என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நியூயார்க்கில் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
    விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நியூயார்க்கில் செட்டிலான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

    நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ரா

    இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இதற்கான முதல் பூஜை இந்து முறைப்படி சமீபத்தில் நடந்தன. அதில் கணவர் நிக் ஜோனஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அடுத்த மாதம் இந்த உணவகம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிம்புவும், விக்ரமும் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்ததும், பின்னணி வேலைகளை வேகமாக முடித்து, படத்தை ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    மாநாடு, கோப்ரா பட போஸ்டர்கள்

    அதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தை அதே தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
    ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் அறிமுகமான நடிகை வாணி போஜனுக்கு, தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

    அந்த வகையில், விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமுக்கு ஜோடியாக ‘சியான் 60’, சூர்யா தயாரிக்கும் 2 படங்கள், ராதாமோகன் இயக்கும் படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன்.

    வாணி போஜன்

    இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளாராம். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
    பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை கதையில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புகழ்பெற்ற நடிகர்- நடிகைகளின் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் வித்யா பாலன் நடித்து தேசிய விருது பெற்றார். இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 

    நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோரது வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ பெயரில் படமாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா, நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது. 

    ஜமுனா

    அந்த வரிசையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

    இதுதவிர தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஜமுனாவின் வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இசையமைப்பாளர் சித்தார்த் விபின், வில்லன் வேடத்தில் நடிக்க கூத்துப்பட்டறையில் பிரத்யேகமாக நடிப்பு பயிற்சி பெற்றுள்ளாராம்.
    ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’,  ‘ஜுங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    சல்பர் பட போஸ்டர்

    இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்திலும் பெரும்பாலும் காமெடி வேடங்களிலே நடித்தார் சித்தார்த் விபின். இந்நிலையில், புதுமுக இயக்குனர் புவன் இயக்கத்தில் உருவாகும் சல்பர் எனும் படத்தில், சித்தார்த் விபின் முதன்முறையாக வில்லனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க கூத்துப்பட்டறையில் பிரத்யேகமாக நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளாராம் சித்தார்த் விபின்.
    சினிமா இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்.
    தமிழ் திரைப்படத் துறையில் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்களின் பங்களிப்பு உள்ளன. ஆண் இயக்குனர்களுக்கு நிகராக பெண் இயக்குனர்கள் இடம்பெறவில்லை என்றாலும், வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள் பட்டியலில் சில பெண் இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர். 

    டி.பி.ராஜலட்சுமி

    அவர்களில் முதன்மையானவர் டி.பி.ராஜலட்சுமி, தமிழ் சினிமாவிலும், தெலுங்கிலும் முதல் பெண் நடிகை இவர். தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கட் சொன்ன முதல் பெண் இயக்குனரும் இவரே. 1936-ம் ஆண்டு வெளிவந்த மிஸ் கமலா, 1939-ல் வெளிவந்த மதுரைவீரன் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. 

    டி.பி.ராஜலட்சுமி, பானுமதி

    பானுமதி 

    1953-ம் ஆண்டு என்.டி.ராமாராவ், எஸ்.பி.ரங்காராவ் சண்டிராணி என்கிற தமிழ் திரைப்படத்தை நடிகை பானுமதி இயக்கினார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் வருகை என்பது அத்தி பூத்தாற் போன்று இருந்தது. 

    சுஹாசினி மணிரத்னம்

    இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான சுஹாசினி, வெற்றிகரமான நடிகையாக வலம்வந்த இவர், 1995-ல் இந்திரா எனும் வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். 

    சுஹாசினி மணிரத்னம்

    இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்தாண்டு வெளியாகிய ‘புத்தம் புது காலை’ எனும் ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்ற ‘காஃபி எனி ஒன்’ எனும் குறும்படத்தை இயக்கியதன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். 

    சுதா கொங்கரா

    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா, 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான துரோகி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

    சுதா கொங்கரா

    இவரது திரைப்பயணத்தில் இறுதிச்சுற்று, ஒரு அடையாளமாக மாறியது. இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம், இவருக்கு முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    2012-ம் ஆண்டில் ஆரோகணம் படம் மூலம் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். 

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப உறவுகளை பற்றிய படங்களாகவே இருந்தன. குறிப்பாக இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    பிரியா 

    2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரியா. 2007-ம் ஆண்டு கண்ணாமூச்சி ஏனடா என்கிற படத்தை இயக்கிய இவர், இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். 

    பிரியா, அனிதா உதீப்

    அனிதா உதீப்

    2009-ம் ஆண்டு குளிர் 100 டிகிரி என்கிற படத்தினை இயக்கி பிரபலமானவர் அனிதா உதீப். இதையடுத்து 90 எம்.எல் எனும் திரைப்படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் பல சர்ச்சைகளில் சிக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    ஐஸ்வர்யா தனுஷ்

    நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தனது கணவர் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். 

    ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினி

    சவுந்தர்யா ரஜினி

    ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். இதுதவிர வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

    ஹலீதா ஷமீம்

    இயக்குனர்கள் மிஷ்கின், புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஹலீதா ஷமீம். 2014-ம் ஆண்டில் பூவரசம் பீப்பி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். 2019-ம் ஆண்டு சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய சில்லு கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான ஏலே திரைப்படமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

    ஹலீதா ஷமீம்

    அதுமட்டுமின்றி இவர் தற்போது இயக்கி வரும் மின்மினி எனும் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏனெனில் மின்மினி படத்தில் குழந்தை பருவ காட்சிகளில் நடித்திருந்தவர்களே, பதின்ம வயது காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் தவிர, வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி, கே.டி.படத்தை இயக்கிய மதுமிதா, மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை இயக்கிய நடிகை ஸ்ரீபிரியா, ராஜா மந்திரி படத்தை இயக்கிய உஷா கிருஷ்ணன் என இன்னும் சில பெண் இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைக்க தயாராகி வருகின்றனர். 
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

    இதுபற்றி வாலி கூறியதாவது:-

    "ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

    "வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

    என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

    "நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

    "ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

    எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

    "வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

    உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

    எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

    "அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.

    தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு "பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.

    படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.

    படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.

    நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.

    மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.

    விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.

    சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். "என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?''

    இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.

    "பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.

    அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.

    எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.

    இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.

    "அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.

    மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.

    இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.

    இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.

    இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.

    எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.

    முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.

    மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.

    அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.

    முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.

    எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.

    "வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.

    (அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')

    இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.

    படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.

    "நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.

    நான் அவ்வாறே எழுதினேன்.

    இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.

    இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.

    அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.

    "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.

    இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.

    அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
    46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
    தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். 

    தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
    தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி நன்றி தெரிவித்துள்ளார் விஜே லோகேஷ்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். 2020-ம் ஆண்டு இவருக்கு திடீரென ஸ்டோக் ஏற்பட்டு இடது கால், இடது கை செயலிழந்தது. 

    அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக பலரிடமும் உதவி கோரினர். அப்போது மருத்துவமனையில் இருந்த லோகேஷை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி அவருக்கான மருத்துவ செலவை ஏற்றார். பின்னர் முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிய லோகேஷூக்கு மண்டைஓடு மாற்று அறுவை சிகிச்சையும் முடிந்து பூரண குணமடைந்தார்.

    இந்நிலையில் தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி நன்றி தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் லோகேஷ் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், லோகேஷ் உடன் கேக் வெட்டும் விஜய் சேதுபதி, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார்.
    அஜித் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் கொடுத்தார், அவர் சொன்னபடி பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
    அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்காக இவர் பெரிய ரக பைக் ஓட்டுவதற்குக் கற்றுக் கொண்டார். 

    ஹூமா குரேஷி

    சமீபத்திய பேட்டியில், வலிமை படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்ற கேள்விக்கு “நான் படத்தில் நடிப்பதற்காக மட்டுமே பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அஜித் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்தது போல் பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன்” என்று தெரிவித்துள்ளார். 
    மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியானது. 

    இருப்பினும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் கமல் ஈடுபட்டுள்ளதால் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்னரே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விக்ரம் பட போஸ்டர்

    இந்நிலையில், விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

    விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
    சந்தோஷ் நாராயணனின் மகளான பாடகி தீ, வடசென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
    இறுதிச் சுற்று படத்தில்  ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட ரகிடா’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடசென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற சுயாதீன இசைப் பாடலை பாடியிருகிறார்கள். 

    என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

    இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டனர். வண்ணமயமாக எடுக்கப்பட்டு உள்ள இப்பாடல் வீடியோ இன்று யூடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.

    ×