என் மலர்
சினிமா செய்திகள்
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மார்ச் 26-ம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.
புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். 'டாக்டர்' படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு மதிப்புடைய படமாக 'டாக்டர்' இருக்கும்".
இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியாக படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, தன் மனைவியுடன் தோற்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் ‘பூமி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி ஆர்த்தி ரவியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனைவியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட ரவி அதை, செய்ய முடியாமல் தோற்கிறார். இந்த அழகான வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் "பெண்கள் எதையும் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்கள் வலுவான பெண்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சேலஞ்சுக்கு பெயர் கிராவிட்டி சேலஞ்ச் என்று பெயர். தற்போது இந்த சேலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீசாக இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.

விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார்.

கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.
படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப திகழும் தம்பி அஜித் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்”.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.
நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜுன் , அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த ஆந்தாலஜி படத்திலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளாராம். அவருக்கு பதிலாக பிரபல இயக்குனர் வசந்த் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இயக்குனர் வசந்த் இயக்கும் பகுதியில் அருவி பட நடிகை அதிதி பாலன் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற உள்ளதாம்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரன்பீர் கபூர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.
மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் ரன்பீர் கபூர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையும் எடுத்து வருகிறார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் அவரின் தாயார் நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூர், பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்தாண்டு திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த கதையில் விஷால் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் அந்த படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அப்படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த கதையில் விஷால் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், நடிகர் விஷால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நான் பணியாற்ற உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து து.ப. சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ள விஷால், துப்பறிவாளன் 2 படத்தையும் இயக்க உள்ளார். இதுதவிர இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கிலும் விஷால் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு.
2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகர் யோகிபாபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டிங் செய்யும் யோகிபாபு, பந்தை நாலாபுறமும் சிதறடிக்கிறார். சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசுகிறார். யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரின் திறமையை பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவிற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) March 8, 2021
ஞான ஆரோக்கிய ராஜா இயக்கியிருக்கும் ‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்ட டி.ராஜேந்தர், பாடல்களை கேட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக மட்டும் இன்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஞான ஆரோக்கிய ராஜா, அவரைப் போலவே பாடல்கள் எழுதி நல்ல திரைப்படத்தையும் இயக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.
அதன்படி, ‘உதிர்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, அனைத்து பாடல்களையும் எழுதிய அவர் படத்தை தயாரிக்கவும் செய்தார். அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பாடல் வரிகள் வீடியோவை டி.ராஜேந்தர் நேற்று வெளியிட்டதோடு, பாடல்களை கேட்டு, இயக்குநரும் பாடலாசிரியருமான ஞான ஆரோக்கிய ராஜாவை வெகுவாக பாராட்டி உள்ளார்.

பாடல்கள் குறித்து பேசிய டி.ராஜேந்தர், “‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படத்தின் பாடல்களை கேட்கும் போதே, கதை உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக இருந்தாலும், அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதால் ‘உதிர்’ படமும் பாடல்களும் ரசிகர்களின் உயிரோடு கலக்கும் என்பது நிச்சயம். ‘உதிர்’ படம் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமாகும் ஞான ஆரோக்கிய ராஜா, இந்த அனைத்து துறைகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகை ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ரோஜா, நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் ஆரவாரம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.
கபடி விளையாடிய நடிகை ரோஜா#Roja#Kabadipic.twitter.com/LfjJjAKOhi
— Sathish Maalaimalar (@SatthiEshwar) March 9, 2021
அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து நடிக்கும் படங்களின் கதை தேர்வில் கவனமாக இருக்கிறாராம் அனுஷ்கா.

அந்த வகையில் இவர் அடுத்ததாக காதலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க உள்ளாராம். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.






