என் மலர்
சினிமா செய்திகள்
வினோத் விஜயன் இயக்கத்தில் சாய் ராம் ஷங்கர், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகும் ‘மாரீசன்’ படத்தின் முன்னோட்டம்.
தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’. ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக சாய் ராம் ஷங்கர் நடிக்கும் இத்திரைப்படத்தில், நான்கு மர்மக் கொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும் அவர் எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை.

வினோத் விஜயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஓ மை பிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார்.
தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படத்தை இயக்குநர் வினோத் விஜயன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இந்த படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார். இவர் விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 5ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது.
நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் அவர் உடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர். இவர் நடிப்பை தவிர்த்து பைக் ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டவர்.

சமீபத்தில் நண்பர்களுடன் 10 ஆயிரம் கி.மீ. பைக் ட்ரிப் சென்ற அஜித், தற்போது சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். ஐதராபாத்தில் நண்பர்களுடன் அவர் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்துடன் சைக்கிளிங் சென்ற சுரேஷ் குமார் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘அஜித்துடன் இந்த 15 ஆண்டு கால சைக்கிள் பயணங்கள் மறக்கமுடியாதவை. அவருக்கு பிடித்த விளையாட்டுகளுள் சைக்கிளிங்கும் ஒன்று. பிசியான ஷூட்டிங்கிற்கு இடையிலும், ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் எங்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளிங் வந்துள்ளார் அஜித்.

ஐதராபாத், விசாகப்பட்டிணம், கூர்கு, கோவை, திருப்பதி என ஏராளமான இடங்களுக்கு சென்றிருக்கிறோம். அவரது கடின உழைப்பை கண்டு வியந்திருக்கிறேன். இதுவரை நாங்கள் 30 ஆயிரம் கி.மீ.க்கு மேல் சைக்கிளில் பயணித்திருக்கிறோம். வெளிநாடுகளில் இன்னும் பல ஆயிரம் தூரம் அவருடன் பயணிக்க வேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை நிரஞ்சனி - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது.
பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அவர்களது திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் பாலிவுட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடித்து வருகிறார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும்.
அதேபோல், அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன், அடுத்ததாக இயக்கும் புதிய இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது திரில்லர் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் புனேவில் தொடங்க உள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.
தான் எழுதிய பாடலுக்கு கவர் பாடலை உருவாக்கிய இளம் பாடகியை பாடலாசிரியர் வைரமுத்து நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற "புது வெள்ளை மழை" எனும் பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.
இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்ஷா சரணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறதாம். இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அதேபோல் ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்ன வேடமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் விஜய் சேதுபதி இதில் நடிக்க சம்மதித்துள்ளாராம். விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை 5 நாட்களில் எடுத்து முடிக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளாராம். தற்போது பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தலைவி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள, இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம்.
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். தெலுங்கு படங்களில் பிசியானதால் ஐதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்கிய ராஷ்மிகா, அங்கு தங்கி நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. ஏற்கனவே சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் அவருக்கு, மேலும் சில இந்தி பட வாய்ப்புகளும் வருகிறதாம். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம்.

நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இதுதவிர நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், அவர் சென்னையிலும் வீடு வாங்கி விடுவார் போல் தெரிகிறது.
தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து இயக்குனர் அஸ்வின் சரவணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் ஏற்கனவே நயன்தாரா நடித்த பேய் படமான மாயா, டாப்சி நடித்த கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 2018-ல் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் பண பிரச்சினையால் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து அஸ்வின் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி ஐடி உருவாக்கி, ஆள்மாறாட்டம் செய்து, பல பெண்களிடம் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்களை கேட்டு வருகின்றனர். அதில் யாரும் ஏமாற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் போலி கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டையும் இணைத்துள்ளார். அந்த கணக்கில் இருந்து ஒருவர் பெண்களிடம் நான் அதர்வாவை வைத்து படம் இயக்குகிறேன். விருப்பம் இருந்தால் உங்களை எனது படத்தில் நாயகி ஆக்குகிறேன்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.






