என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
    ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

    நவாசுதீன் சித்திக், ஆலியா

    இதுகுறித்து ஆலியா கூறும்போது, “சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் தான் குழந்தைகளை பார்த்துக்கொண்டார். என்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார். நல்ல தந்தையாகவும், கணவனாகவும் அவர் இருந்தார். என்னிடம் அன்பாக இருக்கிறார். அப்போது அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என்றார்.
    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ஷாலு ஷம்மு.
    கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மீடூவால் பாதிக்கப்பட்டதாகவும், விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மீடூ புகாரை தெரிவித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் பதிவிட்டுள்ளதாவது: பெரிய நடிகரின் படத்தில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்துகொள்ள தவறினால், நடிகையின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் ஷாலு ஷம்மு குறிப்பிட்ட அந்த ‘பெரிய நடிகர்’ யார் என்பதே தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.
    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார்.
    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

    ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

    அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

    பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

    நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

    இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

    திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

    இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

    இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

    அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

    டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

    "கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

    கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

    "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

    சகுனத் தடைகள்

    திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

    கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

    குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

    "வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.

    "ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.

    "கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.

    "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.

    கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.

    அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

    "சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.

    வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

    "இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

    "கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

    "ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''

    "அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''

    என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.

    கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

    திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

    "ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

    "டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

    திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

    "எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''

    உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.

    1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

    திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

    நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.

    சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.

    அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.

    இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.
    தமிழில் ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்.
    ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தான் நடித்து நடனம் ஆடியுள்ள WhattheUff எனும் பாடலை வெளியிட்டுள்ளார்.

    நிவேதா பெத்துராஜ்

    கு.கார்த்திக் எழுதிய இந்த பாடலை ஹரிகா நாராயணன் பாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இந்த கான்செப்ட்டை எழுதி இயக்கியுள்ளார். இந்த பாடலில் நிவேதா பெத்துராஜின் நடனம் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
    பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது பத்தாவது ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
    தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்நேகா ரெட்டி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் 'ஸ்டார் கப்பிள்' என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் உள்ளனர்.

    மனைவியுடன் அல்லு அர்ஜுன்

    இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடி இருக்கிறார்கள். இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. 

    தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை சிறப்பாக செய்துள்ளார். பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான இன்று இக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், மறைந்த நடிகர் ஒருவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.

    இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் நினைவு சமாதியில் மிஷ்கின் நினைவஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் கடந்த ஆண்டு சந்திரபாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இயக்குனர் மிஷ்கின் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள். இன்று சந்திரபாபுவின் 47வது நினைவு நாள் என்பதால் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    சந்திரபாபு - மிஷ்கின்

    எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவரான சந்திரபாபு தத்துவப் பாடல்களின் மூலம் எளிய மக்களிடையே சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நகுல், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    தற்போது நகுல், ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் இப்படத்திற்கு அஷ்வத் இசையமைக்கிறார். 

    நகுல்

    இந்நிலையில், இசையில் ஆர்வம் கொண்ட நடிகர் நகுல், அஷ்வத் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதற்கு இணங்க இப்பாடலை பாடியுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ், 26 வயதுடைய பெண்ணை 5வது திருமணம் செய்துக் கொண்ட செய்தி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ‘பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகண்ட்ஸ், ரைசிங் அரிசோனா, தி ராக்’ உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்து இருக்கிறார். ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றார். 

    நிக்கோலஸ் கேஜுக்கு 57 வயது ஆகிறது. இவருக்கு 4 தடவை திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. முதலாவதாக 1995-ல் நடிகை பாட்ரிசியாவையும், இரண்டாவது 2002-ல் லிசா மேரி பிரெஸ்லியையும், 3-வதாக 2004-ல் ஆலீஸ் கிம்முவையும், 4-வதாக மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். எரிகா கோய்கேவை திருமணமான 4-வது நாளிலேயே விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

    நிக்கோலஸ் கேஜ், ரிக்கோ ஷிபாடா

    இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் நிக்கோலஸ் தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை 5-வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளும் கூறி வருகின்றனர். 

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

    ‘தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் அஜித்குமார், சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!’ என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
    புதிய படத்தில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக், சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்து இருப்பதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
    மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம்.ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.

    இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். 

    படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் என்பதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.

    சுகன்யா - கார்த்திக்

    படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.

    இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.
    வி.பி.சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் சந்த்ரா, கர்ணா டொக்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘நின்று கொல்வான்’ படத்தின் முன்னோட்டம்.
    காதலுடன் அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது, ‘நின்று கொல்வான்’. இது, அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஒரு இளைஞரை பற்றிய கதை.

    அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவருடைய காதலி கடத்தப்படுகிறார். இளைஞர் அமெரிக்கா சென்றாரா, அல்லது காதலியை மீட்டாரா? என்பதை சொல்லும் படம், இது.

    அர்ஜுன் சந்த்ரா, கர்ணா டொக்ரா

    அர்ஜுன் சந்த்ரா, யோகி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, கர்ணா டொக்ரா, கீதா ஆகியோர் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடாம் ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி.பி.சங்கர் இப்படத்தை இயக்கி உள்ளார். படம் பெங்களூரு, மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.
    ×