என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.

    அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    விஜய்

    அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் ஏற்கனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    நடிகர் விஜய்யின் நடனத்திற்கு தான் தீவிர ரசிகன் என்று பிரபல மலையாள நடிகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ கே கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய்யின் ரசிகன் நான். இதற்குக் காரணம் அவரது நடனம் தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன். 

    துல்கர் சல்மான், விஜய்
    துல்கர் சல்மான், விஜய்

    குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடியிருப்பார். அது எளிதான விசயமல்ல. என்னைப் பொருத்தவரை நடிகர் விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தான் தெரிகிறார். எப்போதுமே அவரது நடனத்திற்கு நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, போனிகபூர் - அஜித் - எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

    அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அஜித், எச்.வினோத்
    அஜித், எச்.வினோத்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது மீண்டும் அவ்வாறு நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
    ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என சூர்யாவுக்கு அரசியல் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் ‘ஜெய் பீம்’. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரபலங்கள், இப்படத்தை பார்த்து பாராட்டினர். 

    சமீபத்தில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சூர்யாவுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு பதில் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். 

    இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே.சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

    பாலகிருஷ்ணன், சூர்யா
    பாலகிருஷ்ணன், சூர்யா

    மேலும் மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 

    அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம்' ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

    மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. 

    ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
    மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் குழந்தைக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
    தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

    மனைவி, மகளுடன் சௌந்தரராஜா
    மனைவி, மகளுடன் சௌந்தரராஜா

    இவர்களுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார். மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
    சிவராகுல் இயக்கத்தில் விஜீத், ஹமைரா பரத்வாஜ், நதியா, நேசி, ஸ்டெபி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில்லாட்ட’ படத்தின் முன்னோட்டம்.
    சிவராகுல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சில்லாட்ட’. அறிமுக நாயகன் விஜீத் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடிகளாக வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹமைரா பரத்வாஜ், நதியா, நேசி, ஸ்டெபி ஆகிய 4 அழகிகள் நடித்துள்ளார்கள். ‘சுருட்டு சுடலை’ என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் சிவராகுல் நடித்துள்ளார். 

    சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி, மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தஷி இசை அமைக்கும் இப்படத்துக்கு பகவதி பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “‘சில்லாட்ட’ என்பது தென் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள சொல். அது பனைமரத்தை சார்ந்தது. பனை மரத்தில் உள்ள ஓலைகளையும், மட்டைகளையும் தாங்கி நிற்கும் வலைதான் சில்லாட்ட.

    சில்லாட்ட படக்குழு
    சில்லாட்ட படக்குழு

    புனிதமான பனை தொழிலை அழித்துவிட்டு, செங்கல் சூளையை எழுப்பி சமூகத்துக்கு விரோதமான தொழிலில் ஈடுபடுகிறார், ஒருவர். இதனால் பனை தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் மோதலில் வெற்றி யாருக்கு? என்பதே ‘சில்லாட்ட’ படத்தின் கதை.
    பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ள படத்துக்கு போட்டியாக, அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் ரொமாண்டிக் படம் ரிலீசாக உள்ளது.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

    இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், தள்ளிப்போகாதே படங்களின் போஸ்டர்
    மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், தள்ளிப்போகாதே படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ‘தள்ளிப்போகாதே’ திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படம் டிசம்பர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி உள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். 
    விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 

    இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக இது உருவாகி உள்ளது. 
    வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 

    வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
    அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

    அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
    இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மதுமிதா
    மதுமிதா

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக மதுமிதா வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வந்த மதுமிதா, திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
    தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

    தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது: “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல. 

    பூஜா ஹெக்டே
    பூஜா ஹெக்டே

    வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால் அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்'' என்றார்.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 40 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

    சஞ்சீவ், விஜய்
    சஞ்சீவ், விஜய்

    அதன்படி, பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×