என் மலர்
சினிமா செய்திகள்
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் படம் ‘சினம்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணியை படக்குழுவினர் தொடங்கினர். இதற்காக பூஜை போடப்பட்டு, நடிகர் அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங்கை தொடங்கினார். இந்நிலையில், இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அருண் விஜய்யின் பிறந்தநாளன்று இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.
இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்து விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் திரைக்கு வருகிறது. நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக இருக்கும் மனோபாலா, நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கி இருக்கிறார்.
"புதிய வார்ப்புகள்" என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோபாலா. இந்த படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் இவர் அறிமுகமானார். 1982ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா.
கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து 'ஊர் காவலன்' என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். இளம் நடிகர்கள், நடிகைகள் போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது போல், மனோபாலாவும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இளமை நாயகன் என்ற டைட்டிலுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
என்னுடைய முதல் குரு மற்றும் முதல் தெய்வம் அவர்தான் என்று நடிகர் மொட்டை ராஜேந்திரன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் இதற்கு முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்தவர். இயக்குனர் பாலாவின் ’பிதாமகன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என்னை மொட்டை ராஜேந்திரன் என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகின்றனர். என்னுடைய தந்தை, பெரிய அண்ணன், சின்ன அண்ணன் ஆகிய மூவருமே சண்டை கலைஞர்கள்தான். எனவே இவர்கள் மூன்று பேர்களின் பாதையில் நானும் ஒரு சண்டை கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நான் சண்டை கலைஞராக பணிபுரிந்துள்ளேன்.

இயக்குனர் பாலாவின் ’பிதாமகன்’ என்ற படத்தில் சண்டை கலைஞராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் அவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதோடு எனக்கு ஒரு கேரக்டரும் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் ’நான் கடவுள்’ படத்தில் என்னை வில்லனாக அறிமுகப்படுத்துவதாக கூறினார். எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியுமா? என்று பயமாகவும் இருந்தது. ஆனால் பாலா அவர்கள் எனக்கு ஆறுதல் கூறி ’நான் பார்த்து கொள்கிறேன் நீ நடி’ என்று எனக்கு தைரியம் கூறினார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்னுடைய பெயர் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய முதல் குரு மற்றும் முதல் தெய்வம் பாலா சார் அவர்கள் தான். அதன் பின்னர் ’பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஒரு காமெடி கேரக்டரில் நடித்தேன். அந்த படமும் வெற்றி பெற்றது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே என்னுடைய திரையுலக பயணம், சண்டை கலைஞராக ஆரம்பித்து வில்லன் மற்றும் காமெடி நடிகர் என போய்க்கொண்டிருக்கிறது. என்னை மொட்டை ராஜேந்திரன் என அனைவரும் அன்போடு கூப்பிடும் அளவுக்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, மிகப்பெரிய சந்தோஷம்’ என்று மொட்டை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி திரைப்படத்தின் டீசர் சுதந்திர தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் உருவாகி வரும் திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு படத்தின் டீசர் சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளாராம்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். அவர் இளம் வயதிலும், கொஞ்சம் வயதான கெட்டப்பிலும் வருகிறாராம். விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். மாஸ்டர் மகேந்திரனுக்கும் விஜய் சேதுபதி தான் வாய்ஸ் கொடுத்துள்ளாராம்.
புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி ப்ரம் நடுக்காவேரி படத்தின் முன்னோட்டம்.
அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கமலி ப்ரம் நடுக்காவேரி. இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதை தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.
மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடித்துள்ள ‘சடக் 2’ படத்தின் டிரெய்லர் ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு அரசியல் தான் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பின் கரண் ஜோகர், ஆலியா பட் உள்ளிட்ட வாரிசு நடிகர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்துள்ள ‘சடக் 2’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியானது முதல் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சுஷாந்த் ரசிகர்கள் இந்த டிரெய்லருக்கு டிஸ்லைக் செய்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் 19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் டிரெண்டாகி வந்தாலும், இதற்கு இதுவரை 6 மில்லியன் (60 லட்சம்) பார்வையாளர்கள் டிஸ்லைக் செய்துள்ளனர். 3 லட்சம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிக டிஸ்லைக் பெற்ற டிரெய்லர்கள் பட்டியலில் ‘சடக் 2’ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து அப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.
இந்தநிலையில் ஊரடங்கில் படப்பிடிப்புக்கு தளர்வுகளுடன் அரசு அனுமதித்தாலும் ஆயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் நிலைமை சீராகும் வரை இப்படத்தை தள்ளிவைக்க சுந்தர் சி, முடிவுசெய்து விட்டாராம். மேலும் தற்போது லாக்டவுனில் குறைவான கதாபாத்திரங்களை வைத்து அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துள்ளாராம் சுந்தர் சி, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை தான் முதலில் துவங்க இருக்கிறாராம்.
விஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்சை டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்னும் மரம் நடும் சவாலை நடிகர் விஜய்க்கு விடுத்தார். இந்த சவாலை ஏற்ற நடிகர் விஜய், மரம் நட்டு அசத்திய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
அன்றைய தினத்தில் தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சுமார் 1000 மரக் கன்றுகளை நட்டிருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.

தன்னுடைய பிறந்த நாளில் இந்த நிகழ்வு நடந்தது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாக இருப்பதாகவும், தான் நினைத்ததை அவர் செய்ததால், அதனை டெலிபதி போல் உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்
கொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனர் ராஜமவுலி, தனது குடும்பத்தினருடன் பிளாஸ்மா தானம் செய்ய திட்டமிட்டு உள்ளாராம்.
பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலி தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியானது.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, “2 வார தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறியும் இல்லை. பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா? என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை மூன்று வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் மாதவனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத். இவர் தற்போது கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நிஷிகாந்த் காமத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.






