என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தியது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வின் படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் துவக்க விலை தற்போது ரூ. 2,14,887 என மாறி இருக்கிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    ராயல் என்பீல்டு ஹிமாலயன் புதிய விலை விவரம்

    மிரேஜ் சில்வர் ரூ. 2,14,887
    கிரேவல் கிரே ரூ. 2,14,887
    லேக் புளூ ரூ. 2,18,706
    ராக் ரெட் ரூ. 2,18,706
    கிரானைட் பிளாக் ரூ. 2,22,526
    பைன் கிரீன் ரூ. 2,22,526

    விலை உயர்வு தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் தவிர முற்றிலும் புது பிளாட்பார்மில் மற்றொரு அட்வென்ச்சர் டூரர் மாடலை ராயல் என்பீல்டு உருவாக்கி வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    டாடா நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது சோதனை செய்யப்படுவது நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் தற்போதைய நெக்சான் இ.வி. போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய மேம்பட்ட மாடலின் உள்புறமும் தற்போதைய மாடலில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஆட்டோ ஹெட்லேம்ப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

     டாடா நெக்சான் இ.வி.

    தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் 125 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

    ஸ்கோடா நிறுவனம் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் அண்ட் கிலிமெண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.

    காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து வரும் பெரும்பாலான மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி டியாகோ, டிகோர், நெக்சான், அல்ட்ரோஸ், ஹேரியர் மற்றும் சபாரி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஜனவரி மாத சலுகைகளின் கீழ் அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 31, 2022 வரை மட்டுமே கிடைக்கும்.

     டாடா கார்

    டாடா டியாகோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம், 2022 மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகோர் 2022 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் தற்போது ரூ. 17,500 வரையிலான சிறப்பு சலுகைகளுடன் கிடைக்கிறது. டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரமும், ஹேரியர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா சபாரி மாடல் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த பன்ச் மாடலுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
    யமஹா நிறுவனம் தனது எப்.இசட். எக்ஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் திடீரென மாற்றி இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் எப்.இசட். எக்ஸ் மாடலின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. அதன்படி யமஹா எப்.இசட். எக்ஸ் துவக்க விலை தற்போது ரூ. 1,26,300, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2 ஆயிரம் அதிகம் ஆகும். 

    சமீபத்தில் யமஹா தனது எப்.இசட். எஸ் மாடலை அப்டேட் செய்ததை போன்று எப்.இசட். எக்ஸ் மாடல் எக்ஸ்.எஸ்.ஆர். 155 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வடிவமைப்பு ரக்கட் டிசைன், டூயல் பர்பஸ் டையர்கள், போர்க் கெய்டர்கள், என்ஜின் சம்ப் கார்டு மற்றும் ரெட்ரோ-ஸ்டைல் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     யமஹா எப்.இசட். எக்ஸ்

    ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படும் யமஹா எப்.இசட். எக்ஸ் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மேட் காப்பர், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் ஸ்போர்ட் அனுபவத்தை வழங்கும் நோக்கில் 01 எனும் கிராபிக்ஸ் உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஜனவரி 2022 மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அனைத்து கார் மாடல்களின் விலை ரூ. 35,596 வரையிலான தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

     ஹோண்டா கார்

    சலுகை விவரங்கள்

    ஹோண்டா அமேஸ் - அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம்
    ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. - அதிகபட்சம் ரூ. 26 ஆயிரம்
    ஹோண்டா ஜாஸ் - அதிகபட்சம் ரூ. 33,147

    இந்த சலுகைகள் தள்ளுபடி, எப்.ஒ.சி. அக்சஸரீஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களாக லாயல்டி போனஸ் மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்ட  சலுகைகள் ஜனவரி 31, 2022 வரை வழங்கப்படுகிறது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆண்டு வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.


    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் 1,724 யூனிட்களை விற்பனை செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டு வால்வோ நிறுவனம் 1361 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.60, வால்வோ விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.40 அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

     வால்வோ கார்

    கடந்த ஆண்டு முதல் வால்வோ நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. டீசல் என்ஜின் மாடல்களுக்கு மாற்றாக எஸ்90, எக்ஸ்.சி.60 மற்றும் எக்ஸ்.சி.90 பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் கார்களை வால்வோ அறிமுகம் செய்தது. 
    டாடா சியாரா மாடல் முழுமையான எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியாரா மாடலை மீண்டும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இம்முறை இந்த மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகமாகிறது. புதிய சியாரா இ.வி. மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் சியாரா மாடல் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஐ.சி. மற்றும் இ.வி. வெர்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய மாடல் முழுமையான எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     டாடா சியாரா இ.வி.

    இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'பார்ன் எலெக்ட்ரிக்' பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த பிளாட்பார்ம் எதிர்கால டாடா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போதைய நெக்சான் மற்றும் டிகோர் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கார்களின் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதில் பேட்டரி பேக் பிளேஸ்மெண்ட், எலெக்ட்ரிக் மோட்டார் ஹவுசிங் மற்றும் இதர பாகங்கள் இடம்பெறுகிறது.
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலையை இம்மாதம் உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் புதிய விலை அறிவிக்கப்பட்டது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு புதிய பேஸ் வேரியண்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பார்ச்சூனர் மாடலின் விலை ரூ. 1.10 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     டொயோட்டா பார்ச்சூனர்

    தற்போது பார்ச்சூனர் மாடலின் விலை முன்பு இருந்ததை விட ரூ. 66 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டொயோட்டா தற்போது விற்பனை செய்யும் அர்பன் குரூயிசர், கிளான்ஸா மற்றும் வெல்ஃபயர் போன்ற மாடல்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் ஹிமாலன் 450 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

    புதிய என்பீல்டு ஹிமாலன் 450 கே1 பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இதில் சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு 450 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 40 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. வழங்கும் திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    தற்போதைய அட்வென்ச்சர் மாடலில் ராயல் என்பீல்டு 23 பி.ஹெச்.பி. திறன் வழங்கி வருகிறது. அதன்படி புதிய மாடலில் கூடுதலாக 17 பி.ஹெச்.பி. திறன் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மற்றும் பெனலி டி.ஆர்.கே. 502 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    யமஹா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 4 மாடல் இந்திய சந்தையில் 155சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.


    இந்திய சந்தையில் யமஹாவின் பிரபல 155சிசி மோட்டார்சைக்கிள் சீரிஸ் ஆர்15 மாடலின் வெர்ஷன் 4 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1.67 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய யமஹா ஆர்14 வி4 ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    யமஹாவின் ஆர்15 வி4 மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். புதிய யமஹா ஆர்15 வி4 மாடலில் உள்ள அம்சங்கள், இதன் பயன்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.

     யமஹா ஆர்15 வி4

    யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 அம்சங்கள்

    பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு
    திறன் - 10,000 ஆர்.பி.எம்.-இல் 18.4 பி.ஹெச்.பி. 
    இழுவிசை - 7500 ஆர்.பி.எம்-இல் 14.2 நியூட்டன் மீட்டர்
    டிரான்ஸ்மிஷன் - கான்ஸ்டண்ட் மெஷ், 6 ஸ்பீடு 
    சேசிஸ் - டெல்டா பாக்ஸ்
    டையர்கள் முன்புறம் / பின்புறம் - 100/80 17M/C 52P டியூப்லெஸ் / 140/70 R17M/C 66H ரேடியல் டியூப்லெஸ் 
    வீல்பேஸ் - 1325 மில்லிமீட்டர்
    கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மில்லிமீட்டர்
    சீட் உயரம் - 725 மில்லிமீட்டர்
    எடை - 142 கிலோ
    பியூவல் டேன்க் கொள்ளளவு - 11 லிட்டர்

    டிசைன்:

    புதிய ஆர்15 ஒட்டுமொத்த தோற்றம் யமஹாவின் ஆர் சீரிஸ் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 2021 யமஹா ஆர்7 மாடலின் பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் மிக கூர்மையான தோற்றம், பை-ஃபன்ஷனல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் உள்ளது. இதில் உள்ள எல்.இ.டி. பொசிஷன் லைட்கள் கண்களை போன்றே காட்சியளிக்கின்றன. இவற்றின் நடுவே ஹெட்லைட் உள்ளது.

    யமஹா ஆர்15 வி4

    இந்த பைக் பக்கவாட்டு பகுதிகள் ஒட்டுமொத்த வடிவமைப்புடன் ஒன்றி இருக்கிறது. இத்துடன் டூயல் டோன் பெயிண்ட், மேட் மற்றும் கிளாஸ் எஃபெக்ட் உள்ளிட்டவை ஆர்15 வெர்ஷன் 4 மாடலுக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்குகிறது. இதன் பூயூவல் டேன்க் மீது உள்ள சிறு சிறு மாற்றங்கள் பைக்கை ஓட்டும் போது புதிய அனுபவத்தை வழங்குகிறது. புதிய மாடலிலும் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     யமஹா ஆர்15 வி4

    யமஹா ஆர்15 வி4 டெயில் பகுதி ஆர்7 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஆர்15 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே, புளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் போன், எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். இத்துடன் யமஹாவின் வை கனெக்ட் ஆப் மோட்டார்சைக்கிள் பயன்பாடு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குகிறது.

    செயல்திறன்:

    யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் என்ஜின் செயல்திறனை குறைக்காமல் சீராக இயங்க வைக்கிறது. 

     யமஹா ஆர்15 வி4 என்ஜின்

    இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ளதை விட 0.2 பி.ஹெச்.பி. மற்றும் 0.1 நியூட்டன் மீட்டர் டார்க் குறைவு ஆகும். எனினும், இதன் அக்செல்லரேஷன் சற்று வேகமாகவே உள்ளது.

    புதிய ஆர்15 வி4 மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 47 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகலாம்.

    ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:

    யமஹா ஆர்15 மாடலில் அட்ஜஸ்ட் செய்ய முடியாத யு.எஸ்.டி. போர்க் உள்ளது. புதிய ஆர்14 கட்டுப்படுத்த மிக சிறப்பாகவே உள்ளது. அதிவேகமாக செல்லும் போது பைக் அதிக இரைச்சலின்றி சீறிப்பாய்கிறது. இந்த மாடலில் ரி-இன்போர்ஸ் செய்யப்பட்ட சப்-ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர சேசிஸ்-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இதன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம் மற்றும் சஸ்பெஷன் இணைந்து செயல்படுகிறது. கார்னெரிங் செய்வது ஆர்15 மாடலில் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. வளைவுகளில் ஓட்டுவது கூர்மையாக இருக்கிறது. எனினும், இதில் சிறந்த கண்ட்ரோல் பெற பயிற்சி அவசியமாகிறது. நகர நெரிசல்களில் சிக்காமல் நுழைந்து செல்ல புதிய ஆர்15 வி4 சவுகரியமாக உள்ளது.

     யமஹா ஆர்15 வி4

    புதிய வெர்ஷன் 4 மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க உதவுகிறது. இதில் உள்ள பிரேக்கிங் சிஸ்டம் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் யமஹா ஆர்15 வி4 விலை உயர்த்தப்பட்டது. அதன்படி இதன் விலை ரூ. 1,72,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    யமஹா ஆர்15 வி4 மாடல் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையின் 155சிசி பிரிவில் களமிறங்கி இருக்கும் மற்றொரு ஸ்டிரீட் ஸ்போர்ட் மாடல் ஆகும்.

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ஸ்டோகா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    பெட்ரோல் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் கார் 2023 ஆண்டு எப்.பி.யு. (ஃபுல்லி பில்ட் யூனிட்) வடிவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்கோடா எலெக்ட்ரிக் கார்

    'என்யாக் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது வரிகள் சேர்த்து பிரீமியம் மாடலாக அறிமுகமாகும். இந்த எலெக்ட்ரிக் மாடல் கொண்டு இந்திய சந்தையில் முன்னோட்டம் பார்க்க முடியும்,' என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
    ×