என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்2எக்ஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெச்2எக்ஸ் மைக்ரோ எஸ்.யு.வி. கான்செப்ட் காரினை கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தியது. இந்த கார் டாடா ஹான்பில் என அழைக்கப்படுகிறது. டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா ஃபிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் ஹெச்2எக்ஸ் கார் புதிய ஸ்பை படங்கள் லீக் ஆகியுள்ளது.
ஸ்பை படங்களின் படி காரில் வீல் ஆர்ச்கள் சதுரங்க வடிவம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பின்புறம் டெயில் லைட்கள் கான்செப்ட் வடிவத்தில் இருந்ததை போன்றே காட்சியளிக்கின்றன. இந்த காரில் பின்புற விண்ட்ஷீல்டு வைப்பர், பின்புற கதவுகளுக்கான கைப்பிடி சி பில்லரில் பொருத்தப்படும் என தெரிகிறது.

வெளிப்புறம் பார்க்க ஹேரியர் காரில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டடுக்கு ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் ஹனிகாம்ப் வடிவமைப்பு கொண்ட மெல்லிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இத்துடன் ஸ்லோப்பிங் ரூஃப்லைன் மற்றும் ரைசிங் விண்டோ லைன் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
புதிய டாடா கார் அந்நிறுவனத்தின் நெக்சான் மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. விற்பனைக்கு வரும் முதல் நாளில் இருந்தே இந்த கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு குறியீடு பெற்றிருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
புகைப்படம் நன்றி: MotorBeam
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பி.எஸ்.6 ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள், நிறங்கள் மற்றும் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
பி.எஸ்.6 ஹிமாலயன் மாடல்: கிராவெல் கிரீன், லேக் புளூ மற்றும் ராக் ரெட் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. மூன்று புதிய நிறங்கள் தவிர கிரானைட் பிளாக், ஸ்லீட் கிரே மற்றும் ஸ்னோ வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய நிறங்களுடன், பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். - ஏ.பி.எஸ். வசதியை ஆக்டிவேட் மற்றும் டி-ஆக்டிவேட் செய்யும் வசதி. இத்துடன் ஹசார்டு டாகிள் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் 411சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் பற்றி ராயல் என்ஃபீல்டு இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ்.4 மாடலில் உள்ள என்ஜின் 24 பி.ஹெச்.பி. பவர், 32 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இவற்றுக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்திய சந்தையில் வெற்றிகரமான மாடலாக இருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அந்நிறுவனம் டீசல் வேரியண்ட் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது.
இந்நிலையில், இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கார் பி.எஸ்.6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்ப்பர், புதிய வடிவமைப்பு கொண்ட முன்புற கிரில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் முன்புற பம்ப்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பம்ப்பரின் இருபுறங்களில் ஃபாக்லைட்கள் வழங்கப்படலாம்.
முன்புறம் போன்றே காரின் பின்புறத்திலும் புதிய டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் விரும்புவோர் வாங்கிக் கொள்ளும் வகையில் கூடுதல் அம்சமாக வழங்கப்படலாம். உள்புறம் புதிய நிறத்தாலான இருக்கைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் பலேனோ மாடலில் உள்ள புதிய ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ யூனிட் புதிய காரிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்கள் மட்டுமின்றி, ஓட்டுனரின் செயல்பாடு மற்றும் எரிபொருள் பயன்பாடு போன்ற விவரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுனமான கே.டி.எம். இந்தியாவில் அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கான விநியோகம் அடுத்த மாதம் துவங்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் மூலம் கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் அட்வென்ச்சர் ரக மாடல்களின் பிரிவில் களமிங்கி இருக்கிறது.
கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மாடலில் குறைந்த எடை கொண்ட டிரெலிஸ் சேசிஸ், முன்புறம் 170 எம்.எம். சஸ்பென்ஷன், பின்புறம் 177 எம்.எம். மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 எம்.எம். அளவிலும், நீண்ட வீல்பேஸ், நீட்டிக்கப்பட்ட விண்ட்ஷீல்டு, என்ஜினை பாதுகாக்கும் பாஷ் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மாடலில் இ.சி.யு. (எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்) வழங்கப்பட்டுள்ளது. இது மோட்டார்சைக்கிளை சிறப்பாக கட்டுப்படுத்த உதுவுகிறது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ்., இருவழி க்விக்ஷிஃப்டர், கே.டி.எம். மை ரைடு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, முழுமையான டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, DOHC சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் இருந்து நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 5.40 லட்சம் பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 5.10 லட்சம் வாகனங்களாக இருந்தது. அந்த வகையில் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் கார்கள் ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்து 4.05 லட்சமாக இருக்கிறது. பன்முகப் பயன்பாட்டு வாகனங்கள் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்ந்து 1.34 லட்சமாக உள்ளது. எனினும் வேன்கள் ஏற்றுமதி 17 சதவீதம் சரிவடைந்து (2,810-ல் இருந்து) 2,321-ஆக குறைந்து இருக்கிறது.
கணக்கீட்டுக் காலத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மொத்தம் 1.45 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் 15 சதவீத வளர்ச்சி கண்டு முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து ஃபோர்டு இந்தியாவின் ஏற்றுமதி 13 சதவீதம் உயர்ந்து 1.06 லட்சமாக உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏற்றுமதி 1.7 சதவீதம் குறைந்து 75,948 கார்களாக இருக்கிறது.

நிசான் மோட்டார் ஏற்றுமதி 40 சதவீதம் வளர்ச்சி கண்டு 60,739-ஆக இருக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 54,863-கார்களாக உள்ளது. ஃவோக்ஸ்வேகன் இந்தியா ஏற்றுமதி 40,021- ஆக இருக்கிறது. கியா மோட்டார்ஸ் 12,496 கார்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.
ரெனால்ட் கார்கள் ஏற்றுமதி 12,096-ஆக உள்ளது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் 10,017 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் ஏற்றுமதி 8,422-ஆக இருக்கிறது. ஹோண்டா கார்ஸ் ஏற்றுமதி 3,316-ஆக உள்ளது.
உள்நாட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது 20 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டியாகோ மற்றும் டிகோர் போன்ற கார்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று கார்களுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஃபேஸ்லிஃப்ட் கார்களும் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவில் உருவாக்கப்படுகின்றன. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் நெக்சான் இ.வி. மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வடிவமைப்பு டாடாவின் அல்ட்ரோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் காரில் குரோம் லைன் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பொனெட் வழங்கப்படலாம். இரண்டு மாடல்களிலும் ஸ்போர்ட் ரீடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், புதிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என டாடா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும், வாகனங்களின் விவரங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
டாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் வெர்ஷன் விலை ரூ. 60,000 துவங்கி ரூ. 90,000 வரையிலும், நெக்சான் டீசல் வேரியண்ட் விலையில் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் எம்.ஜி. இசட்.எஸ். மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த காரின் விலையும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும், எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதன் முன்பதிவுகள் டிசம்பர் 21, 2019 இல் துவங்கப்பட்டது.
இந்நிலையில், முன்பதிவு துவங்கிய ஒரு மாதத்திற்குள் எம்.ஜி. இசட்.எஸ். காரை வாங்க சுமார் 2300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு அறிமுகமான ஹெக்டார் மாடல் மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இரண்டாவது மாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டு நிகழ்விலேயே புதிய காரை வாங்கும் முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக விலை அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான இரண்டாம் கட்ட முன்பதிவில் விலை மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.
எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏத்தர் நிறுவனத்தின் புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஜனவரி 28-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 450எக்ஸ் ஸ்கூட்டரில் முந்தைய ஏத்தர் 450 ஸ்கூட்டரில் உள்ளதை விட கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்வைட் கோட்களின் மூலம் புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. மேலும் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் டீசர் வீடியோக்களையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசர்களின் மூலம் புதிய பிரீமியம் ஸ்கூட்டர் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஏத்தர் 450 ஸ்கூட்டர் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிக செயல்திறன் வழங்கும் 2.4kWh, IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி மற்றும் பி.எல்.டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இது 7.1 பி.ஹெச்.பி. பவர், 20.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் திறன் அளவுக்கு ஸ்கூட்டரை சார்ஜ் செய்திட முடியும்.
ஏத்தர் 450 மாடலில்: இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள், 65 கிலோமீட்டர்கள் மற்றும் 55 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வழி செய்கின்றன.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் டி.வி.எஸ். நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓசுர் பகுதியை சுற்றி சோதனை செய்யப்படுகிறது. ஓசுரில் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
ஸ்பை வீடியோவில் ஸ்கூட்டர் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்கூட்டர் இயங்கும் போது ஏற்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் சத்தத்தை கொண்டு இது எலெக்ட்ரிக் வாகனம் தான் என கூறப்படுகிறது.

2018 இல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டி.வி.எஸ். நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் வெர்ஷனை க்ரியான் என்ற பெயரில் அறிமுகம் செய்து காட்சிக்கு வைத்தது. இந்த ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்கும் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய இ.வி. ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும், இதனை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் போதும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: ElectricVehicleweb
ஆடி நிறுவனத்தின் புதிய கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ8 எல் ஃபிளாக்ஷிப் செடான் கார் இந்தியாவில் பிப்ரவரி 3-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நான்காம் தலைமுறை ஏ8 எல் கார் ஃவோகஸ்வோகன் குழுமத்தின் MLB இவோ பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
இதனால் புதிய கார் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கும். புதிய ஏ8 எல் காரின் முன்புறம் பிரம்மாண்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய ஏ8 மாடலில் சிறிய ஹெட்லேம்ப் மற்றும் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய காரில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் பெரிய கிரில் வழங்கப்படலாம்.

புதிய ஏ8 எல் காரில் மேம்பட்ட பம்ப்பர்கள் காரின் இருபுறங்களிலும் வழங்கப்படலாம் என்றும் இத்துடன் புதிய டெயில் லைட்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. காரின் உள்புறத்தில் புதிய இன்டீரியர் எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம், ஹீட்டெட் சீட்கள், மசாஜிங் சீட்கள், ட்வின் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பேங் மற்றும் அலுஃப்சென் சரவுண்ட் மியூசிக் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இருக்கை மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை லெதர் மூலம் உருவாக்கப்படுகின்றன.
ஆடி ஏ8 எல் கார் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பாதுகாப்பிற்கு பல்வேறு ஏர்பேக், டிரைவிங் மோட்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ பி.எஸ். 6 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பி.எஸ்.6 இகோ மாடல் விலை ரூ. 3.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இகோ பி.எஸ்.6 மாடலின் என்ஜின் தவிர சிறுசிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இகோ மாடலில் மேம்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மாருதி நிறுவனத்தின் மற்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 101 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இகோ சி.என்.ஜி. வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. இதன் சி.என்.ஜி. வேரியண்ட் லிட்டருக்கு 21.8 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி இகோ கார் பல்வேறு வேரியணட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கார் முதன்முதலில் 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ். 6 ரக மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் டி.வி.எஸ். நிறுவனம் தனது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பி.எஸ்.6 வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாதியுள்ளது.
அதன்படி இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ். 6 மாடல் ஜனவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் சில அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பி.எஸ்.6 ஆர்.ஆர். 310 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பெயின்ட்டிங் மற்றும் ரேசிங் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம். தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ளதை விட புதிய மோட்டார்சைக்கிளில் சிறப்பான டையர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 பி.எஸ்.6 மாடலில் 312சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம். தற்போதைய மாடலில் 34 பி.ஹெச்.பி. @9700 ஆர்.பி.எம். பவர், 27.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் குறையலாம் என தெரிகிறது.
இவை தவிர மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள். எல்.இ.டி. டெயில் லைட்கள், டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஆர்.ஆர்.310 பி.எஸ்.4 மாடல் ரூ. 2.27 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ்.6 மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் விலை ரூ. 2.50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






