என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு எனக்கும் அந்த படத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒருசில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதை கணக்கில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘தெளலத்’ என்ற படம் விரைவில் வெளிவர இருப்பதாக யோகிபாபுவின் புகைப்படத்துடன் இன்று விளம்பரம் வெளிவந்துள்ளது. இது குறித்து கருத்து கூறிய யோகி பாபு ’இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றான கண் கண்ணாடியை ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.
லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.
தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
விஷால் நிறுவனத்தில் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் கணக்காளர் ரம்யாவுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரம்யா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
பட்டுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் மிமிக்ரி செய்து அசத்தினார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பகுதியில் இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அனுமதியின் பேரில் பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தம் போக்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் சங்கர் ஆகியோர் பங்கேற்று ‘மிமிக்ரி’ செய்து நோயாளிகளை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து ரோபோ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கக்கூடாது. அவர்களுடன் அன்போடு பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனது சொந்த செலவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சியூட்டி வருகிறேன். தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சிபடுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதை புகைப்படமாக பதிவிட்டார். மேலும் விஜய், மகேஷ் பாபுவின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு, “இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறினார்.

விஜய்யின் ட்விட்டர் பதிவு லைக்ஸ்களைக் குவித்தாலும் ஆரம்பம் முதலே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவை நனவாக்க நடிகர் விவேக் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், விஜய் இப்போதுதான் இதை கையிலெடுத்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், “விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு ஒரு நல்லது செய்யும்போது அவருடைய ரசிகர்களும் அதனால் ஈர்க்கப்பட்டு அவர்களும் அந்த நல்லதை செய்து வருகின்றனர். நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். நமது நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்சய் தத்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகையில், “சஞ்சய் தத்திற்கு வந்துள்ள புற்று நோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனினும், கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும். எனவே, அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்தன.

முன்னதாக நேற்று மாலை தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், “நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என்று தெரிவித்து இருந்தார்.
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.
‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாது. அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்தது.

அப்படியென்றால் என்னைபோன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் கஷ்டமான முடிவு. இந்த தடையை திரைப்பட சங்கம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்ப்பின் மூலம் நீக்கியதால் பிரச்சினை தீர்ந்து விட்டது.
ஆனால் கோர்ட்டு தடையை நீக்குவதற்கு முன்னால் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்? நாங்கள் சினிமாதான் தொழில் என்று இருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

இதனிடையில் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக, சிம்பு உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். பல வருடங்களாகவே மிஷ்கின் சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இம்முறை அது நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், கொரோனாவால் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். படப்பிடிப்புக்கு போனால் அந்த வேலையை வீட்டுக்கு சுமந்து கொண்டு வரமாட்டேன். அதே மாதிரி படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்து விட்டால் எனது சொந்த வாழ்க்கை அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எதையும் தொழில் மேல் விழ விடமாட்டேன்.

சிலநேரம் நாம் செய்யும் கதாபாத்திரங்கள் சொல்ல முடியாத தாக்கம் ஏற்படுத்தும். சில வேடங்கள் நமக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும். இப்போதைய கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டி உள்ளது. இந்த ஓய்வு நேரத்தை நம்ம பற்றி நாமே தெரிந்து கொள்ளவும் நம்மை விமர்சனம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனக்குள் இருக்கும் குறைகள் எது என்று கண்டுபிடித்து விட்டேன். கொரோனா வாழ்க்கையை போராட்டமாக மாற்றிவிட்டது. நிறைய பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி போராடுகிறார்கள். எங்களை போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து போராடுகிறோம். எல்லோருமே ஒருவிதத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங் உரிமைக்கு ரூ.30 கோடியும் பெறுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பது சக நடிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் மார்க்கெட் உள்ள இந்தி படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகர்களே இவ்வளவு தொகை வாங்கவில்லை என்கின்றனர்.

ரூ.160 கோடி செலவில் தயாரான பிரபாசின் முந்தைய படமான சாஹோவில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழிலும் வெளியிட்டனர். பிரபாஸ் படங்களுக்கு ஆந்திராவில் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அவர் பெற்றார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருப்பதால், ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், இதை படக்குழுவினர் மறுத்தனர். மேலும் தியேட்டர்கள் திறந்தவுடன் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட திட்டம் இருப்பதாக கூறியிருந்தனர்.

நிலையில் அடுத்ததாக ‘Quit Pannuda' என்ற பாடலை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள். இது குறித்து அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






