என் மலர்
சினிமா செய்திகள்
தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், அவர் அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்து பலரைக் கவர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது,
‘ஒவ்வொரு நடிகருக்குமே தனிப் பாணி உள்ளது என நினைக்கிறேன். விஜய்யைப் பொறுத்தவரை அவர் எப்படித் தயார் செய்து கொள்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவரது ஒழுக்கம் வியக்க வைத்தது. நட்சத்திரங்கள் திரையில் நடிக்கும்போது எப்படி இதை எளிதாகச் செய்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், உண்மையில் அதற்காக நிறைய யோசனைகளும், ஆய்வும் நடக்கின்றன.

பல பக்க வசனங்களைப் படித்து அதை ஒரே டேக்கில் பேசி முடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டி விஜய்யுடன் தொழில்முறையில் பணியாற்றியது உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ், சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இதற்காக வள்ளுவர் கோட்டத்தில் ஒரு போராட்டம் நடந்தது. இதில் ரஜினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு சில குழுவினர் சொற்களால் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும் சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன்.
காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினீர்கள். இயக்குநர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்டை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர் நான் தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இன்று இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். தலைவரின் முடிவால் நீங்கள் அனைவரும் கொண்ட வேதனையையே நானும் எதிர்கொள்கிறேன்.

தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால் நான் அவரிடம் முடிவை மாற்றிக் கொள்ள கெஞ்சியிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டாரே. இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரும் மாறி பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாளுக்கும் நாம் குற்ற உணர்வோடு அல்லவா இருக்க வேண்டும். அரசியலில் பிரவேசிக்காவிட்டாலும் அவர் என்றுமே எனது குரு தான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல் நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மாஸ்டர் குறித்து கூறுகையில், "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் பார்த்து ரசித்தேன். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யின் மாஸ்டர் பீஸாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார் விஜய்.

இந்த மாதிரியான ஒரு கதையை விஜய்க்கு கொடுத்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி. திரைக்கதை அமைப்பது தொடங்கி நடிகர்கள் தேர்வு வரை மிகச்சரியாக கையாண்டிருக்கிறார் லோகேஷ். குறிப்பாக விஜய் சேதுபதி வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்றார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
'யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். 'முகவரி', 'காதல் சடு குடு', 'தொட்டி ஜெயா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.
இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.." என்ற பாடலை பாடியிருக்கிறார்.

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருவதாகவும், ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.
இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறியதாவது: “நான் இதற்கு முன்பு இயக்கிய ‘வாட்டாக்குடி இரண்யன்’ படம், மனிதனே மனித இனத்துக்கு துரோகம் செய்வதை பேசியது. வனத்தையும், வனவிலங்குகளையும் அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை சொல்ல வருகிறது, ‘வேட்டையன்’. படம் கேரளாவின் மலையட்டூர், இல்லித்தோடு, முக்கம் பகுதிகளில் வளர்ந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில், சில முக்கிய காட்சிகள் படமாக்கபட்டன”.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார். கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின், பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி, ரியோ ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வழங்கும் தொகையை வாங்கிக் கொண்டு வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.
மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்தார். படம் முடிந்த பின் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது: தியேட்டருக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எல்லா துறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அதிலும் சினிமா துறை ரொம்பவும் பாதிக்கப்பட்டது.
தற்போது விஜய், சிம்பு படம் மூலம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. அதிக நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. ஒரு காலகட்டத்தில் நாம் வெளியே வந்துதான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் அரசு கூறும் கொரோனா தடுப்பு விதிகளையும் ரசிகர்களும், பொதுமக்களும் இருக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ? அதே அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாஸ்டர் படம் மாஸ் ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈஸ்வரன் படம் வெற்றிபெற வேண்டி நடிகர் சிம்பு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது. இது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகும் 45வது படமாகும். நாளை ஈஸ்வரன் படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கவுதம் உள்ளிட்ட சிலருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காரில் கிரிவலம் சென்ற அவர் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற வித்தியாசமாக கட்டப்பட்ட இடுக்கில் நுழைந்து வெளியே வந்தார். அவர் ஈஸ்வரன் படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே திருவண்ணாமலை வந்துள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிம்பு சாமி தரிசனம் செய்தபோது அங்கு தரிசனம் செய்ய வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிம்புவை காண ஆர்வம் காட்டினர். அவர் சாமி தரிசனம் செய்ததும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2 மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும் ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்.






