என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹூண்டாய் மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளன.



    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் வாகனத்தை உருவாக்கி வருகின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய பறக்கும் வாகனத்திற்கான கான்செப்ட் எஸ்-ஏ1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கான்செப்ட் வாகனம் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இரு நிறுவனங்களின் கூட்டணியில் ஹூண்டாய் நிறுவனம் பறக்கும் வாகனங்களை தயாரித்து வழங்கும். உபெர் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வான்வழி சேவை, தரைவழி போக்குவரத்துக்கான இணைப்புகள், நுகர்வோர் இன்டர்ஃபேஸ்களை ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்க இருக்கிறது.

    கான்செப்ட் எஸ்-ஏ1

    ஹூண்டாய் நிறுவனம் உபெர் எலிவேட் உடன் இணைந்து தனிப்பட்ட பறக்கும் வாகனமான எஸ்-ஏ1 மாடலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வாகனத்தை தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறக்க செய்து, தரையிறங்க வைக்க முடியும்.

    புதிய கான்செப்ட் விமானம் மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்திலும், தரையில் இருந்து சுமார் 1000 முதல் 2000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதை கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை தொடர்ச்சியாக பயணிக்க முடியும். முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் புதிய கான்செப்ட் வாகனம் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    முதற்கட்டமாக இந்த வாகனத்தை ஒருவர் இயக்கும் வகையிலும், எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கேபினில் நான்கு பேர் வரை அமர முடியும். 
    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் ஆரா காருக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டது. காம்பேக்ட் செடான் பிரிவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் ஆரா கார் எக்ஸ்சென்ட் மாடல்களுக்கு மாற்றாக களமிறங்குகிறது.

    புதிய ஆரா காரை வாங்க விரும்புவோர் ஹூண்டாய் ஆரா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது ஹூண்டாய் விற்பனையகம் சென்று முன்பதிவு செய்யலாம். புதிய ஆரா காருக்கான முன்பதிவுகள் ஜனவரி 21-ம் தேதி வரை மேற்கொள்ள முடியும். புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா காரின் உள்புற அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஸ்பை படங்களின் படி ஆரா காரில் புதிய ஸ்டீரிங் வீல், எட்டு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஆரா

    கேபின் பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என்றும் ஃபுளோட்டிங் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , டு-சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் இ.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் காரை வெளியிடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து 2020 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், அதன்பின் டியாகோ, டிகோர் மற்றும் ஹேரியர் கார்களின் பி.எஸ்.6 வெர்ஷன்களை வெளியிட இருக்கிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், இந்தியாவில் அடுத்த 18 மாதங்களில் டாடா நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார். அந்த வரிசையில் முதல் இரண்டு கார்கள் மற்றும் நெக்சான் இ.வி. நீண்ட தூரம் பயணிக்கக்கூடியதாக இருக்கிறது.

    டிகோர் இ.வி.

    இத்துடன் அல்ட்ரோஸ் இ.வி. கார் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மாடல் ஒன்று இருக்கிறது. இவை 2021-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். டாடா அல்ட்ரோஸ் இ.வி. காரின் ப்ரோடோடைப் மாடல் 2019 மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    புதிய காரில் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் IP-67 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும், இது எட்டு வருட வாரண்டியுடன் வரும் என கூறப்படுகிறது. சிப்டிரான் மூலம் இயங்கும் இ.வி. கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஹூண்டாய் மோட்டார் குழுமம் ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் குழுமம் சர்வதேச சந்தையில் 2025-க்குள் மொத்தம் 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இவற்றில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அடங்கும். 

    இதற்கென ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி கொரிய வோண்களை முதலீடு செய்ய இருப்பதாக ஹூண்டாய் துணை தலைவர் எய்சுன் சங் தெரிவித்தார்.

    ஹூண்டாய்

    2019-ம் ஆண்டில் ஹூண்டாய் குழுமம் மொத்தம் 24 எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் ஹூண்டாய் நிறுவனம் 13 ஹைப்ரிட், ஆறு பிளக்-இன் ஹைப்ரிட், 23 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு ஃபியூயல் செல் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இருக்கிறது.

    இத்துடன் புதிதாக இ.வி. தளம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது. புதிய தளத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. 
    ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் ஒன்றை ஹோண்டா வெளியிட்டுள்ளது. புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மாடல் அதிகம் விற்பனையாகும் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஹோண்டா நிறுவனம் சுமார் 2.5 லட்சம் ஆக்டிவா யூனிட்களை விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர ஹோண்டா தொடர்ந்து ஆக்டிவா மாடல்களை அப்டேட் செய்து கொண்டே வருகிறது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் அதிகளவு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கனெக்டிவிட்டி அம்சங்களை ஆக்டிவா 6ஜி மாடலில் வழங்கும் முதல் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டா இருக்கும்.

    ஹோண்டா ஆக்டிவா

    ஆக்டிவா 6ஜி வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் இணைத்து பல்வேறு கண்ட்ரோல்களை இயக்க முடியும். புதிய ஸ்கூட்டரில் ஹோண்டா 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய ஸ்கூட்டரில் 109.19சிசி HET ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ள பி.எஸ்.4 என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் அளவுகளில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா ஆக்டிவா 5ஜி மாடல் விலை ரூ. 57,094 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 6ஜி மாடல் விலை ரூ. 5000 முதல் ரூ. 8500 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ஆக்டிவா 6ஜி மாடலின் விலை ரூ. 65,500 வரை நிர்ணயிக்கப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் மாடல் விலை இந்தியாவில் ரூ. 55,925 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஐ3எஸ் வேரியண்ட் ரூ. 57,250 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக ஹீரோ ஸ்பிலென்டர் ஐஸ்மார்ட் பி.எஸ். 6 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஹெச்.எஃப். டீலக்ஸ் பி.எஸ்.6 வேரியண்ட்டை விற்பனை மையங்களுக்கு அனுப்பும் பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் துவங்கி இருக்கிறது. 

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்

    விரைவில் மற்ற மாடல்களும் பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மாடலில் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 9 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறன் வழங்குகிறது. இதன் செயல்திறன் 7.94 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம். மற்றும் 8.05 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். ஆக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தின் ஜெய்பூர் புதுமை மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    இந்தியாவில் 100சிசி மோட்டார்சைக்கிள் வாகனங்கள் பிரிவில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் சுமார் 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் பிளாக் - ரெட், பிளாக் - பர்ப்பிள் மற்றும் பிளாக் - கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டெக்னோ புளூ மற்றும் ஹெவி கிரே - கிரீன் நிறங்களிலும் கிடைக்கிறது.
    மினி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வசதி கொண்ட கூப்பர் எஸ்.இ. ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரிட்டனை சேர்ந்த மினி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ. ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் இந்தியாவில் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளே வெளியீட்டு திட்டங்களுக்கு காரணமாக மினி நிறுவனம் கூறி இருக்கிறது. 

    எலெக்ட்ரிக் மினி கூப்பர்

    மினி நிறுவனத்தின் ஆசிய பசிபிக், கிழக்கு ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவுக்கான துணை தலைவர் ஃபிரான்கோயிஸ் ரோகா இதுபற்றி கூறும் போது, “உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருக்கிறோம். ஆலைக்கு அருகாமையில் உள்ள சந்தைகளில் முதலில் இந்த கார் வெளியாகும். எங்களுக்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. இந்த தேவை பூர்த்தியாகும் போது, இந்திய சந்தையில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வோம்” என தெரிவித்தார்

    கூப்பர் எஸ்.இ. ஐ3எஸ் பவர்டிரெயின் காருக்கு 184 பி.ஹெச்.பி. பவர், 270 என்.எம். டார்க் இழுவிசையை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 32.6kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இது பயனர் அமரும் இருக்கையின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 235 முதல் 270 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

    புதிய மினி எலெக்ட்ரிக் காரை 50kW சார்ஜ் பாயிண்ட் கொண்டு 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்களே ஆகும் என மினி தெரிவித்துள்ளது. 
    புத்தாண்டில் அறிமுகமாக இருக்கும் புகாட்டி சிரான் நொய்ரே காரின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    அதிவேக கார்களைத் தயாரிக்கும் புகாட்டி நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் தலைவர் ஆஷிம் அன்ஷெடிட், ‘லா வொய்சர் நொய்ரே’ காரின் வடிவமைப்பு போன்ற காரை உருவாக்கினார். அதிக திறன் கொண்ட, சொகுசான பிரத்யேக ஸ்போர்ட்ஸ் காராக புத்தாண்டில் வெளிவரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த கார் தனித்துவம் வாய்ந்ததாக நிச்சயம் இருக்கும் என்கிறார் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஸ்டீபன் விங்கெல்மான். லிமோசான் கார்களில் உள்ள சொகுசு தன்மையையும், ஸ்போர்ட்ஸ் காருக்குரிய வேகத்தையும் கொண்டதாக இது இருக்கும் என்கிறார் ஸ்டீபன்.

    புகாட்டி சிரான் நொய்ரே

    லா வொய்சர் நொய்ரே காரின் தனித்துவமே அதன் வடிவமைப்புதான். அதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய மாடலில் இரண்டு வெர்ஷன்கள் வர உள்ளன. ஸ்போர்ட்ஸ் பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் ‘சிரோன் நொய்ரே ஸ்போர்டிவ்’ என்ற மாடலையும், கம்பீரத்தை விரும்பும் ஆடம்பர பிரியர்களுக்கென ‘சிரோன் நொய்ரே எலிகன்ஸ்’ என்ற மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

    புதிய காரில் 8 லிட்டர் 16 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1,103 கிலோவாட் அதாவது 1,500 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 1,600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டதாக இது வந்துள்ளது. 

    ஸ்போர்ட் மாடல் கார் ஒரு லட்சம் யூரோ அதிகமாகும். மொத்தமே 20 கார்களை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் காரின் விலை 30 லட்சம் யூரோவாக இருக்கும் என தெரிகிறது. புகாட்டி ஆர்வலர்கள் ஒருபோதும் விலையைப் பெரிதாக நினைப்பவர்கள் அல்ல. அதனால் இந்த 20 காருக்கும் கடும் போட்டி இருக்கும் என்றே தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய ஏ8எல் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆடி இந்தியா நிறுவனம் விரைவில் புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் புதிய கியூ8 ஃபிளாக்‌ஷிப் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இந்த வரிசையில் ஆடி நிறுவனம் புதிய ஏ8எல் மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் செடான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்.எல். ஜெ மற்றும் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    புதிய ஆடி ஏ8எல் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் இந்த கார் அவுரங்கபாத்தில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆடி ஏ8எல்

    ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.எல்.வி. இவோ பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் புதிய ஆடி ஏ8எல் கார் 5,302 எம்.எம். நீளமாகவும், 1945 எம்.எம். அகலம் மற்றும் 1,488 எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,128 எம்.எம். ஆகும்.

    புதிய ஆடி ஏ8எல் காரில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், ஆடியின் விர்ச்சுவல் காக்பிட், 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு மசாஜ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் லெவல் 3 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

    ஆடி ஏ8எல் மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் வி6 டீசல் மோட்டாருடன் வரும் என தெரிகிறது. இவற்றில் முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரை தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி இருக்கிறது. சமீபத்தில் ரெனால்ட் டிரைபர் கார் இந்திய விற்பனையில் 20,000 யூனிட்கள் விற்பனையை கடந்தது.

    டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    ரெனால்ட் டிரைபர்

    காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.

    ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ரெனால்ட் டிரைபபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XP பிளஸ் டிராக்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் இந்த வருட பொங்கலுக்கு புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது இந்த புதிய மாடல் டிராக்டர்.

    இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளன மஹிந்திரா XP பிளஸ் சீரிஸின் 275XP பிளஸ் ELS DI (37 HP) 475 XP பிளஸ் ELS DI (44 HP) மற்றும் 575 XP பிளஸ் ELS DI (47 HP) என்ஜின்கள் கொண்ட இந்த புதிய டிராக்டர்களின் அணி வகுப்பு.

    மஹிந்திரா XP பிளஸ் டிராக்டர்

    மஹிந்திராவின் பூமிபுத்தா சீரிஸ் என்ஜின்கள் 30-50 ஹெச்பி சக்தி கொண்டவைகளாக ட்ராக்டர் சந்தையில் வெற்றி பெற்று திகழ்கிறது. தற்போது XP பிளஸ் சீரிஸ் அதிகரிக்கப்பட்ட சக்தி கொண்ட எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக (ELS) என்ஜின்களை கொண்டுள்ளதால் அதிக செயல்திறனும் அதிக இழுக்கும் திறனும் (டார்க்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய டிராக்டர்களின் வெளிப்புறத் தோற்றமும் கருப்பு மற்றும் சில்வர் நிறம் கொண்ட அழகிய ஹெட்லைட்களுடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 6 வருட உத்திரவாதத்துடன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக சொகுசு அம்சங்களுடன் வந்துள்ளது மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ். 

    மேலும் இந்த டிராக்டர்கள் 49 பைசா குறைவான வட்டி விகிதத்திலும் தவணையில் வாங்குவோருக்கு முதல் தவணை இலவசமாகவும் குறைவான முன் பணம் செலுத்தியும் வாங்கக்கூடிய வசதி கொண்டுள்ளன.
    பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் பி.எஸ். 6 வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    பியாஜியோ இந்தியா நிறுவனம் அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் பி.எஸ்.6 வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இரு ஸ்கூட்டர்களிலும் தற்சமயம் 160சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளதால், அப்ரிலியா எஸ்.ஆர். 150 மாடல் அப்ரிலியா எஸ்.ஆர். 160 என அழைக்கப்படுகிறது. புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 160 மாடலின் விலை ரூ. 85,431 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இது பழைய மாடலை விட ரூ. 10,000 வரை விலை அதிகம் ஆகும். புதிய பி.எஸ். 6 வெஸ்பா 150 எக்ஸ்.எல். மாடலின் விலை ரூ. 91,492 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பி.எஸ். 6 அப்ரிலியா மற்றும் வெஸ்பா

    புதிய 160 சிசி மோட்டார் பி.ஸ்.4 மாடல்களில் வழங்கப்பட்ட 154.8சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாருக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் தற்சமயம் 10.8 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இது முந்தைய என்ஜினை விட 0.4 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும். தோற்றத்தில் புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய 160 சிசி வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர்கள் விரைவில் இந்தியா முழுக்க விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இத்துடன் புதிதாக 125 சிசி ஸ்கூட்டர் ஒன்றை ஜனவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்ய பியாஜியோ இந்தியா திட்டமிட்டுள்ளது. 
    ×