என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.

பிரசாந்த், தியாகராஜன்
நடிகர் பிரசாந்த் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இது பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேச்சுலர்’ படத்தின் முன்னோட்டம்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘பேச்சுலர்’. திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என்ற பரபரப்பான பிரச்சினையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஜீ.வி.பிரகாசுடன் திவ்ய பாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். டில்லிபாபு தயாரித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி
படத்தை பற்றி இயக்குனர் சதிஸ் கூறியதாவது: “இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொள்ளாச்சியில் இருந்து வேலைக்காக பெங்களூருக்கு போகும் இளைஞரை பற்றிய கதை. அவர் அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார். இரு வருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை. இது சினிமா போல் இருக்காது. காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன.
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன. இவற்றுள் மாநாடு, பொம்மை போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் தொடரை விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளார்களாம். தற்போது இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆர்யாவின் டெடி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ஓடிடி-யில் வெளியான நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மற்றொரு படமும் அவ்வாறே ரிலீசாக உள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடித்த டெடி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததால், இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தின் போஸ்டர்
சார்பட்டா பரம்பரை படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிரஞ்சீவி நடிப்பில் உருவாக உள்ள லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.
தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மோகன் ராஜா, தமன்
இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. தற்போது இப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு, படம் குறித்த முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2 பாடல் காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் 2 மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விடுவார்கள் எனவும் படக்குழு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில், டாக்டர் படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குருதி ஆட்டம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்தில் இடம்பெறும் ‘ரங்க ராட்டினம்’ எனும் பாடலை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபர்ணா பாலமுரளி, ரீத்து வர்மா, சிவாத்மிகா
ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில், இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினும், புகழும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் அஷ்வின் ஹீரோவாகவும், புகழ் காமெடியனாகவும் நடிக்கின்றனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

என்ன சொல்ல போகிறாய் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 19-ந் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
விஜய் நடித்த படத்தை கேலி செய்து பதிவுகள் வெளியிட்ட பிரபல நடிகரை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தமிழில் மாநகரம், மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சந்தீப் கிஷன். இவர், விஜய் நடித்த சுறா படம் வெளியானபோது அதை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து விஜய்யை பாராட்டியும் பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளையும் வைத்து விஜய் ரசிகர்கள் தற்போது சந்தீப் கிஷனை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்கின்றனர். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.

சந்தீப் கிஷன்
இதுகுறித்து நடிகர் சந்தீப் கிஷன் கூறியதாவது: “இதை நான் யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. ஆனாலும் எனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய தோன்றியது. எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். எனக்கு கஷ்டமான நேரங்களில் பல வகையில் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. விஜய் படங்களை பார்த்து ரசித்துத்தான் நான் வளர்ந்து இருக்கிறேன். இடையில் சில காலம் மட்டும் ஒரு வழக்கமான ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் அவரது பயணம் எனக்கு ஊக்கத்தை அளித்து இருப்பதாக பெருமையோடு கூறுவேன். இன்று நான் அவரது மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்” என்றார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன் தொகுப்பை காணலாம்.
கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?
பதில்: தங்கமே... பாடல்
கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?
பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பதில்: பிரார்த்தனைகள்

கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?
பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.
கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?
பதில்: ராஜா ராணி
கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்
பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?
பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.
கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?
பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி
கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.
கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?
பதில்: பெருமையா இருக்கு






