என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர்.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

    கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தவர்.

    கே.ஆர்.ராம்சிங், 1915-ல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால். தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவழியினர்.

    நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் "இன்டர் மீடியட்'' (தற்போதைய "பிளஸ்-2'') வரை படித்தார்.

    பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.

    தனது நடிப்பால், கணீரென்ற குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த "ஸ்ரீராமபால கான வினோத சபா'' என்ற நாடகக் கம்பெனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, "சட்டாம்பிள்ளை'' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

    கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

    நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

    1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

    தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

    டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

    ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

    கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

    பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

    1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

    இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

    சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

    பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

    இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

    ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

    அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

    இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

    பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

    பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

    குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.

    ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.

    இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும், ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' பட்டம் உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர், ராம்சிங்.
    சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன் என்று பிரபல பாலிவுட் நடிகை பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
    சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அதன்பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஈஷா தியோல், “சென்னை எப்போதுமே என் சொந்த ஊர்.. நான் சிறுவயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா வீட்டில் வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’ சாப்பிடுவதற்கு கிடைக்கிறது. நான் ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன். அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ஈஷா தியோல்

    குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் ரசிகையின் கூட.. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    ஈஷா தியோல்

    திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை” என்றார் ஈஷா தியோல்.
    நடிகர் அஜித்தின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்திய தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவரது திரைப்படம் வெளியாகும் போது தியேட்டர்களில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான தல பிரகாஷ் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

    இவரது மறைவு ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் #RIPThalaPRAKASH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

    பிரகாஷ்

    தல பிரகாஷ் சாதாரண அஜித் ரசிகர்கள் அல்ல, தனது உடல் முழுக்க அஜித் பெயரை மட்டுமே பச்சைக் குத்திக் கொண்டு எப்போதுமே அஜித் நினைவுகளுடனே வாழ்ந்து வந்த ஒரு இளைஞர். இவ்வளவு சிறு வயதில் என்ன பிரச்சனை காரணமாக இப்படியொரு முடிவை எடுத்தார் என்று தகவல் வெளியாகவில்லை. 
    திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டம் படத்தில் கவுதம் மேனனை தொடர்ந்து பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

    இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

    ராதாரவி

    சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ராதாரவி இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தனது காதலியுடம் மாலத்தீவு சென்றிருக்கிறார்.
    வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

    இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொள்ள உள்ளதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தினார்.

    விஷ்ணு விஷால்

    இந்நிலையில் மாலத்தீவுக்கு ஜுவாலா கட்டாவுடன் சென்றிருக்கும் விஷ்ணு விஷால் அங்கு எடுக்கப்பட்ட போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மழையில் நடனமாடுங்கள். அந்த நொடியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். வலியை புறந்தள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
    பிரபல நடிகை ஒருவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவரது அறைக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
    விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து வசந்தபாலனின் வெயில், பிரியதர்ஷனின் காஞ்சிவரம் உள்ளிட்ட கதைக்கும் தனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். கடைசியாக ‘அண்டாவ காணோம்’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. 

    தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.

    ஸ்ரேயா ரெட்டி

    இந்நிலையில் சமீபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த ஸ்ரேயா ரெட்டி அங்கு குரங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். முதல் வீடியோவில் ஸ்ரேயா தங்கியிருந்த வீட்டின் பால்கனிக்கு வந்த இரண்டு குரங்குகள் அங்கு டேபிளில் வைக்கப்பட்டிருந்த முந்திரி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுகின்றன. அடுத்த வீடியோவில் ஜன்னல் வழியாக அறைக்குள் புகுந்த குரங்குகள் அங்கிருந்த ஸ்ரேயாவின் பேக், உணவுகளை எடுத்து அட்டகாசம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


    பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தனுஷ் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன.  

    தற்போது ‘லூப் லாபெட்டா’, அனுராக் காஷ்யப்பின் ‘டூ-பாரா’ மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான சபாஷ் மித்து படத்திலும் நடித்து வருகிறார் டாப்சி. 

    டாப்சி

    இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் டாப்சி. பஞ்சாபிலிருந்து கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தவரின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படம் மூலம் நடிகை டாப்சி முதன்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இயக்குனர் சாமி இயக்கத்தில் மாஹின், டாவியா நடிப்பில் உருவாகி வரும் அக்கா குருவி படத்தின் முன்னோட்டம்.
    புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குனர் சாமி, அதனை தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

    அக்கா குருவி படக்குழு

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கில் நடிகை நதியாவும் நடிக்க உள்ளார்.
    மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

    ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

    இந்நிலையில், இப்படத்தில் நடிகை நதியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் வேடத்தில் நதியா நடிக்க உள்ளார்.

    நதியா, ஆஷா சரத்

    இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச் 5 படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது. தெலுங்கு பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீ பிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகி உள்ளாராம்.
    நடிகர் விக்ரம் நடிப்பில், சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருந்த படம் ‘மகாவீர் கர்ணா’. மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்கினார். மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்க சென்றதால், ‘மகாவீர் கர்ணா’  கிடப்பில் போடப்பட்டது.  

    விக்ரம்

    இந்நிலையில், அந்தப் படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகியதாக கூறப்படுகிறது. அதனால் வேறு நடிகரை வைத்து ‘சூர்யபுத்ரா மகாவீர் கர்ணா’ என்ற பெயரில் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
    தமிழில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள நடிகை சுரேகா வாணி, இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். 

    சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 

    சுரேகா வாணி

    இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறும்போது, “நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை. மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.’' என்றார்.
    மைனா, கும்கி, கயல் என பல்வேறு படங்களை இயக்கிய பிரபுசாலமன், தற்போது தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
    இயக்குனர்கள் நடிகர்களாவது தமிழ் சினிமாவில் தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் முன்னணி இயக்குனரான கவுதம் மேனன் பத்து தல, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் செல்வராகவனும் ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இயக்குனர் மகிழ் திருமேணியும் டெடி படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் இயக்குனர்கள் மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல் ஆகியோரும் சில படங்களில் நடித்துள்ளனர்.

    அழகிய கண்ணே படக்குழுவினருடன் பிரபு சாலமன்

    அந்த வரிசையில், மைனா, கும்கி, கயல் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் தற்போது நடிகராக அறிமுகமாக உள்ளார். அறிமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் அழகிய கண்ணே படத்தில் அவர் முதன்முதலாக நடிக்க உள்ளார். இப்படத்தில் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார்.
    ×