என் மலர்
சினிமா செய்திகள்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகத்திறமை கொண்ட சுந்தர் சி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் தயாரித்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சுந்தர் சி அடுத்ததாக ரீமேக் படத்தை தயாரிக்க உள்ளார்.

கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ‘மாயாபஜார் 2016’ படத்தின் தமிழ் ரீமேக் சுந்தர் சி தயாரிக்கிறார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் இயக்க உள்ளார். இதில் பிரசன்னா, ஷியாம், யோகி பாபு, அஸ்வின், ஸ்ருதி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த பூஜையில் சுந்தர் சி, நடிகர் பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்
காதலர்களான நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா சென்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக இருவரும் தனி விமானத்தில் கேரளாவுக்கு சென்றிருந்தனர்.

ஓணம் கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கோவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். வழக்கம் போல் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து மிக நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா சென்றிருக்கிறோம்,” என பதிவிட்டுள்ளார்.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியிருக்கிறார்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறியிருப்பதாவது: உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லாக்டவுனில் ஹீரோ குண்டானதால், அவர் மீண்டும் உடல் எடையை குறைக்கும் வரை படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.
தமிழ் பட உலகில் நீண்ட காலத்துக்குப்பின், முக்கோண காதல் கதையை கொண்டு தயாராகும் படம்‘காகிதப்பூக்கள்’. கதாநாயகனாக லோகன் அறிமுகமாகிறார். இன்னொரு கதாநாயகனாக பிரவீன்குமார் நடிக்கிறார். கதாநாயகி, பிரியதர்சினி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் முத்து மாணிக்கம்.
முதல்கட்ட படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், சுமார் 5 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தும் ‘காகிதப்பூக்கள்’ படக்குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.
காரணம் படத்தின் நாயகன் லோகன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் குண்டாகி விட்டாராம். அவர், பத்தே நாளில் உடல் எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்தகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறதாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சென்ராயன், தான் நடித்த படத்திற்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றதாக கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ‘ஆடுகளம்’, ‘மூடர் கூடம்’ என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தான் நடித்த படத்துக்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும அவர் கூறியதாவது: “பொல்லாதவன் படத்தில் நடிக்கும் போது நான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் 200 டிக்கெட்டுகளை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாங்கியிருந்தார்.
ஆனால் படம் ரிலீசாகும் தேதியன்று குடும்ப பிரச்சனை காரணமாக அவர் திடீரென ஆந்திரா செல்ல நேரிட்டதால், அந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் என்னிடம் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொள் என கூறிவிட்டு சென்றார்.

இதையடுத்து காசி தியேட்டருக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். எனக்கும் எனது நண்பர்களுக்கும் போக மீதி இருக்கும் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றேன். தான் நடித்த படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற ஒரே நடிகன் நானாக தான் இருப்பேன். அந்த பெருமை எனக்கு உண்டு” என்று சென்ராயன் கூறியுள்ளார்
சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ஒரு குட் நியூஸ் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 12ந் தேதி என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன். என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.
அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் 🙏❤️
— Actor Vadivelu (@VadiveluOffl) September 13, 2020
விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். pic.twitter.com/NBUVNSNJim
இவ்வளவுக்கும் மக்கள் சக்தி தான் காரணம். மக்கள் சக்தி இல்லைனா இந்த வடிவேலுவே கிடையாது. என் அம்மாவுக்கு பிறகு மக்கள் தான். மக்களால் தான் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம். ஏன் இன்னும் நடிக்காம இருக்காருன்னு.
சீக்கிரமே, மிகப்பெரிய, அருமையான எண்ட்ரியுடன் வருவேன். வாழ்க்கைனா எங்கிருந்தாலும் சைத்தான், சகுனின்னு இருக்கத் தான் செய்யும். அது எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாம இருக்குமா. அங்கங்க இரண்டு இருக்கத் தான் செய்யும் என கூறி உள்ளார். சீக்கிரமே வருவேன் என வடிவேலு கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால், தனுஷ் பட நடிகை அவதிப்பட்டு வருகிறாராம்.
தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரிச்சா கங்கோபத்யா. இவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பதற்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார். ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் நடைபெற்றது.
ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. அதனால் மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் போர்ட்லேண்ட் மேயர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

ரிச்சா இதன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார். காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் வெளியில் செல்லாமல் இருக்கிறார். மேலும் வீட்டுக்கு உள்ளும் புகை அதிகம் வருகிறது என்பதால் மூச்சுவிடுவதில் அதிகம் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
இது பற்றி டுவிட்டரில் ரிச்சா கூறி இருப்பதாவது: "காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன. நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.
இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் கூட ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பாடகி ஜோனிடா, டெல்லியில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். யூடியூப் மூலம் பிரபலமான ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கினார். அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சுச்சீ லீக்ஸ் பரபரப்பாக இருந்தபோது அனிருத், ஆண்ட்ரியா முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.
வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக, லாக்டவுனில் தொடர்ந்து 145 நாட்கள் ஏழைகளுக்கு உணவளித்து உதவி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.
இதில் வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 145 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள்.

144 தடை உத்தரவு போடப் பட்டதிலிருந்து தொடர்ந்து இந்த சேவை பணியை சூர்யா ரசிகர்கள் செய்து வருகிறார்கள். தொடர்ந்து 145 நாட்கள் பலருக்கு உதவி வந்த ரசிகர்கள் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இதை நிறைவு செய்துள்ளார்கள். இவர்களின் உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை, மருத்துவ பரிசோதனைக்காக கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்றுள்ளார்.
கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 4-ந் தேதி நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகினி, மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்து பரிசோதனைக்கு கொடுத்து ஏமாற்ற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யாரேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை சிறுநீர் மாதிரியை எடுத்து மருந்து பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பது சிறுநீரின் வெப்பநிலையை குறைக்கும், இது உடல் வெப்ப நிலைக்கு சமமாக இருக்கும்.
பின்னர் மீண்டும் ராகினியிடம் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார், போலீஸ் காவலில் நீட்டிப்பு கோரும் போது இந்த சம்பவம் மாஜிஸ்திரேட்டிடம் குறிப்பிட்டு காட்டப்படும் என்று அவர் கூறினார்.
அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் படத்தை பிரபல ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சைலன்ஸ் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளார்களாம். இப்படம் 5 மொழிகளில் உருவாகி உள்ளதால் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். அடுத்த மாதம் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் திருமணத்தை செப்டம்பர் 12-ந் தேதி நடத்துவது என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு செய்திருந்தனர். அதன்படி, மியா ஜார்ஜ் திருமணம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பசில்லா தேவாலயத்தில் நேற்று நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதன்பிறகு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.






