், இந்தியன் 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இதனைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற 'மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் அப்படத்தை இயக்க உள்ளார்.  வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பிரபாஸ், அரவிந்த் சாமி

    இப்படத்தில் வில்லனுக்கு பவர்புல் வேடம் என்பதால், அரவிந்த் சாமியை தேர்வு செய்துள்ளார்களாம். இவர் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக அனைவரையும் கவர்ந்தார். அதன் தெலுங்கு பதிப்பான துருவா படத்திலும் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    நடிகரும், இயக்குனருமான சசிகுமார், வாழை அறுவடை செய்ய பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விவசாய பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தாலும், விளை பொருட்களை வாங்க ஆளில்லாததால் அவை வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் மதுரையை சேர்ந்த வாழை விவசாயி ஒருவர், அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக வீடியோவில் கூறி இருந்தார். அந்த வீடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

    இதை அறிந்த, நடிகரும் இயக்குனருமான சசிகுமார், அந்த வாழை விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் பண உதவி செய்திருக்கிறார். ஆனால் அந்த விவசாயியோ "சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்" என கூறியுள்ளார்.

    தனது பதிவை பார்த்து விவசாயிக்கு பண உதவி செய்த சசிகுமாரின் நல்ல மனம் வாழ்க என இயக்குனர் இரா.சரவணன் டுவிட்டரில் வாழ்த்தி உள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாட்டின்பேரில் பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு சென்னையில் 2 இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.
    கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சினிமா துறையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேவேளை சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சார்பில் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொருளாதாரத்தில் சரிந்து இருக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவக்கோரி நடிகர் ரஜினிகாந்திடம், தயாரிப்பாளர் சங்க முன்னாள் துணைத்தலைவர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த வேண்டுகோளை ஏற்று 1,000 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்க முன்வந்தார். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மூட்டை மூட்டைகளாக சென்னை அண்ணாசாலை பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

    ரஜினிகாந்த்

    இதையடுத்து பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை கே.ராஜன் வழங்கினார். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி முக கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஜாக்குவார் தங்கம், திருமலை, சவுந்தர், ஜெமினி ராகவா, ஜோதி பாலாஜி, கவுரி மனோகர், கே.எஸ்.சிவராமன், வின்னர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் சின்ட்ரெல்லா படத்தின் முன்னோட்டம்.
    ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சின்ட்ரெல்லா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இவர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரம்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    ‘சின்ட்ரெல்லா’ படத்தை பற்றி அவர் கூறியதாவது: “இது, மாயாஜாலமும், மர்மங்களும் நிறைந்த படம். இந்த படத்தில் ராய்லட்சுமிக்கு 3 வேடங்கள். தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய குழுவைச் சேர்ந்த பெண், ‘துளசி’ என்ற வீட்டு வேலை செய்யும் பெண் என மூன்று வேடங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ராய் லட்சுமி. 

    ராய் லட்சுமி

    ‘சின்ட்ரெல்லா’ என்ற அழகான பெண்ணின் ஜோடியாக ஒரு வெளிநாட்டுக்காரர் நடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். சென்னையிலும், அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா, தனது மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    ‘அட்டகத்தி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நந்திதா ஸ்வேதா. இவர் கைவசம் தற்போது, ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’, ‘கபடதாரி’ ஆகிய மூன்று புதிய படங்கள் உள்ளன. 3 படங்களும் வரிசையாக திரைக்கு வர இருக்கின்றன. ‘வணங்காமுடி’ படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். அவர் தலைமையில் பணிபுரியும் போலீஸ் காரராக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். 

    அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “அரவிந்தசாமி, என் மனம் கவர்ந்த கதாநாயகன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த கனவு, ‘வணங்காமுடி’ படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது. அவர் பந்தா இல்லாமல் பழகினார். நடிப்பு பற்றியும், உடல் ஆரோக்கியம் பற்றியும் நிறைய ஆலோசனைகள் சொன்னார். பொதுவாக ஒரு படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருந்தால், இரண்டு பேருக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும்.

    வணங்காமுடி படக்குழு

    ‘வணங்காமுடி’ படத்தில் நான், சிம்ரன், ரித்திகாசிங், சாந்தினி ஆகிய 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறோம். எங்களுக்குள் போட்டி இல்லை. பொறாமை இல்லை. எந்தவிதமான மோதலும் இல்லை. ஒருவருக்கொருவர் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். 4 பேருக்கும் சமமான கதாபாத்திரங்கள். டைரக்டர் செல்வா மிக திறமையாக எங்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்.” இவ்வாறு நந்திதா கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது தற்போது சர்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

    ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார். 

    குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பேசிய வீடியோவை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீமுகி

    இதுகுறித்து ஸ்ரீமுகி கூறும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை. நான் யார் மனதையோ அல்லது எந்தவொரு சமுதாயத்தையோ காயப்படுத்துவதுபோல் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். ஓ மை கடவுளே, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்றார். தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். 

    அவரது கைவசம் மாமனிதன், லாபம், ரண சிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் உப்பென்னா, இந்தியில் லால் சிங் சதா ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசனுடன் அவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியன்-2 படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

    விஜய் சேதுபதி, கமல்ஹாசன்

    இந்த படத்தை முடித்து விட்டு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணையதளத்தில் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் தலைவன் இருக்கின்றான் என்றே பெயர் வைத்து இருந்தனர்.
    ×