என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

    இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்தனர்.

    செல்வராகவன்

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் செல்வராகவனிடம், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிவி பிரகாஷா அல்லது யுவன் சங்கர் ராஜாவா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இருவருமே என் நண்பர்கள் தான், இருவரில் யார் பணியாற்ற உள்ளார்கள் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களின் பணிச்சுமையை பொருத்தது என தெரிவித்துள்ளார்.
    ‘சியான் 60’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அனிருத்துக்கு பதில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சியான் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜின் டுவிட்டர் பதிவு

    இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து படக்குழு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
    சாய் பல்லவியின் தங்கை பூஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பூஜா, சாய் பல்லவி

    இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பூஜா நடிக்கிறாராம். இதில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக அவர் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா, ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

    தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சாயிஷா

    இந்நிலையில், நடிகர் ஆர்யாவும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கும் ஜோதிகா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில இளம் இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.

    ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 12-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது.
    'தலைவி' படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய்

    அதில் “அன்புள்ள விஜய் சார், 'தலைவி' படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததே இல்லை.

    உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன்”. இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
    சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார்.
    டெல்லியின் சமயபூர் பத்லி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிளான சீமா தாகா, கடந்த வருடம், காணாமல் போன 76 குழந்தைகளை மூன்று மாதத்திற்குள் மீட்டார். இதனால் அவருக்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது. 

    சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். 20 வயதில் இருந்து காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் போலீஸ் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    சீமா தாகா

    இந்நிலையில், தற்போது சீமாவின் இந்தச் சாதனை பற்றிய புதிய வெப் தொடர் உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தற்போது இந்த வெப் தொடருக்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சீமா தாகா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் இணைய இருக்கிறார்.
    'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு 'சீயான் 60' என அழைத்து வருகிறார்கள். 'கோப்ரா' படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

    விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நீண்ட தேடலுக்குப் பிறகு தற்போது சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

    சிம்ரன் - விக்ரம்

    முன்னதாக 'பிதாமகன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன். அத்துடன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி, புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன.

    இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கும் “கோடியில் ஒருவன்” படத்திலும் நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது.

    விஜய் ஆண்டனி

    இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் படக்குழுவினர் இதற்கு சம்பளம் தர மறுத்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன். இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. நடிகர், இசையமைப்பாளர் என்று தன்னுடைய திறமைகளை நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் எடிட்டிங் திறமையையும் நிரூபிக்க இருக்கிறார். இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை’ என்றார்.
    தமிழில் மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா, பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். தற்போது இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். 

    அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

    விஜய் ஆண்டனி - ஆத்மிகா

    இந்நிலையில் இப்படம் குறித்து ஆத்மிகா கூறும்போது, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதை. விஜய் ஆண்டனி திறமையாக நடித்திருக்கிறார். அவர் ரியல் ஹீரோ. கொரோனா காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடனே முதல் ஆளாக படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று கூறினார். தன்னை நம்பி படக்குழுவினர் காத்திருப்பதை அறிந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குறியது’ என்றார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வெற்றிக்கு துணையாக இருப்பவர்கள் பற்றி கூறிருக்கிறார்.
    சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இவர் நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    குறிப்பாக அசோக் செல்வன், நித்யா மேனன், ரீதுவர்மா மூவரின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துவருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அசோக் செல்வன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்துக்கு முன்பு ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. அதுதான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணமாக அமைந்தது. 

    அசோக் செல்வன்

    என் வாழ்க்கையில் அம்மாவும் அக்காவும் என்னை செதுக்கியவர்கள். அம்மா மீது அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டோம். அம்மா என் மீது நம்பிக்கை வைத்தார். ஓ மை கடவுளே படத்தை தயாரித்து அக்கா என் வாழ்க்கையின் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமே அம்மாவும் அக்காவும் என் மீது வைத்த நம்பிக்கை தான். பெண்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வர காரணமே இவர்கள் தான்’. இவ்வாறு அவர் கூறினார்.
    மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
    “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது,

    வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக “கட்டில் திரைப்பட உருவாக்கம்" என்ற நூலை வெளியிடுகிறேன்.

    சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பை தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள். இந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் “கட்டில்” எப்படி உருவானது என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கம். கட்டிலில் பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் நிரம்பி வழிகிறது இந்த நூல்.

    கட்டில்

    சிருஷ்டிடாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி, 'காதல்' கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன்கார்க்கி பாடல் எழுத, சித்ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். விரைவில் கட்டில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இவ்வாறு கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.
    ×