என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.
    • கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

    டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

    கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுகுமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'புஷ்பா -தி ரூல்'.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா-தி ரூல் போஸ்டர்

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • நானி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    தசரா 

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர்.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

    இந்திய சிவில் சர்வீஸ் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டி, ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    ஆர்.என்.ரவி

    நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதி வந்துள்ளது. நாட்டில் பல பயங்கரவாத செயல்களுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பே அனுப்பி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர். என்று கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.


    பா.இரஞ்சித்

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு இயக்குனர் பா.இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவரின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஆளுநரின் பேச்சு தவறுதான் அதனை ஏற்க முடியாது. என்று கூறினார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்தியன் -2

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    இந்தியன் -2 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • சமீபத்தில் மாதவன் நடித்து இயக்கியிருந்த 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது குட்டி, யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மாதவன், சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது குட்டி, யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.



    இந்த நிலையில் மாதவன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சுயசரிதை படமாக உருவாகவுள்ள படத்தை மாதவன் இயக்கி நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சோபிதா துலிபாலா -வானதி

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலாவின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    தங்கலான்

    தங்கலான்

    இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும், 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருட இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • நான் ஈ, புலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சுதீப்.
    • இவர் தற்போது பாஜகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். கன்னட சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக சுதீப் அறிவித்து உள்ளார்.


    சுதீப்

    சுதீப்

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனக்கு கஷ்டமான காலத்தில் உதவியதாகவும், எனவே அவர் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் பிரசாரம் செய்யும்படி சொல்கிறாரோ அந்த தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன் என்றும் கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    சுதீப்

    சுதீப்

    இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை சுதீப் திரைப்படங்களை திரையிட தடை செய்யக்கோரி சிவமொக்காவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். சுதீப்பின் திரைப்படங்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தேர்தல் நடைமுறை விதிகளை கருத்தில் கொண்டு மே 13-ந் தேதிவரை அவரது படங்களை திரையிட அனுமதிக்கக்கூடாது, சுதீப் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    • பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஸ்வஸ்திகா முகர்ஜி.
    • இவர் இணை தயாரிப்பாளர் மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி (வயது 42). இவர் 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'ஹேமந்தர் பகி' என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா முகர்ஜி நடிகையாக அறிமுகமானார். 'காலா' என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்த அவர் இந்தியில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.


    ஸ்வஸ்திகா முகர்ஜி


    தற்போது 'ஷிபுர்' என்ற இந்தி படத்தில் நடித்து வரும் ஸ்வஸ்திகா முகர்ஜி, இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், "இந்தி நடிகைகள் அனைவரும் எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள். இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான்தான். எனவே என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள் என்று சந்தீப் சர்கார் தொல்லை கொடுக்கிறார்.

    ஆசைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்'' என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடித்தி வருகின்றனர்.

    • ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    மியூசிக் ஸ்கூல்

    இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    மியூசிக் ஸ்கூல்

    இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான 'மம்மி சொல்லும் வார்த்தை' பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.


    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் விஜய் டிவி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் மேடையில் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×