என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்று நடிகர் சௌந்தரராஜா கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.

    இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கொரோனா ஊரடங்களில் அவதிப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சவுந்தரராஜா, தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.

    இவ்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருந்தார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது. 

    சௌந்தரராஜா

    சென்னையில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சௌந்தரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சேர்மன் தேவ் ஆனந்த், நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி, நடிகர் பிளாக் பாண்டி, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் உறவுகள், நண்பர்கள், மற்றும் சௌந்தரராஜாவின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

    இதன் பின் சௌந்தரராஜா பேசும்போது, ‘மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நண்பர்கள், உறவுகள் அனைவரும் தமிழகம் முழுவதும் பருவ மழைக்காலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிப்பதை ஒரு சவாலாக எடுத்து இருக்கிறோம். முதல் நாளான இன்று மனைவி, குடும்பத்தினருடன் தொடங்கி இருக்கிறேன். எப்போதும் ஒரு இடத்தை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடுவேன். ஆனால், இந்த முறை நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோர் என்னுடன் சேர்ந்து பயணிப்பதாக கூறினார்கள். 350 பேர் கொண்ட குழு இன்று செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம். 

    சௌந்தரராஜா

    கொரோனா காலத்தில் இயற்கை ரொம்ப முக்கியம் என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகள் வந்தால் கூட, இயற்கையின் முக்கியத்துவத்தை தெரியாமல், பாதுகாக்காமல் விட்டு விடுகிறோம். மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விடுகிறோம். விவசாயம், பசுமையில்தான் ஒரு புரட்சி நடக்க வேண்டும். அதன்மூலமாகதான் நாடு வல்லரசாக வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் பட்டினி என்று ஒருவரும் இருக்க கூடாது என்பதே மிகப்பெரிய வளர்ச்சி வல்லரசு என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் அதை பின்பற்றுங்கள். இந்த மண்ணையும் மக்களையும் காப்போம்’ என்றார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார்.
    சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.

    இந்த சேலஞ்சை பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்கள் செய்தனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபுவும் இந்த சேலஞ்சை செய்தார். மேலும் இந்த சவாலை செய்யுமாறு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், நடிகை சுருதிஹாசன் ஆகியோரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மகேஷ் பாபுவின் சவாலை விஜய் ஏற்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    விஜய்

    இந்நிலையில் நடிகர் விஜய், மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரம் நட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் மகேஷ்பாபு இது உங்களுக்காக என்று பதிவு செய்திருக்கிறார்.


    இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

    பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாத செல்வராகவன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

    தற்போது கேள்வி - பதில் வடிவில் தற்போது ட்வீட் செய்திருக்கிறார் செல்வராகவன். அந்த பதிவில், “கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

    செல்வராகவன் பதிவு

    நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன். அல்லது... காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்” என்று செல்வராகவன் கூறியுள்ளார்.
    கேரளாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
    நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான பின்னர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    இதேபோன்று கடந்த வெள்ளி கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்தது.

    இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.
    இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.

    விபத்து நிகழ்ந்தவுடனே உள்ளூா் பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர். கொரோனா பீதி, மோசமான வானிலை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால்தான் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்தபோதிலும், உயிரிழப்பு குறைவாக இருந்தது.

    சூர்யா பதிவு

    இந்நிலையில் மலப்புரம் மக்களுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மலப்புரம் மக்களுக்கு சல்யூட். விமானிகளுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    சூர்யா படம் குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்ததால், அப்படம் திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
    தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் சூர்யாவின் 24 படத்தை இயக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மக்கள் பொழுதுபோக்குக்காக ஓடிடி தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் புது படங்கள் மட்டுமின்றி, பழைய படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

    24 படத்தின் போஸ்டர்

    அந்த வகையில் சூர்யாவின் 24 படத்தை ஓடிடியில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், வெளியிடப்பட்டதில் இருந்தே படத்தை தேடிப் பார்ப்பதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அப்படத்தின் ஆடியோ குவாலிட்டி சரியாக இல்லை என்றும் பயனர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 24 படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்துவிட்டு படத்தை மீண்டும் ஓடிடியில் பதிவேற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டை நாய் படத்தின் முன்னோட்டம்.
    தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய்’. ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடித்துள்ளார். மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 

    படம் குறித்து இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது: "படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது.

    ஆர்.கே.சுரேஷ்

    அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை என கூறியுள்ளார்
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன், ராசி இல்லாத நடிகை என்று தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் ஆரம்பத்தில் தமிழ், மலையாள படங்களில் நடிக்கவே வாய்ப்பு தேடினார். ஆனால் அவரை ராசியில்லாதவர் என்று ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். 

    இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது: “நான் முதன்முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அதில் நடித்துக்கொண்டு இருந்தபோதே எனக்கு எட்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் மோகன்லால் படம் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து இருந்தவர்கள் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினர். 

    வித்யாபாலன்

    எனக்கு பதில் வேறு நடிகைகளை நடிக்க வைத்தார்கள். அதன்பிறகு தமிழில் ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்தும் நீக்கி விட்டனர். இதனால் மனம் உடைந்து போனேன். ஆத்திரம் வந்தது. யாரும் எனக்கு உதவவில்லை. தியானம், பிரார்த்தனை மூலம் அதில் இருந்து மீள முயன்றேன். இந்தியில் பரீனிதா படத்தில் நடித்த பிறகுதான் எனது வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
    பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.

    'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற திரைப்படத்தில் 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?' என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றார். ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளையும் .பி.கே. முத்துசாமி இயற்றியுள்ளார்.

    இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பி.கே. முத்துசாமி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். 

    நடிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா  நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து சூர்யா பதிவிட்டுள்ளதாவது: “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” என கூறியுள்ளார்.
    மேலும் கடந்த 2018-ம் ஆண்டு தான் பதிவிட்ட  “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்ற டுவிட்டையும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சூர்யா சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
    சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் ராணாவுக்கு, நடிகர் விஷ்ணு விஷால் கிண்டலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, தனது காதலி மஹீகா பஜாஜை கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவரது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விஷ்ணு விஷாலின் டுவிட்டர் பதிவு

    அந்த வகையில் ராணாவுடன் காடன் படத்தில் இணைந்து நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் கிண்டலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: “ஒருத்தர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்வதைப் பற்றி எல்லாம் நினைக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த போட்டோவில் இருப்பது, அந்த யாரோ ஒருத்தர் மாதிரி இருக்கிறதே என்று கூறி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் ராணா, சில ஆண்டுகள் கடந்துவிட்டதே, நன்றி பிரதர் என்று கூறியுள்ளார்.
    சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நகலெடுக்க முடியாத உடல்மொழி. சூரிய சுறுசுறுப்பு. கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம். 45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தைத் தக்க வைத்த தந்திரம். இரண்டுமணி நேரத் தனிமைப்பேச்சிலும் அரசியலுக்குப் பிடி கொடுக்காத பிடிவாதம். இவையெல்லாம் ரஜினி; வியப்பின் கலைக்குறியீடு” என்று கூறியுள்ளார்.

    நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், “5 பத்தாண்டு சாதனைகள். 45 வருடங்கள். இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு கொடுத்துள்ள பங்களிப்பு அளப்பரியது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

    பிரபலங்கள்

    நடிகர் பிரிதிவிராஜ், “சினிமாவில் 45 ஆண்டுகள். தமிழ் சினிமாவுக்கு மட்டுமன்றி இந்திய சினிமாவுக்கே ரஜினி ஒரு அடையாளம்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் விவேக், “45 வருட கலைப்பயணம் !! எவ்வளவு அனுபவங்கள் ! சாதனைகள்! சோதனைகள்! படிப்பினைகள் !! நீங்கள் ஒரு அசாத்தியம் ரஜினி சார்” என தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன், “என்றுமே ராஜா நீ ரஜினி, கடவுள் ஆசிர்வாததுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடனும், எப்போதும் புகழுடனும் வாழ வாழ்த்துகிறேன் தலைவா” என பதிவிட்டுள்ளார்.
    தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்த், அவர்கள் காதலர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.
    பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல்... இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும், பிரியா ஆனந்துக்கும், கவுதம் கார்த்திக்கும் காதல்... இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

    அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் சொல்கிறார்:-

    கவுதம் கார்த்திக் - அதர்வா

    “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்றார்.
    ×