என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
    டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.

    எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார். 

    டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.

    புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.

    முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.

    அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.

    சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால்  அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

    சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

    விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.

    ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.

    ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். 

    ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.

    ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.

    இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.

    இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.

    ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.

    எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். 

    பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.

    ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.

    மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.

    அர்ஜூனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.

    டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.

    இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    மலர்விழி நடேசன் இயக்கத்தில் ஆனந்த் நாக், காதல் சுகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆனந்த் நாக், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால், அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.

    ஒரு கட்டத்தில் நாயகனும், அவனது நண்பனும் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்?, அவன் கண்மூடித்தனமாக நம்பும் ஜோசியம் அவனுக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திருவாளர் பஞ்சாங்கம்

    நாயகன் ஆனந்த் நாக், இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா என கேட்கும் அளவுக்கு சாமி பக்தி, ஜோசியம், நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்குறது என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேமம், நேரம், வெற்றிவேல் போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்தில் நடனம், சண்டை என ஹீரோ கேரக்டருக்கு தன்னால் முடிந்தவரை உழைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவுக்கு ஜோடி யாரும் இல்லை.

    ஹீரோவின் நண்பராக நடித்துள்ள காதல் சுகுமார், அவ்வப்போது காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஜோடி கொடுக்காத இயக்குனர், இவருக்கு ஹீரோயின் ரேஞ்சில் இருக்கும் ஒரு பெண்ணை ஜோடி சேர்த்துவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    திருவாளர் பஞ்சாங்கம்

    ஊர்வசி, சுதா, போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள கவுதம், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

    அறிமுக இயக்குனர் மலர்விழி நடேசன், முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை கையாண்டுள்ளார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். காட்சிகளின் நீளம் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காமெடி ஒர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். 

    திருவாளர் பஞ்சாங்கம்

    ஜேவி இசையமைத்துள்ளார். படத்தில் இரண்டே பாடல்கள் தான். அதுவும் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓகே. காசி விஸ்வாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ நல்ல முயற்சி.
    பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் - ராணா கூட்டணி பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் ராணாவும், பிரபாசும் இணைந்து நடிக்கவில்லை.

    பிரபாஸ், ராணா

    இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கும் படம் சலார். பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராணா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் மோகன் லாலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி சிவாஜி நலப்பேரவை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    தனுஷின் 41-வது படம் ‘கர்ணன்’. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

    இந்நிலையில் ‘கர்ணன்’ பட தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷூக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவாஜி நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்ணன் என்று சொன்னதும் நடிகர் திலகம் நடித்த திரைப்படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஏற்கனவே வெளிவந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்ப்பது நல்லது.

    மாரி செல்வராஜ், தனுஷ்

    ‘கர்ணன்’ என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான். உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன். அதனால் ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடும். எனவே படத்தின் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
    லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். 

    பூமி பட போஸ்டர்

    இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் டிராக்காக வெளியாகிய தமிழனென்று சொல்லடா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பூமி படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 14) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது ஜெயம் ரவியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

    அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.

    ரஜினிகாந்த்

    கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
    நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்தின் அபூர்வ புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினார். அவர் வெட்டிய கேக் விசே‌ஷமாக வடிவமைக்கப் பட்டு இருந்தது. அதில் ‘‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி குடும்பத் தினர் அனைவருக்கும் ரஜினி வழங்கினார்.

    ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விதம் விதமாக வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். அதில், ‘ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது தந்தையின் அபூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். பழமையான கார் ஒன்றின் அருகில் ரஜினி குர்தா அணிந்து அந்த படத்தில் காட்சி அளித்தார். இந்த கார் தான் ரஜினி வாங்கிய முதல் கார் ஆகும். இன்று ரஜினியிடம் பல நவீன சொகுசு கார்கள் இருந்தாலும் அந்த முதல் காரை இன்றும் அவர் பாதுகாத்து வருகிறார்.

    ஐஸ்வர்யா தனுஷ் பகிர்ந்த ரஜினியின் புகைப்படம்

    ரஜினி வந்த பாதையை மறக்காதவர். பழமையை என்றும் தனது நினைவில் கொண்டிருப்பவர். பழமை காலத்தில் தன்னோடு இருந்தவர்களை மதிப்பவர் என்பதை உணர்த்தும் வகையில் அந்த படம் அமைந்திருந்தது. ஐஸ்வர்யா வெளியிட்ட அந்த படத்தை பல்லாயிரக் கணக்கானோர் மறுபதிவாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
    சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சித்ரா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான படம் விரைவில் ரிலீசாக உள்ளதாம்.
    இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "கால்ஸ்" என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில்  படப்பிடிப்பு நடைபெற்றது.

    இந்த படத்தில் விஜே சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது. 

    இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட  திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி டிசம்பர் 13, பர்ஸ்ட் லுக் ரிலீஸ், ஜனவரி 1 (2021)  டிரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில்  திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. 

    கால்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் கதாநாயகி விஜே சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி  இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
    ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது. சுமார் 2 மாதம் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

    கங்கனா ரணாவத், ஜெயலலிதா

    இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி'யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாக கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். 'தலைவி' படக்குழுவினருக்கு மிக்க நன்றி". என அவர் பதிவிட்டுள்ளார்.
    'டைனோசர்ஸ்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட போனி கபூரிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.
    புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டைனோசர்ஸ்'. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று  ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.

    இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல  சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும்  முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.

    இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதேபோல் அவரது மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் 'டைனோசர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்ட தவிர மத்த எல்லா அப்டேட்டும் கொடுக்குறீங்களே, ஏன் எங்கள சோதிக்கிறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
    இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார்.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகளும் படமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்க உள்ளனர். இந்த பயோபிக்கை பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இவர், தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தை இயக்கி வருகிறார். 

    விஸ்வநாதன் ஆனந்த், ஆனந்த் எல் ராய்

    விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க உள்ளது. இதில் விஸ்வநாதன் ஆனந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். முதலில் அவர் சித்ரா-ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார்.
    பூந்தமல்லி:

    பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.

    இதனால் சித்ரா இறப்பதற்கு முன்பு என்ன மனநிலையில் இருந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் போலீசார் புலம்பி வருகிறார்கள்.

    சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    சித்ராவுக்கும் - ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் அடுத்த மாதம் தான் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து இருப்பதாக ஹேம்நாத் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே சித்ராவும் ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

    இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் இன்று 5-வது நாளாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதேபோல் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து சித்ராவின் உடலை எடுத்து சென்ற தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவரிடமும் இன்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இதில் ஏதாவது முக்கிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். முதலில் அவர் சித்ரா-ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார்.

    இதனால் சித்ராவின் தற்கொலை வழக்கில் விரைவில் மர்மங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×