என் மலர்
- முனியப்ப சுவாமி கோவிலில் குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது
- வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்
கரூர்,
கரூர் மண்மங்கலம் முனியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து வேல் எடுத்து வருதல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்.இதையொட்டி பரம்பரை பூசாரி கருப்பசாமி உடையணிந்து தாரை தப்பட்டைகள் முழங்க கோவிலில் இருந்து வேல் ஏந்தி ஆவேசத்துடன் வலம் வந்தார்.
பின்னர் அங்குள்ள எல்லைச்சாமியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வரிசையாக நின்று 500-க்கும் மேற்பட்ட கிடா குட்டிகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்கள். அப்போது அந்த கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சியவாறு அரிவாள் மேல் ஏறி நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
- ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு குப்பை கொட்டும் போராட்டம் நடந்தது
- கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலபட்டிணம் அவுலியா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் முறையான சாலை வசதிகள் இல்லாததாலும், கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுநீரை அலுவலக வளாகத்திற்குள் கொட்டி விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதுக்கோட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியூசி குழு கூட்டம் மாவட்ட தலைவர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய அளவில் பணி நியமனம் செய்திட வேண்டும், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அத்த கூலி வழங்கும் முறையை கைவிடவேண்டும், பண்ணை தினகூலி தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படை உயர்த்தி வழங்கிட வேண்டும், ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பணபலன்களை பணி நிறைவு நாள் அன்றே உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொதுசெயலாளர் ப.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் டி.எம்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.தர்மராஜன், கெளரவ தலைவர்கள் வீ.சிங்கமுத்து, ஏனாதி ஏ எல் இராசு, எஸ்.நாராயணன், பா.பாண்டியராஜன், ஆர்.மணிவண்ணன், பா.செளந்தரராஜ், கே.மணி, டி.ராஜா, டி.ஆர்.ரெங்கையா, ஏ.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெ உள்ளது
- வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ள இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார்அட்டை மற்றும் கல்வி ச்சான்று நகல்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்" என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்
- தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி,
தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்தவர்களில் 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சாத்தான் தெரு ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் எரி சாராய ஊரல் இருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் அந்த ஊறல் பேரல்களை கைப்படுத்தி அதில் உள்ள சுமார் 200 லிட்டர் எரி சாராய ஊறலை அழித்தனர். விசாரணையில் இந்த எரி சாராய ஊரலை போட்டிருந்த கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
- விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லட்சுமி, வார்டு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காண்பித்தனர்.
- ஜெயங்கொண்டம் அருகே கொள்ளை போன நகையை கண்டுபிடித்து தருவதாக நாடகமாடிய போலி சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை செல்லும் வழியில் உள்ள மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் மோப்பநாய் வரவழைத்து நகைகளை தேடி வந்த நிலையில், திடீரென ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், நான் பூஜை செய்து நகைகளை கண்டுபிடித்து தருவதாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்து பூஜை நடத்தினார்.
அப்போது அவர் வைத்திருந்த செல்போனை எடுத்து போனில் பேசுவது போல் நாடகமாடி உங்கள் நகை ஒரு இடத்தில் உள்ளது, அதை நானே எடுத்து அம்மனின் கழுத்தில் சாற்றுகிறேன் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர் பின்னால் சென்றனர். தோப்பில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த நகையை எடுத்து அவரே அம்மன் கழுத்தில் நகையை அணிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இவர் சென்ற பிறகு கழுத்தில் உள்ள நகையை எடுத்து பார்த்த போது நகைகள் அனைத்தும் போலி நகை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து வார்டு கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை கூறி அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவரை விசாரித்து நகையை மீட்டு தர வேண்டும் என கூறினர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் விசாரணை நடத்தி வருகின்றார்.
- அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றியகுழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில், ஒன்றியகுழு துணை தலைவர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், செந்தில்குமார், ஓன்றியகுழு உறுப்பினர்கள் வெள்ளச்சாமி (பொய்யாதநல்லூர்), முத்துசாமி (ராயம்புரம்), சரவணன் (எருத்துக்காரன்பட்டி), முருகேசன் (கடுகூர்), ராணி (ராவுத்தன்பட்டி), செந்தமிழ்செல்வி (பள்ளகிருஷ்ணாபுரம்), கண்ணகி (அஸ்தினாபுரம்), சுந்தரவடிவேல் (மண்ணுழி), ரேவதி (விளாங்குடி), மாலா (பெரியதிருக்கோணம்), சிவபெருமாள் (வைப்பம்), விஜயகுமார், சுரேஷ்குமார் (சுண்டகுடி) மற்றும் அலுவலக மேலாளர் ஆனந்தன், பதிவரை எழுத்தர் வெங்கடாசலம், கணக்கர் ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
- இதில் ஓய்வூ பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி, கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழு நேர கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், சதுரங்கம், கணினி, மெய்நிகர் உள்ளிட்ட கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கடந்த ஒருவாரம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பயிற்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வூ பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி, கோடைக்கால பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். நூலகப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் ராமலிங்கம், நூலகப் பணியாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் துணை நூலகர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
- விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
அரியலூர்.
விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது, உர விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின், இது தொடர்பாக அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரியலூர் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு, ஒவ்வொரு கடைக்கும் அபராதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
தற்போது தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 2 தனியார் உரக்கடைகள் மீது ஜெயங்கொண்டம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் அபராதமாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதில் 5 உரக்கடைகளுக்கு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. செந்துறை குற்றவியல் கோர்ட்டில் மேலும் 1 தனியார் உரக்கடை மீது வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
- தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா திடீரென உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் ஏதேனும் தகவல் கிடைத்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விபத்து தடுக்கும் விதமாக வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிகிறார்களா என்று பார்க்க வேண்டும். தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.







