என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர், புதிய படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
    பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

    'Production No8' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம்2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    பிரியா பவானி சங்கர்

    இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
    சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள்.
    இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் கைவசம் கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 ஆகிய படங்கள் உள்ளன. பிசியான நடிகராக வலம்வருகிறார்.  

    தற்போது அனிஸ் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிந்து மாதவி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு “பகைவனுக்கு அருள்வாய்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    வாணி, சசிகுமார், பிந்து மாதவி

    இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
    புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டைனோசர்ஸ்'. இவர் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளதாம். 

    இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று  ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவையாம்.

    இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல  சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும்  முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப்படத்தில் 130 பேர் நடித்துள்ளார்களாம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தையும் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

    அருண் விஜய் , சூர்யாவுடன் படக்குழுவினர்

    இந்நிலையில், சூர்யா தயாரிக்கும் 8-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராக உள்ளது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்க உள்ளார். இதில் கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும், மேகா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பல்வேறு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
    தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா, நயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் என கால்ஸ் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது நடிகர்- நடிகைகளையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டி.வி.தொடரில் மிகவும் பிரபலமாக விளங்கியதால் சித்ராவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. 

    அவர் ‘கால்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். கொரோனா பரவலுக்கு முன்பே இந்த படத்தில் சித்ரா நடித்து முடிந்துவிட்டார். இந்த படத்தை ஜெ.சபரிஷ் இயக்கி உள்ளார். ‘கால்ஸ்’ படத்தை கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். லாக்டவுன் போடப்பட்டதால் அது நடக்காமல் போனது. படம் வெளியாகும் முன்பே சித்ரா தற்கொலை செய்து கொண்டது படக்குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இது தொடர்பாக ‘கால்ஸ்’ படத்தின் இயக்குனர் சபரிஷ் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

    கால்ஸ் பட போஸ்டர்

    அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன். அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.

    இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை.

    படத்தின் படப்பிடிப்பின் போது சித்ரா மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். கடந்த மே மாதம் 2-ந்தேதி அவரது பிறந்த நாளின் போது டிரெய்லரை அவருக்கு அனுப்பினேன். மிகவும் நன்றாக இருப்பதாக கூறினார். ஆனால் ஒரே ஒரு வருத்தம் அவர் இன்னும் முழு படத்தையும் பார்க்க வில்லை.

    அவர் நடிகை நயன்தாராவை தனது முன் மாதிரியாக கருதினார். நயன்தாரா ஒரு படத்தில் அணிந்திருந்த உடையை போல உடை அணிய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் தற்கொலை செய்த போது படத்தில் அணிந்திருந்த நைட்டியை அணிந்திருந்தார். அந்த ஆடையை நாங்கள் தஞ்சாவூரில் இருந்து வாங்கி இருந்தோம். இது படத்தின் தொடக்க காட்சிக்கான ஆடை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
    3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
    தமிழில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் பி.கிருஷ்ணமூர்த்தி. அதன்பின் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’, பாரதிராஜாவின் ‘நாடோடி தென்றல்’, சுஹாசினியின் ‘இந்திரா’, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, பாலாவின் ‘நான் கடவுள்’உள்பட பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

    இவர் தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். அவற்றில் சிறந்த கலை இயக்குனருக்காக 3 முறையும், சிறந்த ஆடை வடிவமைப்புக்காக 2 முறையும் வென்றுள்ளார். குறிப்பாக தமிழில் தேவையானி நடிப்பில் வெளியான பாரதி படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.

    பி கிருஷ்ணமூர்த்தி

    77 வயதாகும் இவர் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “கலைத் துறையில் என் கண்களில் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று. வாடி தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    இந்த வருடம் எந்த படத்தைப் பற்றி அதிக பதிவுகள் இடப்பட்டுள்ளன என்கிற பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது
    சமூக வலைதளமான டுவிட்டர், ஆண்டுதோறும் அதிகம் பேசப்பட்ட வி‌ஷயம் என்ன என்பது பற்றி சர்வே எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் எந்த படத்தைப் பற்றி டுவிட்டரில் அதிக பதிவுகள் இடப்பட்டுள்ளன என்கிற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    டாப் 10 படங்களின் பட்டியல்

    அதில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் முதலிடம் பிடித்துள்ளது. பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் அஜித்தின் ‘வலிமை’ படம் உள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று 5-வது இடத்திலும், ரஜினியின் தர்பார் 10-வது இடத்திலும் உள்ளது. 

    டாப் 10 நடிகர்களின் பட்டியல்

    அதேபோல் எந்த நடிகர், நடிகைகளைப் பற்றி அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ளது என்கிற பட்டியலையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர்களில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். நடிகர் சூர்யா 5-வது இடத்திலும், தனுஷ் 8-வது இடத்திலும் உள்ளனர். 

    டாப் 10 நடிகைகளின் பட்டியல்

    நடிகைகளில் கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ராஷ்மிகா 4வது இடத்திலும், தமன்னா 7வது இடத்திலும் உள்ளனர். ரகுல் பிரீத் சிங், சுருதி ஹாசன், திரிஷா ஆகியோர் முறையே 8, 9, 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
    சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் கைவசம் கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 ஆகிய படங்கள் உள்ளன. பிசியான நடிகராக வலம்வருகிறார்.  

    சசிகுமார், வாணி போஜன்

    இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியாகிய திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஷ் அடுத்ததாக இயக்கும் படத்தில் சசிகுமா ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இனியா, தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளாராம்.
    தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார். 

    இனியா

    இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    மீ டூ இயக்கம் தன்னை முத்த காட்சியில் இருந்து காப்பாற்றிய சம்பவம் குறித்து நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    நடிகை சாய் பல்லவி, பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. 

    யூடியூப்பில் அதிகமானோர் பார்த்து சாதனையும் நிகழ்த்தியது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். இவர் தற்போது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    சாய் பல்லவி

    இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றிய சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு படத்தின் இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து முத்தகாட்சியில் நடிக்குமாறு நிர்ப்பந்தம் கொடுத்தார். 

    உடனே அந்த படத்தின் கதாநாயகன் இயக்குனரை பார்த்து இந்த பிரச்சினையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை கேட்கவில்லை. மீ டூ என்னை தப்பிக்க வைத்தது” என்றார்.
    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்தை இளன் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் இளன் - ஹரிஷ் கல்யாண் - யுவன் ஆகியோர் புதிய படம் மூலம் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.  

    ஸ்டார் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள்

    ‘ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ரஜினியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ‘தளபதி’ படத்தின் ரஜினி போல் ஹரிஷ் கல்யாணின் தோற்றம் அமைந்திருந்தது. 

    இந்நிலையில், அப்படக்குழு செகண்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமல் போல் ஹரிஷ் கல்யாண் காட்சி அளிக்கிறார். இந்த போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    கொரோனாவை அலட்சியமாகக் கருத வேண்டாம் என்று சிகிச்சையில் குணமடைந்து திரும்பிய சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்குமார், நேற்று வீடு திரும்பினார். இதையடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 8 அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.

    உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயக்குமார், ரவிக்கிரண், சந்திரகாந்த் செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மை பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.

    சரத்குமார்

    மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்

    இருப்பினும், கொரோனா தொற்று உலகில் பல மக்களை தற்போதும் பாதித்து வருகிறது. கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×