என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதனிடையே, தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், குயின் இணையதள தொடரையும் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், கவுதம் மேனன் தனது இணையதள தொடரில் தீபா குறித்து எந்த கதாபாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குயின் தொடருக்கு தடை விதிக்க முடியாது. தலைவி படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனை கதாபாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
பிகில் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லி.
அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்” படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கடல் அலைகளுடன் மோதி விளையாடும் சர்ஃப் பயிற்சி எடுத்து வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இப்படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை
தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி கற்று வருகிறார். கடல் அலைகளுடன் மோதி விளையாடும் இவரைப் பார்த்து இன்னும் சில பெண்கள் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி மீண்டும் ஒரு வதந்தி பரவி வந்ததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.
இப்படம் ஏப்ரம் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், மாஸ்டர் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.

இதை படக்குழுவினர் மறுத்தனர். மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், தியேட்டர்கள் திறக்க இன்னும் காலம் ஆகும் என்று கூறி, மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று மீண்டும் செய்திகள் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது மீண்டும் விளக்கம் அளித்த படக்குழுவினர் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.
மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.

ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ‘‘தமிழ் சினிமாவில் கலெக்ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு... எப்போது மக்கள் இயக்க அரசியல்...’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாசரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக நடித்து கொடுப்பவர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய தனித்திறமையால் ஸ்கோர் செய்துவிட்டு செல்வார்.

பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

எதிர்நாயகன் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில் ஆளே மாறி போய், புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் அமீர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது. நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது. உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.
உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்று காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள். என்று கூறியிருக்கிறார்.
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் வித்யூத் ஜாம்வால், அவரை போல் ஒருவரை விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.
விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார்.

இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகை அடா சர்மா பற்றி கூறும்போது, “எனக்கு அவர் தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், “நான் காதலில் இருக்கிறேன். இப்போதுதான் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து வித்யூத் ஜாம்வால் காதலிக்கும் பெண் நடிகை அடா சர்மாதான் என்றும், காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் இந்தி பட உலகில் பேசப்படுகிறது.
அடா சர்மா தமிழில் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
அமலாபால் கணவராக நடித்த நடிகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த திரைப்படம் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்த திரைப்படத்தில் அமலாபாலின் கணவராக பிரபல பாலிவுட் நடிகர் அஃப்தாப் என்பவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை அடுத்து கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டதாகவும் துரதிஷ்டவசமாக தனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர் பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.

இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






