என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஓட்டல் நடத்துவதில் விதி மீறியதாக வந்த புகாருக்கு நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவரை கவுரவித்து தெலுங்கானாவில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சோனுசூட்டுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜுகு பகுதியில் 6 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை சோனு சூட் அனுமதி இல்லாமல் ஓட்டலாக மாற்றி விட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டினர். போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “முறையான அனுமதி பெற்றுத்தான் ஓட்டல் நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை மும்பை மாநகராட்சியிடம் பெற்று இருக்கிறேன். மும்பை கடற்கரை ஆணையத்தில் ஒப்புதல் பெற விண்ணப்பித்து இருக்கிறேன்.

    சோனு சூட்

     கொரோனாவால் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. எந்த முறைகேடும் செய்யவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். அனுமதி கிடைக்காவிட்டால் மீண்டும் குடியிருப்பு பகுதியாக மாற்றி விடுவேன். மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்வேன்'' என்றார்.
    ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் மோகன்லால், மம்முட்டியை நேரில் சந்தித்து இருக்கிறார்.
    மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு. மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்கள் வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

    மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர். அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர். 

    மம்மூட்டி - மோகன்லால்

    ஆனால் மம்முட்டி, மோகன்லால் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில் மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.



    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு "பொன்னியன் செல்வன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதற்கிடையில் வேறு எங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    பொன்னியின் செல்வன்

    மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    டாவின்சி சரவணன் இயக்கத்தில் ராகவ், லூதியா நடிப்பில் வெளியாகியிருக்கும் வி படத்தின் விமர்சனம்.
    வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள். இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

    இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது.

    விமர்சனம்

    இறுதியில் அந்த ஆப் - பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சின்னத்திரையில் நடித்து வந்த ராகவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் லூதியா மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். அடுத்தடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதனால் நடக்கும் என்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பைக் ஓட்டும் காட்சியே அதிகம் இருப்பதால் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் உள்ள பலவீனம் இரண்டாம்பாதியில் பலமாக அமைந்துள்ளது.

    இளங்கோ கலைவாணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனில் கே சாமியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் 'வி' வித்தியாசம்.
    தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் ஆத்மிகா தனக்காக டூப் போட்டவரை பாராட்டி பரிசளித்து இருக்கிறார்.
    நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். தற்போது புத்தாண்டை முன்னிட்டு ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவான நரகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா. ஆனால், அந்த படம் தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக இன்னமும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் ரிலீசாகவுள்ள கண்ணை நம்பாதே படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

    ஆத்மிகா

    இப்போது விஜய் ஆண்டனியுடன் `கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். அதில் சண்டைக்காட்சி ஒன்றில், தனக்காக டூப் போட்டவரைப் பார்த்து பிரமித்து, பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவரைப் பாராட்டி இருக்கிறார்.
    பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயாவின் லிப்-லாக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா. இவர் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

    இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது கணவருக்கு அவர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

    ஸ்ரேயா

    இதையடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, கிண்டலாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். 'போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்' என்று சிலர் கூறியுள்ளனர். சிலர், ஏன் இப்படி? சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கறதில்லையா? கொரோனா இன்னும் போகலையே? என்று கேட்டுள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

    இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் இப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.

    நெஞ்சம் மறப்பதில்லை

    இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தில் நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. 

    இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

    சிம்பு

    இந்நிலையில் இப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்பு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
    தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 50 சதவிகித இருக்கை அனுமதியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

    கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. 

    திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர், நீதிமன்றம் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில், பல்வேறு தரப்பு விமர்சனங்களுக்கு பிறகு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வழங்கிய உத்தரவில் இருந்து தமிழக அரசு இன்று பின்வாங்கியுள்ளது.

    100 சதவிகித இருக்கை அனுமதி தொடர்பாக பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இன்று திரும்பப்பெற்றது. இதன் மூலம் மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட உள்ளது. 

    50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    * தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி 

    * 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது

    *மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    * உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி  

    * முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் 

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு நடிகர் சாந்தனு இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    சாந்தனு - அனிருத்

    ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற விழாவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு நடிகர் சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத்தும் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்கள்.
    பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இதில், தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைத்தளத்தில் கூறி இருக்கிறார்.

     அதில், இப்போ நான் பேசப்போறது ஒரு delicate-ஆன விஷயம். இருந்தாலும் பலர் மனசில் இது இருக்குறனால, இதைப்பற்றி பலர் கிண்டலாகவும் பேசுறனால நான் அதை எழுதுறேன். போட்டியாளர்கள் தங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வது பற்றி. ஆண்-பெண் அணைப்பைப் பற்றிதான்! 

    நான் வளர்ந்ததும் இந்தக் கலாச்சாரத்தில்தான்! அதீத அன்பு, பாசம், மகிழ்ச்சி, பெருமிதம், உற்சாகம், நீண்ட நாள் பிரிவு என பல காரணங்களுக்கு நம்மையறியாமல் நாம் நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் வெளிப்படுத்தும் ஒரு உடல்மொழி. இதில் ஒன்றும் தவறில்லை.

    என் அம்மா எங்கள் சின்ன வயதில் எங்களிடம் சொல்லியது நினைவிருக்கிறது. அக்காவானாலும், ஒரு வயதுக்குப் பிறகு தொட்டுப் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பார். அது பழையகாலத்துப் பண்பாடு என்று புரிந்துகொண்டாலும், அதில் ஒரு வரைமுறை இருந்தது என்பதை இப்போது விளங்கிக்கொள்கிறேன். 

    இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

    ஒரு ஆண் பெண்ணை அணைக்கும்போது ஒரு வரையறையுடன் அணைப்பது நாகரிகம். ஒரு வளர்ந்த ஆண், ஒரு பெண்ணை அணைக்கும்போது ஒரு லாவகம் வேண்டும். நேராக மார்போடு மார்பாக இறுக்கி அணைப்பது முறையல்ல. காதலி, மனைவியைத் தவிர.. அல்லது அதை அவளும் விரும்புகிறாள் எனும் பட்சத்தைத் தவிர.

    BB வீட்டில் இது கொஞ்சம் ஓவராகத்தான் நடந்தது/நடக்கிறது. சிலருக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் இல்லை. நாம் நல்லவர்கள்தான் என்றாலும் சமூகத்தில் பலவிதமானவரும் உண்டு. சிலர் மனதில் கொஞ்சம் வக்கிரம் கூட ஒளிந்திருக்கலாம். இதைப்போன்ற அணைப்புகளில் ஒரு திருட்டு வக்கிர சுகம், ஆழ்மனதின் ரசிப்பும் இருக்க வாய்ப்புண்டு. 

    இதைப்போன்ற சூழ்நிலைகளில் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். பெண்களிடம் கேட்டுப்பாருங்கள். தவறான உள்நோக்கத்துடன் அணைப்பவர்களை அவர்கள் உடனே கண்டுகொள்வார்கள். அந்த அணைப்பில் அது தெரிந்துவிடும். அதை விரும்புவதோ, தவிர்ப்பதோ ஒவ்வொருவரின் இஷ்டம். 

    இப்போது இந்த நிகழ்ச்சியின் எல்லாப் பழைய எபிசோட்களையும் போட்டு ஒவ்வொருவரின் நடத்தையையும் பாருங்கள். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதில் ஆரி எப்போதோ ஒருமுறை சிலரை அணைத்த விதத்தையும் பாருங்கள்!

    இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
    ×