என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மஹிந்திரா நிறுவனம் 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு வரும் மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருந்தார்.

    அந்த வகையில் முதற்கட்ட வென்டிலேட்டர் ப்ரோடோடைப்களை மஹிந்திரா நிறுவன குழுவினர் உருவாக்கி இருப்பதாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதனை செய்து முடிக்க 48 மணி நேரங்களே ஆனதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

    பல மணி நேர ஆய்வுக்கு பின் இது சாத்தியமானதாக இதனை உருவாக்கிய குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். வென்டிலேட்டர் உருவாக்கும் பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவினை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார்.

    ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    முதற்கட்ட வென்டிலேட்டர் ப்ரோடோப்களை தொடர்ந்து மேலும் மூன்று ப்ரோடோடைப் மாடல்களை மும்பை மற்றும் இகத்பூரில் உள்ள குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர். மூன்று புதிய ப்ரோடோப்களை அடுத்த மூன்று நாட்களில் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

    மஹிந்திரா நிறுவன குழுவினர் மேற்கொள்ளும் வென்டிலேட்டர்களுக்கான கட்டணம் ரூ. 7500 என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்து இருக்கிறார். வழக்கமாக வென்டிலேட்டர்களை உருவாக்க ஐந்து முதல் பத்து லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஆடம்பர கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்தியாவில் புதிய எக்ஸ்7 மாடல் வெளியானதும் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடல்: கூப், கன்வெர்டிபில் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட கிரான் கூப் என மூன்றுவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இவற்றில் கிரான் கூப் வெர்ஷன் மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது டாப் எண்ட் எம்8 வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.

    பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப்

    இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடலில், 840ஐ 6 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 340 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டாப் எண்ட் எம்8 மற்றும் எம்8 காம்படீஷன் மாடல்களில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இவற்றில் எம்8 மாடல் 590 பி.ஹெச்.பி. பவர் மற்றும் எம்8 காம்படீஷன் மாடல் 616 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

    பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் தற்போதைய பிளாக்‌ஷிப் மாடலான 7 சீரிஸ் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்படும். இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் போர்ஷ் பனமெரா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.டி. 4-டோர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இலவச சர்வீஸ் காலக்கெடுவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் காலக்கெடுவினை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    அந்த வகையில் கியா மோட்டார்ஸ் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜூலை மாதம் வரை இலவச சர்வீஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும். இலவச சர்வீஸ் சேவை நீட்டிப்பு பற்றிய முழு விவரங்களை கியா மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. 

    கியா சொனெட்

    இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. முதல் வாகனமாக கியா செல்டோஸ் கார் ஆகஸ்ட் 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதை தொடர்ந்து கியா கார்னிவல் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

    புதிய கியா கார்னிவல் மாடலின் விலையை செல்டோஸ் மாடலை விட அதிகமாக நிர்ணயித்து இருக்கிறது. புதிய கார்னிவல் எம்.பி.வி. மாடல் ஓட்டுனர் இருக்கையை சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் இருக்கைகள் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2020 ஃபேட் பாய் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.



    ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் 2020 ஃபேட் பாய் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் இந்த மாதத்தில் அப்டேட் ஆகியிருக்கும் மூன்றாவது மாடல் ஆகும். முன்னதாக. ஃபார்டி-எய்ட் மற்றும் ஃபார்டி-எய்ட் ஸ்பெஷல் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டன.

    புதிய 2020 ஃபேட் பாய் குரூயிசர் மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 18.25 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள், ஸ்டான்டர்டு மில்வாக்கி-எய்ட் 107 என்ஜின் மற்றும் சக்திவாய்ந்த மில்வாக்கி-எய்ட் 114 யூனிட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.10 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில், ஹார்லி டேலிட்சனின் எலெக்டிரானிக் சீக்வென்ச்சுவல் போர்ட் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய்

    2020 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் மாடலின் மில்வாக்கி-எய்ட் 107 என்ஜின் 1745சிசி வி ட்வின் ஏர் கூல்டு யூனிட் ஆகும். இது 144 என்.எம். டார்க் @3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. பெரிய மில்வாக்கி-எய்ட் 114 என்ஜின்  1868சிசி வி ட்வின் ஏர் கூல்டு யூனிட் ஆகும். இது 156 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய ஃபேட் பாய் மோட்டார்சைக்கிளின் இரண்டு வேரியண்ட்களும் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. அந்த வகையில் மில்வாக்கி-எய்ட் 107 மாடல் விவிட் பிளாக், ஸ்ப்ரூஸ், பரக்குடா சில்வர், ரிவர் ராக்கி கிரே / விவிட் பிளாக் & பரக்குடா சில்வர்  / பிளாக் டெனிம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    மில்வாக்கி-எய்ட் 114 மாடல் ஸ்டிலெட்டோ ரெட், மிட்நைட் புளூ மற்றும் செஃபர் புளூ / பிளாக் சன்குளோ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரூ. 6400 கோடி மதிப்பிலான பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து வருகின்றன. 

    மாருதி சுசுகி, மஹந்திரா, டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்டவை தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. 

    எனினும், பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்களின் பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளது. முந்தைய அரசு அறிவிப்பின் படி ஏப்ரல் 1, 2020 முதல் நாட்டில் பி.எஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

    வாகனங்கள்

    தற்சமயம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் அனைத்து விற்பனையகங்களும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் நாட்டில் ரூ. 6400 கோடி மதிப்பிலான பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பி.எஸ். 4 வாகனங்களை விற்பனை செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த காலக்கெடுவை மாற்றியமைத்து மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் சார்ந்த மினி எஸ்.யு.வி. மாடலின் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் மாடலை தழுவிய மினி எஸ்.யு.வி. இறுதி வடிவம் 2020-21 நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக டாடா ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இதன் இறுதி வடிவம் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் டாடா நிறுவனம் மிக குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

    புதிய மாடலில் டாடா நிறுவனம் 1.2 லிட்டர், டைரெக்ட் இன்ஜெக்ஷன், டர்போ பெட்ரோல் என்ஜின் டாப் எண்ட் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மாடல்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட்

    இது பி.எஸ்.6 ரக மூன்று சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் ஆகும். இது 84 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிரது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவாகும் இரண்டாவது வாகனமாக புதிய ஹெச்.பி.எக்ஸ். மாடல் இருக்கும் என தெரிகிறது. முதல் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வெளியிடப்பட்டது. இந்த மினி எஸ்.யு.வி. உயரமாகவும், பிரம்மாண்ட தோற்றமும் கொண்டிருக்கிறது.

    இந்த காரின் உள்புறம் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், மிதக்கும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., டூயல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் அலாரம், ஓவர் ஸ்பீடிங் அலாரம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 டீசல் மாடல் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 மாடல்களில் டபிள்யூ8 ஏ.எம்.டி. ட்ரிம் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தற்சமயம் டபிள்யூ6 ட்ரிம் மற்றும் டாப் ஆஃப் தி லைன் டபிள்யூ8 ஒ ட்ரிம்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் படி பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    மஹிந்திரா எக்ஸ்யுவி300

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய எஸ்.யு.வி. மாடலில் டூயல் டோன் கேபின், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிஸ்4 மாடல்களில் உள்ள அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், எக்ஸ்யுவி300 மாடல்கள் அனைத்திலும் பி.எஸ்.6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஐயன் 883 பி.எஸ்.6 மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    அமெரிக்க மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி டேவிட்சன் தனது ஐயன் 883 பி.எஸ்.6 மாடல்களின் விலையை அறிவித்து இருக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 9.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 மாடல்களில் 883சிசி ஏர் கூல்டு எவல்யூஷன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எலெக்டிரானிக் சீக்வென்ஷுவல் போர்ட் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது 50 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 70 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

    இதுதவிர புதிய ஹார்லி மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் முந்தைய மாடலில் இருப்பதை போன்ற ஹேன்டிள்பார் மவுன்ட் செய்யப்பட்ட எலெக்டிரானிக் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஒடோமீட்டர், டைம் ஆஃப் டே கிளாக், டூயல் ட்ரிப் மீட்டர், ஃபியூயல் இன்டிகேட்டர், லோ ஆயில் பிரெஷர் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது.

    2020 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பி.எஸ்.6 மாடல் - பிளாக் டெனிம், பரக்குடா சில்வர் டெனிம், ரிவர் ராக் கிரே மற்றும் சார்ச்டு ஆர்ஞ்சு சில்வர் ஃபாக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிக்க டிரோன் பயன்படுத்தப்படுகிறது.



    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினிகளை தெளிக்க டிரோன்  பயன்படுத்தப்படுகிறது. கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு துறைகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் கிறுமி நாசினிகளை தெளிக்க டிரோன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கிருமி நாசினிகள் பொது இடங்களில் வேகமாக தெளிக்கப்பட்டு வருகின்றன.

    ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அரசு சார்பில் பயன்படுத்தப்படும் டிரோன்களில் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஆறு புரோப்பல்லர்கள், 15 லிட்டர்கள் வரையிலான கிருமி நாசினிகளை அடைக்குமளவு பெரிய ஸ்டோரேஜ் டேன்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த டிரோன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், டிரோனினை ஒருமுறை சார்ஜ் செய்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பின் மீது கிருமி நாசினிகளை தெளிக்க முடியும்.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் கம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.  

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா சொனெட் கான்செப்ட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் புதிய சொனெட் மாடலில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய டைகர் நோஸ் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுவது தெரியவந்து இருக்கிறது. 

    அறிமுக நிகழ்வையொட்டி சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய கியா சொனெட் மாடலின் உள்புறத்தில் செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்.பி.வி. மாடலில் இருக்கும் அம்சங்களே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கியா சொனெட்

    இதில் கியாவின் புதிய யு.வி.ஒ. கனெக்ட்டெட் தொழில்நுட்பம், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆயில் பர்னர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் கியா சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் டாடா நெக்சான், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மற்றும் ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 பொலிரோ பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ்.6 எஸ்.யு.வி. இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 7.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பி.எஸ்.4 மாடலின் விலையும் இதே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் இந்த எஸ்.யு.வி. விலை ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

    காரின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதுதவிர முன்புற ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டு கிளஸ்டரை சுற்றி பிளாக் இன்சர்ட் மற்றும் குரோம் பிட்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா பொலிரோ

    முன்புறம் போன்றே பின்புறமும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறத்தில் பொலிரோ பி.எஸ்.6 மாடலில் முன்பை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் காரிபிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் 75 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் இந்த கார் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.  இதில் பி6 ஒ மாடல் விலை ரூ. 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என கூறப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ஆர்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.



    பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பல்சர் ஆர்.எஸ். 200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைட் மற்றும் ரெட் என டூயல் டோன் நிறங்களை கொண்டிருக்கிறது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 199.5 சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும்.

    இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. @9750 ஆர்.பி.எம் மற்றும் 18.6 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 பி.எஸ்.6

    புதிய மோட்டார்சைக்கிள் தற்போதைய மாடல் தவிர, புதிய நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிளில் முந்தைய மாடல்களை போன்றே டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பார்ட்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. டெயில் லேம்ப்க, டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 பி.எஸ்.6 மாடல் கே.டி.எம். ஆர்.சி.200 மாடலுக்கு போட்டியாக அமையும். இதன் விலை முந்தைய மாடலை விட ரூ. 3000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    ×