என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஃபர்ஹானா

    ஃபர்ஹானா

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'ஃபர்ஹானா' திரைப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


    ஃபர்ஹானா

    ஃபர்ஹானா

    இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், 'ஃபர்ஹானா' படத்தை பற்றி என்ன சொல்வது. என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுப்படுத்தியுள்ளார். இது போன்ற காவிய படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. தயாரிப்பாளர் பிரபு சாருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    சமீபத்தில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார், காஷ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பின் போது கையில் உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதியை வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த கண்ணாடி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியின் ஒரு பகுதி என்பதால் லியோ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதை ரத்னகுமார் மறைமுகமாக பதிவு செய்திருப்பதாக பலரும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.



    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இது குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதில், நான் லியோ' படத்தில் நடிக்கவில்லை, தயவு கூர்ந்து இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அந்த கண்ணாடியை ரத்னகுமார் எதற்காக பதிவிட்டிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் விளையாட்டாக செய்திருப்பார். ரசிகர்கள் போடும் மனக்கணக்கிற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இது போன்ற செய்திகளை பெரிய செய்தி நிறுவனங்களும் வெளியிடுகின்றன. அவர்களால் எங்களை அணுகி எளிதில் தெளிவு படுத்திக் கொள்ள முடியும், ஆனால் இது போன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகளால் மக்களும் நம்ப ஆரம்பித்து விடுகின்றனர் என்று விஜய் சேதுபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
    • இவர் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.


    பிரியங்கா சோப்ரா

    கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். பிரியங்கா சோப்ரா தற்போது நடித்திருக்கும் 'லவ் அகெய்ன்' என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். படத்தின் பெயர் 'லவ் அகெய்ன்' என்பதால், பாலிவுட்டில் தனது பழைய நண்பர்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

    நிக் ஜோன்ஸை சந்திப்பதற்கு முன்பு அவர் ஷாகித் கபூர், ஹர்மான் பவேஜா, ஷாருக்கான், ஆகியோருடன் காதலில் இருந்த காலத்தில் இந்தியாவில் தலைப்புச்செய்திகளில் பேசப்பட்டதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:-நான் டேட்டிங் செய்த அனைவருமே அற்புதமானவர்கள். நான் எப்படியெல்லாம் எங்கள் நட்பு இருக்க வேண்டும் என்பதை நினைத்தேனோ அப்படியெல்லாம் இருந்தோம் என்று அவர் கூறினார்.

    • இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடப்பட்டிருந்தது.

    'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதில், அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக மகிழ் திருமேனி இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கு முன்பு வாலி, வில்லன் உள்ளிட்ட பல படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


    சூர்யா

    இந்நிலையில், நடிகர் சூர்யா 'கங்குவா' படத்திற்காக உடற்பயிற்சி செய்து தனது உடலை மெருகேற்றி வருகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன் போஸ்டர்

    சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வருகிற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இராவண கோட்டம் படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் "இராவண கோட்டம்" திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை.

    நேற்று நடந்த பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.


    இராவண கோட்டம் அறிக்கை

    படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    அயோத்தி

    இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இவர் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ப்ரஷர் குக்கர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அயோத்தி படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

    இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அடுத்ததாக கவினுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அயோத்தி

    இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'கிஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    'கஸ்டடி' திரைப்படம் நாளை (மே 12-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.


    அடா சர்மா பதிவு

    இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை (மே 12) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. 'ஃபர்ஹானா' திரைப்படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளது என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.


    இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படத்தை வரும் மே 12-ஆம் தேதி அன்று, ரசிகர்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

    தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.


    ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் , உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

    நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல. அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.


    ஃபர்ஹானா படக்குழு அறிக்கை

    இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

    எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம் என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • திண்டுக்கல் மாணவி நந்தினி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
    • மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசளித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ந்தார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.


    நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து
    நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். 

    ×