என் மலர்
கார்
- மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன.
- இரு கார்களும் ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த என்ஜினுடன் கிடைக்கின்றன.
மஹிந்திகா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்களுக்கான காத்திருப்புக் காலம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், இரு கார்களை வாங்க முன்பதிவு செய்வோர் டெலிவரி எடுக்க 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என மஹிந்திரா அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இரு கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்களை பெற குறைந்த பட்சம் 18 மாதங்களில் இருந்து அதிகபட்சமாக 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இரு கார்களை வாங்க, நவம்பர் 2022 வரை ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் முன்பதிவுகளை பெறுவதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

இந்த மாதத்திற்கு மட்டும் மஹிந்திரா நிறுவனம் 2 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்து வருகிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்கள் ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் ஆகும். தொடர்ந்து காத்திருப்பு காலம் அதிகரித்து வருவதை அடுத்து உற்பத்தியை வேகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.
எனினும், இரு கார்களின் உற்பத்திக்காக எத்தனை யூனிட்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை மஹிந்திரா இதுவரை வெளியிடவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இரு மாடல்களின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் டீசர் வெளியானது.
- முதற்கட்டமாக இன்னோவா ஹைகிராஸ் மாடலின் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் முதற்கட்டமாக இந்தோனேசியாவில் நவம்பர் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகிறது.
டீசரின் படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் முற்றிலும் புதிய டிசைன், கிரில், பம்ப்பர், காண்டிராஸ்ட் நிற இன்சர்ட்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், வீல் கிளாடிங் மற்றும் ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் கொண்டிருக்கிறது. முந்தைய டீசர்களின் படி 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் இன்னோவா செனிக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் சீட் பெல்ட்கள், டேஷ்கேம் உள்ளட்ட வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதில் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செண்டர் கன்சோலில் கியர் லீவர் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் சேசிஸ் மற்றும் FWD லே-அவுட்-இல் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் யூனிட் உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய இன்னோவா மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை விவரங்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.
- டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா மாடல் இந்திய சந்தையில் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
- இதுதவிர புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா ஈடுபட்டு வருகிறது.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட்களின் முன்பதிவை சமீபத்தில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து டீசல் வாகனங்கள் விற்பனையை டொயோட்டா நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இதுபற்றி டொயோட்டா தரப்பில் எந்த தகவலோ, விளக்கமோ வழங்கப்படவில்லை. தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த தகவல் தான் உண்மையான காரணம் என தெரியவந்துள்ளது. சில விற்பனையாளர்கள் இன்னோவா டீசல் வேரியண்டிற்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்னோவா க்ரிஸ்டா ZX வேரியண்டில் மட்டும் தான் டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த முறை டீசல் கார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் விற்பனையகங்களுக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. இன்னோவா டீசல் வேரியண்ட் வாங்க திட்டமிடுவோருக்கு இந்த தகவல் சற்று ஆறுதலாக இருக்கும்.
அடுத்த தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின்களை மட்டுமே கொண்டிருக்கும். புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதன் வினியோகம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
- போக்ஸ்வேகன் நிறுவனம் உலக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
- இதே போன்று இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில் ஏராளமான நாடுகளில் போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்ஸ்வேகன் ஐடி. குடும்பத்தில் இருந்து இதுவரை ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
அக்டோபர் 2020 வாக்கில் போக்ஸ்வேகன் ஐடி.3 மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தை அந்நிறுவனம் துவங்கியது. தற்போது உலகளவில் கார் வினியோகத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து லட்சம் மைல்கல் எட்டிய செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றை வினியோகம் செய்யும் பணிகளில் போக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகிறது.

2033 முதல் ஐரோப்பாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐரோப்பாவில் 2030 முதல் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த போக்ஸ்வேகன் வாகனங்களில் 70 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகிறது.
"1 லட்சத்து 35 ஆயிரம் ஐடி. கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வினியோகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எனினும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலான சூழல் நிலவுவதால், உற்பத்தி திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டியாத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்." என போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் பிரிவுக்கான நிர்வாக குழு உறுப்பினர் மெல்டா அபெ தெரிவித்து இருக்கிறார்.
- ஹோண்டா நிறுவனத்தன் புதிய தலைமுறை அக்கார்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய அக்கார்டு மாடல் இரு பெட்ரோல் மற்றும் நான்கு ஹைப்ரிட் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 11th Gen அக்கார்டு மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் அளவில் பெரியதாகவும், முன்பை விட அதிகளவு ஆடம்பரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிவிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அக்கார்டு மாடல் அதன் பாரம்பரிய தோற்றத்தை இழக்காமல் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
புதிய ஹோண்டா அக்கார்டு மாடலில் குறிப்பிடத்தக்க அம்சமாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புது மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

ஹைப்ரிட் அக்கார்டு மாடலில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் இரு மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 335 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
காரின் வெளிப்புறம் மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் அப்ரைட் கிரில், பிளாக்டு அவுட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிஸ்டின்டிவ் ஹாரிஜாண்டல் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அக்கார்டு மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரியர் ஸ்பாயிலர் உள்ளது.
உள்புறத்தில் பிரீமியம் பாகங்கள், அதிக சவுகரியமான இருக்கைகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்ட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா அக்கார்டு மாடலின் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
- ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5 மாடல் இந்தியா வருகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் E-GMP பிளாட்பார்மை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. மேலும் இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது E-GMP பிளாட்பார்மில் உருவான முதல் கார் ஐயோனிக் 5 இந்தியா வர இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மூலம் ஹூண்டாய் E-GMP பிளாட்பார்மையும் இந்தியா கொண்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ஹூண்டாயின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

புதிய ஐயோனிக் 5 மாடலில் உள்ள அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 5-லின்க் ரியர் சஸ்பென்ஷன், காரில் பயணம் செய்வோருக்கு தலைசிறந்த சவுகரியத்தை வழங்குவதோடு, சிறப்பான ஹேண்ட்லிங் வழங்குகிறது. மேலும் இந்த காரை 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.
"மொபிலிட்டி துறையில் சாத்தியமானவற்றுக்கு சவால் விடும் எங்களின் பானி, எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் -E-GMP-இல் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியாவில் E-GMP அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர முடியும். இந்தியாவில் உள்ள புது தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களை E-GMP உருவாக்கும்." என ஹூண்டாய் மோட்டார் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்து இருக்கிறார்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

"இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."
"வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."
"தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.
- ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் உற்பத்தி 25 ஆண்டுகளுக்கும் முன்பே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய உற்பத்தியில் இருபது லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கும் ஹோண்டா சிட்டி இருபது லட்சமாது யூனிட்டாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகாரா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
1997 டிசம்பர் மாத வாக்கில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகளை துவங்கியது. முதன் முதலில் ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு தேவை மட்டுமின்றி 16 நாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் இந்திய வியாபாரத்தை கட்டமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது. 2020 வாக்கில் கிரேட்டர் நொய்டா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒற்றை உற்பத்தி ஆலை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. 450 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இத்துவர தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- இந்த ஆண்டு ஸ்லேவியா மாடல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிஷன் 1.0 AT மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 MT மற்றும் ஆம்பிஷன் 1.0 MT வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 MT விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 DSG விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 AT மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் உயரந்துள்ளது.
- டொயோட்டா நிறுவனம் விரைவில் கிளான்சா CNG வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புது CNG காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ S-CNG வெர்ஷன் விலையை இந்தியாவில் அறிவித்து இருந்தது. புதிய பலேனோ S-CNG மாடல் விலை இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
மாருதி சுசுகியை தொடர்ந்து டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் புதிய கிளான்சா CNG மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளான்சா CNG மாடல் கிளான்சா e-CNG பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்பதிவுகள் விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா CNG மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
புதிய டொயோட்டா கிளான்சா e-CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் பெட்ரோல் மோடில் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






