என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள் சீரிசாக பல்சர் விளங்குகிறது.
    • இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் சீரிஸ் விற்பனையில் அமோக வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

    இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணி நிறுவனம் என்ற பெருமையை எட்ட பல்சர் 150 மற்றும் பல்சர் 180 மாடல்கள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளன. ஸ்போர்ட் ப்ரோஃபைல் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் காரணமாக இந்த மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த ஆண்டுகளில் பல்சர் சீரிஸ் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வந்த பல்சர் 150 மாடலை இந்திய சந்தையில் நிறுத்திவிட்டது. இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150 விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், இதற்கு மாற்றாக புதிய பல்சர் P150 மாடல் விற்பனை செய்யப்படுகிறது. பல்சர் சீரிசை மாற்றியமைக்கும் பஜாஜ் நிறுவன திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் பல்சர் 180 மாடலின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இதே போன்று பல்சர் 220 உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. 1980-90களில் பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போது சந்தையில் 100சிசி கம்யுட்டர் ரக மாடல்கள் நல்ல வரவேற்பை பெற துவங்கின. இவை ஸ்கூட்டர்களை விட அதிக திறன் மற்றும் மைலேஜ் வழங்கின.

    இதன் காரணமாக மோட்டார்சைக்கிள் பிரிவில் கவனம் செலுத்த பஜாஜ் திட்டமிட்டது. இதன் காரணமாக வெளியிடப்பட்டது தான் பல்சர் 150 மற்றும் பல்சர் 180 மாடல்கள். அசத்தலான தோற்றம் மற்றும் அதிரடியான செயல்திறன் காரணமாக பல்சர் ட்வின் மாடல்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றன.

    பல்சர் 150 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் P150 மாடல் முற்றிலும் புது டிசைன், மெல்லிய ஹெட்லேம்ப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ஃபியூவல் டேன்க், ஸ்லிம் வெயிஸ்ட்லைன், அண்டர்பெல்லி எக்சாஸ்ட், க்ரிஸ்டலைன் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடல் சிங்கில் டோன் மற்றும் டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.
    • இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் ஒற்றை, fully loaded வேரியண்ட் வடிவில் கிடைக்கிறது.

    பிஒய்டி நிறுவனம் தனது அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் இந்திய விலை விவரங்களை கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி புதிய பிஒய்டி அட்டோ 3 விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் நான்கு வித நிறங்கள் மற்றும் ஒற்றை fully loaded வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்டில் ஏராளமான அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பிஒய்டி அட்டோ 3 மாடலை வாங்க இதுவரை 1500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய அட்டோ 3 மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. பிஒய்டி அட்டோ 3 மாடல் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் பெரிய க்ரோம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், ஸ்போர்ட் பம்ப்பர், 18 இன்ச் வீல்கள், பூட் லிட் மீது பிஒய்டி லோகோ இடம்பெற்று இருக்கிறது. பிஒய்டி அட்டோ 3 மாடலில் கீலெஸ் எண்ட்ரி, போர்டபில் கீ கார்டு, மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வித்தியாசமான வடிவங்களில் டேஷ்போர்டு, ஏசி வெண்ட்கள், டோர் ஹேண்டில் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரில் 12.8 இன்ச் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவைகளுக்கான அப்டேட் வழங்கப்படுகிறது. புதிய அட்டோ 3 மாடலை 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் மூலம் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.5 முதல் 10 மணி நேரம் ஆகும். 80 கிலோவாட் டிசி சிசிஎஸ் 2 பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் ஆகும்.

    • ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    "ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் ஒற்றை, fully loaded வேரியண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது நான்காவது எலெக்ட்ரிக் கார்- பென்ஸ் EQB மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் விலை ரூ. 74 லட்சதத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பென்ஸ் GLB மாடல் விலையையும் மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்தது. இந்த மாடலின் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.

    முழுமையான எலெக்ட்ரிக் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் EQB ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், பிளான்க்டு-ஆஃப் கிரில், ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடலில் 66.4 கிலோவட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 225 ஹெச்பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காருடன் AC மற்றும் DC சார்ஜிங் வசதி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    • சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
    • புதிய சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு பற்றிய புது தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தின் உற்பத்தியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. ஜனவரி 19, 2023 முதல் சிம்பில் விஷன் 1.0 ஆலையில் இருந்து சிம்பில் ஒன் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கவுள்ளது.

    சமீபத்தில் தீன் சிம்பில் எனர்ஜி நிறுவனம் சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க துவங்கியது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி ஆலையை கட்டமைக்க சிம்பில் எனர்ஜி நிறுவனம் ரூ. 100 கோடிக்கும் அதிக தொகையை முதலீடாக செலவழித்து இருக்கிறது.

    "நாங்கள் திட்டமிடலில் இருந்து நிறைவேற்றுதல், ப்ரோடோடைப்பில் இருந்து உற்பத்திக்கு, கனவுகளில் இருந்து நிஜத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறுகிறோம்," என சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுகாஷ் ராஜ்குமார் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர உற்பத்தியை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். ஓசூரில் உள்ள முற்றிலும் புது ஆலையில் உற்பத்தி பணிகள் ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என சிம்பில் எனர்ஜி அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஏத்தர் 450X, ஒலா S1 சீரிஸ் மற்றும் இதர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சிம்பில் எனர்ஜி உருவாக்கிய முதல் தயாரிப்பு சிம்பில் ஒன் என அழைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4,5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிமீ வேகத்திலும், முழு சார்ஜ் செய்தால் 236 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது கார் விவரங்களை தொடர்ந்து அதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
    • புதிய ஹூண்டாய் கார் கனெக்டெட் டெயில் லேம்ப்களுடன் குறிப்பிடத்தக்க வெளிப்புற மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கிராண்ட் i10 நியோஸ் மாடலை இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கிராண்ட் i10 நியோஸ் மாடல் தற்போது விளங்குகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் தனது i20 பிரீமியம் ஹேச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    முற்றிலும் புதுிய i20 மாடல் நவம்பர் 2020 ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது ஃபேஸ்லிஃப்ட இந்த காருக்கான முதல் மிக முக்கிய அப்டேட் ஆகும். தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பர் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், இண்டீரியரை பொருத்தவரை இந்த காரில் டிரன்க் மற்றும் ரியர் பம்ப்பர் காணப்படுகிறது. இத்துடன் எல்இடி லைட்னிங் ஸ்ட்ரிப்கள் டெயில் லைட்களுடன் இணைகிறது. இது ஹூண்டாய் வென்யு மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ஹூண்டாய் i20 மாடலின் கேபினிலும் அதிக அம்சங்கள் வழங்கப்படும் என எகிர்பார்க்கலாம்.

    • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் ஒன்று ஆகும்.

    பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை கொண்டு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் இந்தியாவில் அமோக விற்பனையை பதிவு செய்து வந்தது. எனினும், போதுமான அப்கிரேடுகள் இன்றி இதன் விற்பனை சரிய தொடங்கியது. பின் இந்த கார் இந்திய சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டது.

    இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் நிறுவனம் இந்தியா கொண்டு வரும் டஸ்டர் மாடல் 7 சீட்டர் வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

    எனினும், இது பற்றிய மற்ற தகவல்களில் ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யாது என்றே கூறப்படுகிறது. இதுவரை புதிய டஸ்டர் மாடல் இந்தியா வருவது பற்றி ரெனால்ட் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. டஸ்டர் மாடல் மீண்டும் இந்தியா வரும் பட்சத்தில் அது 5-சீட்டர் வேரியண்டாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இதன் படி CMF-B பிளாட்ஃபார்மில் உருவாகும் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்த தலைமுறை டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • நாடு முழுக்க எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்கும் பணிகளில் ஒலா எலெக்ட்ரிக் தற்போது மும்முரம் காட்டி வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் 11 நகரங்களில் 14 புதிய எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இவை வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட உள்ளன. பெங்களூருவில் மூன்று, பூனேவில் இரண்டு, ஆமதாபாத், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, போபால், நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் ஒன்று என்ற கணக்கில் புது எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    புதிய எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை சேர்க்கும் பட்சத்தில் தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க 50 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை இயக்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 200-ஆக அதிகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    இந்த செண்டர்களின் மூலம் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை அனுபவிக்க செய்கின்றன. மேலும் இங்கு சென்று ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ரைடு செய்யலாம்.

    "ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் எலெக்ட்ரிக் வாகன ப்ரியர்களுக்கு எங்களின் வாகனங்களை தொட்டு பார்த்து அனுபவித்தல், சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வது, வாகனம் வாங்குவதற்கு முன்பும், பின்பும் எழும் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வது என எல்லாவற்றுக்கும் ஏற்ற தளமாக விளங்குகின்றன," என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவன மூத்த விளம்பர பிரிவு அலுவலர் அன்ஷுல் கந்தெல்வால் தெரிவித்தார்.

    "நாட்டில் ஆஃப்லைன் பிரிவில் எங்களின் கால்தடத்தை வேகமாக விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 200 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் சிட்ரோயன் நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் மாடலாக C3 ஹேக்பேக்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது.

    தற்போது சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் e-C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை சிட்ரோயனின் தாய் நிறுவனமான ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லஸ் டவெரிஸ் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய எலெக்ட்ரிக் காரின் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும், 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் வெளியீடு நடைபெறும் என கூறப்படுகிறது. வெளியீட்டு விவரத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைவாக நிர்ணயம் செய்வதற்கான விலை வடிவத்தை உருவாக்க ஸ்டெலாண்டிஸ் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    குறைந்த விலை, வாகனத்தின் தரம் என பல்வேறு இலக்குகளை எவ்வளவு வேகமாக அடைகிறோம் என்பதை பொருத்து இந்தியாவில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்வது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை குறைப்பது மிகப் பெரிய சவால் என அவர் மேலும் தெரிவித்தார்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • மஹிந்திரா நிறுவத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலான XUV700 இந்திய சந்தையில் அடிக்கடி ரிகால் செய்யப்பட்டு வருகிறது.

    மஹிந்திரா XUV700 இந்திய சந்தையில் அதிகம் ரிகால் செய்யப்பட்ட கார்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஃபிளாக்‌ஷிப் மாடலான XUV700 மீண்டும் ரிகால் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை காரில் ஏற்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

    கார்களில் ஏற்படும் பிரச்சினைகளை அடிக்கடி கண்டறிந்து ரிகால் மூலம் சரி செய்வது நல்ல முயற்சி தான் என்ற போதிலும், ஃபிளாக்‌ஷிப் மாடலில் இத்தனை குறைகளை போதிய அளவுக்கு சோதனை செய்யாமல் வெளியிட்டதோ என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு எழ துவங்கி விட்டது.

    மஹிந்திரா XUV700 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தில் சஸ்பென்ஷன் சத்தம் கேட்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை சரி செய்யவே தற்போது ரிகால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மஹிந்திரா நிறுவனம் தனது டீலர்களுக்கு தொழில்நுட்ப சர்வீஸ் சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் XUV700 மாடலை ரிகால் செய்து சஸ்பென்ஷன் பாகங்களை மாற்ற வலியுறுத்தி இருக்கிறது.

    இதில் முன்புறம் லோயர் கண்ட்ரோல் ஆர்ம் மற்றும் ரியர் கண்ட்ரோல் புஷ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்றிக் கொடுக்க வேண்டும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இம்முறை ரிகால் செய்யப்படும் மஹிந்திரா XUV700 யூனிட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    • வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சமீபத்தில் தான் வால்வோ தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.

    வால்வோ இந்தியா நிறுவனம் உள்நாட்டில் அசெம்பில் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் முதல் யூனிட்டை சமீபத்தில் தான் வெளியிட்டது. தற்போது XC40 ரிசார்ஜ் மாடலின் இந்திய விலையை உயர்த்துவதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    விலை உயர்வை அடுத்து வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை தற்போது ரூ. 56 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காரின் முந்தைய விலையை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும். எலெக்ட்ரிக் மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், அதன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    வால்வோ XC60 B5 அல்டிமேட் எஸ்யுவி மற்றும் XC90 B6 அல்டிமேட் எஸ்யுவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இரு கார்களின் விலை தற்போது முறையே ரூ. 66 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 96 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே காரின் பெட்ரோல் மைல்டு-ஹைப்ரிட் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் சர்வதேச சந்தையில் உதிரி பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் நவம்பர் 24 ஆம் தேதி வரை கார்களை முன்பதிவு செய்தவர்கள் இந்த விலை உயர்வில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வால்வோ உறுதிப்படுத்தி விட்டது.

    ×