என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    நடிகை சித்ராவின் தற்கொலை அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி.வி. தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய சித்ரா, நாடகத்தில் முல்லையாக மக்கள் மனங்களில் உலா வந்து உதிர்ந்துள்ளார்.

    நடிகை சித்ரா மே 2-ந்தேதி 1992-ம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது தாத்தா ராணுவத்தில் பணியாற்றியவர். சித்ராவின் அண்ணன் சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். சித்ரா உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

    எனினும் ஊடகத்துறை மீதான ஆர்வம் காரணமாக 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சி பணிக்கு சேர்ந்து தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

    பின்னர் இவர் மன்னன் மகள், சின்ன பாப்பா, பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி-2, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.

    தற்போது இவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மேலும் நடிகர்களின் உள்ளத்தில் உச்சத்தில் அமர்ந்தார்.

    இந்த நிலையில் சித்ரா ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மெண்டில் தங்கி இருந்தார்.

    அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் தான் ஹேம்நாத் தங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையே  அப்போது தான் காதல் மலர்ந்தது.

    இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரியில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர்கள் அக்டோபர் 19-ந் தேதியே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.

    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர் சேரன்.

    சேரன் டைரக்ஷனில் உருவான "பாரதி கண்ணம்மா'' படம் சம்பந்தப்பட்ட தனது அனுபவங்களை விஜயகுமார் பகிர்ந்து கொண்டார்:

    "டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் ïனிட்டில் இருந்தபோதே சேரனை எனக்குத் தெரியும். ரவிக்குமார் மாதிரியே இவரும் தயாரிப்புத்துறை நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருந்தார். ஒருநாள் என்னை சந்தித்த சேரன், "சார்! நான் ஒரு கதை தயார் செய்திருக்கிறேன். ஹென்றி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    இப்படிச் சொன்னதோடல்லாமல் புத்தக வடிவிலான கதை வசன பகுதியை கொடுத்து "இதுதான் சார் கதை! படித்துப் பார்த்து சொல்லுங்கள்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

    என் சினிமா அனுபவத்தில் இப்படி படம் இயக்கும் யாரும் கதையை காட்சியமைப்புகளுடன் புத்தகமாக தந்ததில்லை. ஆலிவுட்டில் வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம். இங்கே இப்படித் தந்து என்னை அசத்தியவர் சேரன்.

    கதை, காட்சியமைப்பு மட்டுமின்றி காட்சிகளை படமாக்க வேண்டிய டிராலி, மிட்ஷாட், குளோசப் ஷாட் என கேமரா நுணுக்கங்கள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலோட்டமாக புரட்டிப் பார்த்து இதை தெரிந்து கொண்ட நான், முழு ஸ்கிரிப்ட்டையும் படித்து விட்டு சொல்வதாக தெரிவித்தேன். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த அடுத்தடுத்த பணிகளில் அந்தக் கதையை படித்துப் பார்க்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

    ஆனால் மஞ்சுளா, அன்றிரவே அக்கதையைப் படித்துப் பார்த்திருக்கிறார். காலையில் படப்பிடிப்புக்கு நான் தயாரானபோது, "நேற்று ஒரு கதை கொடுத்தீங்களே! சூப்பர். அவசியம் நீங்கள் இதில் நடிக்கிறீர்கள்'' என்றார்.

    அன்றைய தினம் சேரன் என்னை சந்தித்தார். நான் அவரிடம், "சேரன்! எனக்கு முழுக்கதையையும் படிக்க நேரமில்லை. ஆனால் மஞ்சுளா படித்துப் பார்த்து `பிரமாதம்'னு சொன்னாங்க. உங்க படத்தில் நான் நடிக்கிறேன். படத்துக்கு ஹீரோ யார்னு முடிவு பண்ணிட்டீங்களா?'' என்று கேட்டேன்.

    பதிலுக்கு சேரன் என்னிடம், "சார்! ஹீரோதான் இன்னும் முடிவாகாமல் இருக்குது! படத்தில் நீங்க அப்பா கேரக்டரிலும் உங்கள் மகன் அருண் ஹீரோவாகவும் பண்ணினால் நன்றாக இருக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "ஒண்ணு ஹீரோவா அருண் பண்ணட்டும். இல்லேன்னா அந்த `பவர்புல்' அப்பா கேரக்டரில் நான் பண்றேன். நானும் அருணும் சேர்ந்து பண்ணினா சரி வராது. யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணிடுங்க'' என்றேன்.

    நடிகர் கார்த்திக் என் நண்பர். அவர் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் சேரனிடம் "கார்த்திக்கை கேட்கலாமா?'' என்று கேட்டேன்.

    சேரன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. கார்த்திக் நடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும் சார்'' என்றார்.

    அப்போதே நான் கார்த்திக்குக்கு போன் போட்டு பேசினேன். "நீங்களே படம் பற்றி இப்படிச் சொல்றதால நான் கதை கூட கேட்கப் போறதில்லை. சேரனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க'' என்றார், கார்த்திக்.

    உடனே போய் கார்த்திக்கை சந்தித்தார் சேரன். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் அப்போது பிசியாக இருந்ததால் `கால்ஷீட்' தேதிகளை ஒரு வருடம் கழித்து தருகிறேன்'' என்று சொன்னார்.

    ஆனால், அதுவரை முடியாத நிலையில் சேரன் இருந்தார். அடுத்தடுத்து சில ஹீரோக்களை சந்தித்து கதை சொல்வதும் கால்ஷீட் கேட்பதுமாக இருந்தார். எந்த ஹீரோவும் முடிவாகாத நிலையில், மறுபடியும் சேரன் என்னை சந்தித்தபோது, "பார்த்திபன் சார் நடித்தால் எப்படி இருக்கும்?'' என்று கேட்டேன்.

    "பிரமாதமாய் இருக்கும் சார்! ஆனால் அவரோ சொந்தமாகப் படம் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். என் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா?'' என்று கேட்டார்.

    நான் பார்த்திபனின் ஆபீசுக்கு போன் செய்தேன். அவர் டெல்லிக்குப் போயிருப்பதாக சொன்னார்கள். குறிப்பிட்ட ஓட்டலின் பெயரை சொல்லி, இரவு 8 மணிக்கு மேல் தொடர்பு கொண்டால் பார்த்திபனிடம் பேசமுடியும் என்றும் சொன்னார்கள்.

    அப்படியே செய்தேன். பார்த்திபன் பேசினார். நான் அவரிடம் "சேரன்னு புது டைரக்டர் அருமையான ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். நீங்க ஹீரோவா நடித்தால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    "நீங்களே சொல்றீங்க! அதனால, நான் கதை பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம்'' என்றார், பார்த்திபன்.

    பார்த்திபன் சம்மதம் சொன்னதும், என் கைகளை பிடித்துக்கொண்ட சேரன், "சார்! நீங்க எனக்கு `லைப்' கொடுத்திருக்கீங்க'' என்று சொல்லி நெகிழ்ந்தார்.

    படப்பிடிப்பு தொடங்கியது. என் கால்ஷீட்50 நாட்களுக்கு தேவை என்றார் சேரன். அப்படியானால் சம்பளம் அதிகமாகுமே என்றேன். மஞ்சுளாவோ "இந்தப் படத்துக்கு நீங்கள் சம்பளமே பேசக்கூடாது'' என்று கண்டிஷனாக சொல்லி விட்டதால், சேரன் கேட்ட தேதிகளை கொடுத்தேன்.

    படம் முடிந்து திரைக்கு வரவேண்டிய நேரத்தில் ஒரு பிரச்சினை. படத்தின் முடிவு சோகப் பின்னணியைக் கொண்டது என்பதால் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கிளைமாக்சை மாற்றவேண்டும் என்று சேரனிடம் கேட்டுக்கொண்டார்கள். கிளைமாக்சை மாற்ற மனதில்லாவிட்டாலும் தனது முதல் படத்துக்கு முட்டுக்கட்டை விழுந்து விடக்கூடாது என்று சேரனும் சம்மதித்தார்.

    படம் முடிந்த நிலையில் ஒரு நாள் என்னிடம் "சார்! கிளைமாக்சை மாற்ற வேண்டியிருக்கிறது. அதனால் இன்னும் சில நாள் கால்ஷீட் வேண்டும்'' என்றார்.

    நான் அவரிடம், "உங்கள் கதைக்கு இந்த கிளைமாக்ஸ்தான் சரியாக இருக்கும். எனவே, கிளைமாக்சை மாற்றும் பொருட்டு நீங்கள் கேட்கிற தேதிகளை நான் தருவதற்கில்லை. ஒரு நல்ல படத்தை கெடுக்க நான் உதவமாட்டேன்'' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.

    பாரதி கண்ணம்மா `கிளைமாக்ஸ்' மாற்றப்படாமல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சேரனும் பிரபல இயக்குனர் அந்தஸ்தை பெற்றார்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் பாம்பாட்டம் படத்தின் முன்னோட்டம்.
    ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம்“.

    நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

    முக்கியமான இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், பாடல்கள் - பா.விஜய், யுகபாரதி, விவேகா, எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை - C.பழனிவேல், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – தினேஷ், சிவசங்கர், இணை தயாரிப்பு - பண்ணை A இளங்கோவன், தயாரிப்பு - V.பழனிவேல், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி தற்போது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்ததினால், தமிழ் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

    தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமான இவர் படங்களிலும் நடன திறமையை நன்றாக காட்டக்கூடியவர். அதற்கு உதாரணமாக மாரி 2 வில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அமைந்தது. சாய் பல்லவி, தற்போது மலையாள திரை உலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கு உள்ள வேறுபாட்டை சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    சாய் பல்லவி

    அதன்படி மலையாளத் திரையுலகில் அனைவரையும் ஒரே மாதிரி சமமாக நடத்துகிறார்கள் என்றும் ஆனால் தெலுங்கு திரை உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அக்கறை காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தெலுங்கு திரை உலகில் பிறமொழி நடிகைகளுக்கு சமமான மரியாதை கொடுப்பதில்லை என்பது போன்ற ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடிகை ஒருவர் மயங்கி விழுந்து இருக்கிறார்.
    விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம். பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது. அப்போது விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வரும் மதுமிதா, ஒருநாள் படப்பிடிப்பின்போது விரதம் மேற்கொண்டிருக்கிறார். நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார். அன்றைய தினம் இரவு நேர படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் மதுமிதா.

    மதுமிதா

    பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கம் தெளிவிக்க, அதன்பிறகும் கூட, தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் மதுமிதா. தன்னால் படக்குழுவினருக்கு சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் 2 எலிமினேட்டில் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

    ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ரமேஷ் - நிஷா

    இந்நிலையில், இந்த வாரம் 2 பேர் எலிமினேட் செய்ய இருப்பதாக புரமோ வீடியோவில் கமல் கூறினார். தற்போது யார் எலிமினேட் ஆனார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இன்றைய (சனிக்கிழமை) நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், நாளை நிஷாவும் வெளியேற்றப்பட்டுள்ளதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நடிகர் சங்க தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார். நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு தேவையான நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்த போதிலும் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

    விஷால்

    விரைவில் எந்த தொகுதியில் விஷால் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லடசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இளையராஜா

    அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
    ‘தி டர்ட்டி பிக்சர்’ பட நடிகைகளில் ஒருவரான ஆர்யா பானர்ஜி தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை இந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். 

    2011-ம் ஆண்டு வெளியான அந்த சில்க் சுமிதா காதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வித்யாபாலன். அந்த திரைப்படத்தில் கதாநாயகியான வித்யாபாலனுடன் இணைந்து துணைகதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்யா பானர்ஜி.

    மேற்குவங்காளத்தை ஆர்யா பானர்ஜி சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ’லவ் செக்ஸ் அர் டோஹா’ என்ற இந்திபடத்திலும் நடத்து பிரபலமானார். இவர் மும்பையில் மாடலிங் துறையிலும் குறிப்பிடத்தக்க பிரபலமான நபராக இருந்து வந்தார். 

    33-வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள ஒரு அப்பாட்மெண்டில் தனியாக வசித்துவந்தார். அவர் தனது வீட்டு வேலைக்கு மட்டுமே 
    ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். 

    இந்நிலையில், வழக்கம்போல இன்றும் அந்த பணிப்பெண் வீட்டுவேலை செய்வதற்காக ஆர்யா பானர்ஜியின் வீட்டிற்கு வந்து வாசலில் இருந்த காலிங் பெல்லை அடித்துள்ளார். 

    ஆர்யா பானர்ஜி (

    ஆனால், ஆர்யா கதவை திறக்கவில்லை. உடனடியாக பானர்ஜியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார் செல்போன் அழைப்பையும் ஆர்யா எடுக்கவில்லை. பின்னர் கதவை வேகமாக தட்டிய அந்த பணிப்பெண்
    அக்கம்பக்கத்தினருக்கு அழைத்துள்ளார். அவர்களும் கதவை தட்டியுள்ளனர். ஆனால், ஆர்யா பானர்ஜி கதவை திறக்கவே இல்லை. 

    இதனால், சந்தேகமடைந்த பணிப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ஆர்யா பானர்ஜி குடியிருந்த அப்பாட்மெண்ட்டிற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். 

    அங்கு பூட்டிய வீட்டில் நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கையறையில் உயிரிழந்தநிலையில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உயிரிழந்த ஆர்யா பானர்ஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

    பிரேதபரிசோதனையின் முடிவிலேயே நடியை ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் நடிகையை கொலை செய்துள்ளனரா? என்ற முழுவிவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை ஆரியாவின் மரணம் குறித்து தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்தை இளன் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் இளன் - ஹரிஷ் கல்யாண் - யுவன் ஆகியோர் புதிய படம் மூலம் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.

    ஹரிஷ் கல்யாண்

    தற்போது இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். 'ஸ்டார்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், 'தளபதி' படத்தின் ரஜினி கெட்டப் போலவே இதன் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
    தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் செல்போன் ஆதாரங்கள், படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், கணவர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து 4-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.
    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார்? வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

    நடிகை சித்ரா கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல. கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர். ஆனால் பிரேத பரி சோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சித்ராவுக்கும், தொழில் அதிபர் ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இவை அனைத்தும் பெற்றோர் சம்மதத்துடனேயே நடந்துள்ளது.

    விரைவில் திருமண கோலம் காண இருந்த சித்ரா இப்படி ஒரு முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கும் அதில் இருந்து மீள முடியாத நிலைக்கும் சென்றிருக்கிறார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

    சித்ரா

    சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த துன்புறுத்தலே காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கணவர் ஹேம்நாத், சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும், அவர் தொடர்ந்து நடிக்கக்கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    திருமணமானவுடன் கணவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும் என சித்ராவின் தாயும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாறி மாறி இரு தரப்பில் இருந்தும் கொடுத்த டார்ச்சரின் காரணமாக சித்ரா நிம்மதி இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் ஷூட்டிங் முடிந்து நள்ளிரவில் காரில் கணவருடன் ஓட்டலுக்கு திரும்பி இருக்கிறார். அப்போதும் அவர்களுக்குள் இந்த பிரச்சினை எழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சித்ரா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இறப்பதற்கு முன்பு யார் யாரிடம் பேசி இருக்கிறார்? என்ன பேசி இருக்கிறார்? என்பதை அறிய போலீசார் முயற்சித்தனர். ஆனால் செல்போனில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

    இது போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏதோ காரணம் இருந்ததால்தான் தடயங்களை அழித்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள். எனவே செல்போன் பதிவுகளை மீட்டெடுக்க தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில் இன்று 4-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.
    படப்பிடிப்பில் நயன்தாராவை பார்க்க பொது மக்கள் குவிந்ததால் அந்த இடத்தில் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
    ‘நானும் ரவுடிதான்’ படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல 2 காதல்’ என்ற படத்தில் மீண்டும் நடிகர் விஜய்சேதுபதியும், நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். நடிகை சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

    சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

    படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவை நேரில் பார்க்க அப்பகுதியில் ஏராளமான வாலிபர்கள் உள்பட பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த படப்பிடிப்பிற்கு முறையான அனுமதி பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் நயன்தாராவை காண திரண்டிருந்த பொது மக்களை கட்டுப்படுத்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நயன்தாரா

    படக்குழு சார்பில் அங்கு தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களை தடுத்ததால் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    ×