என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • ரெங்கசாமி தனது மொபட்டில் ராஜ பாளையம்-கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
      • மொபட் மீது வேன் மோதியதில் ரெங்கசாமி படுகாயம் அடைந்தார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பிள்ளையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 50). இவர் நேற்று தனது மொபட்டில் ராஜ பாளையம்-கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது அந்த வழியாக தனியார் மில் வேன் ஒன்று வந்தது. அதனை கரிவலம்வந்த நல்லூர் அருகே செண்பகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் ஒட்டிச்சென்றார். எதிர்பாராத விதமாக மொபட் மீது வேன் மோதியதில் படுகாயம் அடைந்த ரெங்கசாமியை அப்பகுதியினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியிடம் விசாரித்து வருகின்றனர்.

      • பேரணிக்கு கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார்.
      • பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கடையம் போலீசாரும் இணைந்து உலக போதை பொருள் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குளோரி தேவ ஞானம் வாழ்த்தி பேசினார்.

      கடையம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் ஊரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதில் கடையம் பெரும்பத்து தொழில் அதிபர் பரமசிவன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.
      • வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசு தொகை வழங்கப்பட்டது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்- மீனாட்சிபுரம் கிராமத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேங்கை கபடி குழு மற்றும் மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டியினை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் வேங்கை கபடி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தட்டி சென்றனர். முதல் பரிசை பாலாஜி நயினார் நாகேந்திரன் ஸ்பான்சர் செய்திருந்தார். பரிசு வழங்கும் விழாவில் தொழிலதிபர் விஜய் என்கிற சண்முக நயினார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கினார்.

      விழாவில் தென்காசி மாவட்ட பா.ஜனதா இளைஞரணி செயலாளர் சரவணமுருகன், பா.ஜனதா மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக், பொன்னுதுரை, பொன் செல்வன், ஜெகன், பொன்னுசாமி, நாராயணன், ராமு, ராஜா மற்றும் திப்- மீனாட்சிபுரம் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

      • குடிநீர் முறையாக வரவில்லை என பொதுமக்கள் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
      • பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.

      பொதுமக்கள் கோரிக்கை

      இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை மெதுவாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை என பொதுமக்கள் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

      இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையில் ஈடுபட்டார்.

      அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

      அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இந்த பணிகள் வரும் ஜூலை 10-ந் தேதிக்குள் முடிக்கும் வகையில் அதிக பணியாளர்களை பணியில் அமர்த்தி போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

      மேலும் இந்த பணிகள் தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கூறினார்.

      ஆலோசனையின் போது, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரியதர்ஷினி, சங்க ரன்கோவில் நகராட்சி என்ஜினீயர் பொறுப்பு சணல்குமார், மேற்பார்வையாளர் கோமதிநாயகம், நகராட்சி கவுன்சிலர் புனிதா மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

      • நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
      • அனைத்து தெய்வங்களுக்கும் 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

      சிவகிரி:

      சிவகிரி கீழ மாரியம்மன் கோவில் தெரு சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விநாயகர், சிவசக்தி மாரியம்மன், பைரவர், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி மற்றும் கோபுரம், முன் மண்டபம் உள்பட பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

      கும்பாபிஷேகம்

      இதன் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 21-ந்தேதி காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

      தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, புதிய விக்கிரகங்களுக்கு கண் திறத்தல் சாந்தி நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.மகா பூர்ணாகுதி தீபாராதனை, யாத்திரதானம், கடம் புறப்படுதல் தொடர்ந்து, குடங்களில் யாகசாலை தீர்த்தம் கொண்டு செல்லப் பட்டது. முதலில் மூலவர் விமானம் கும்பாபிஷேகமும், தொடர்ந்து விநாயகர், அம்மன், பைரவர், கருப்ப சுவாமிக்கு மேலே உள்ள கலசங்களில் நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

      அபிஷேகம்

      அனைத்து தெய்வங்க ளுக்கும் பால், பன்னீர், நெய், இளநீர் உட்பட 21 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பட்டுப் புடவைகளாலும், மலர் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டி பூஜை நடைபெற்றது.

      பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபி ஷேகத்தை லண்டன் கணபதி சுந்தர குருக்கள், சிவ முத்துராம சுந்தர குருக்கள் நடத்தினார்கள்.

      விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவர் திருஞானம், துணைத்தலைவர் ராம மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், செயலா ளர் அய்யனார், தண்டல் வீரபாண்டியன் மற்றும் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

      கலந்து கொண்டவர்கள்

      விழாவில் முன்னாள் காவல்துறை ஐ.ஜி. மாசான முத்து, ஓய்வு பெற்ற தடவியல் துறை இயக்குனர் விஜயகுமார், அரசு முன்னாள் கூடுதல் செயலாளர் சந்திரகுமார், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகசாமி, முன்னாள் மாநகராட்சி தலைமை பொறியாளர் முத்துராஜ், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், எஸ்.தங்கப்பழம் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், எம்.எல்.ஏ.க்கள். பழனி நாடார், சதன் திருமலைக்குமார், வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன், ஊத்து மலை இளைய ஜமீன்தார் முரளி ராஜா, மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் சங்கை கணேசன், வாசுதேவநல்லூர் நாகராஜன், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் மூர்த்திப் பாண்டியன், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கட கோபு, சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர் கலா என்ற கல்யாண சுந்தரி, முத்து அருணாச்சலம், வக்கீல் துரைப்பாண்டி, காசிராஜன், தலையாரிகள் வேல்முருகன், அழகுராஜா, நெல்லை, தென்காசி மாவட்ட காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், கீழ மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.
      • ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

      கடையம்:

      கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமையில் செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

      பஞ்சாயத்து தலைவர்கள் ஏ.பி. நாடானூர் அழகுதுரை, பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், மேலஆம்பூர் ஊராட்சி குயிலி லட்சுமணன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் மற்றும் ரவணசமுத்திரம் முகமது உசேன், தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம், பாப்பான்குளம் முருகன் கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

      கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கடையம் பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் மடைகள் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், ராமநதியில் இருந்து இரண்டாத்துமுக்கு வரை செங்கல் சூளையில் உள்ள மோட்டார்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்க முடியும். ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      • மாணவர் மன்றத்தில் மாணவர்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
      • இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      கனிமொழி எம்.பி.

      நாளை (செவ்வாய்க்கிழமை) தென்காசி வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வருகிறார். அவருக்கு தேவர்குளத்தில் காலை 11 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

      தொடர்ந்து தேவர்குளத்தில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர் மன்றத்தில் மாணவர்க ளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

      நூற்றாண்டு விழா

      அதனைத் தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் அறிவித்துள்ள இல்லம் தோறும் கட்சிக்கொடி என்ற அறிவிப்பின்படி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் குருக்கள்பட்டி, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் மதீனா நகர், சங்கரன்கோவில் நகரம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

      பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார். தொடர்ந்து, மாலையில் கரிவலம்வந்த நல்லூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

      எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • சிறப்பு மருத்துவ முகாமிற்கு கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
      • முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

      சிவகிரி:

      முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு பதிவு செய்யும் முகாம் வாசுதேவநல்லூர் வட்டாரம் நகரம் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் முரளிசங்கர் வரவேற்றார். இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் பிரேமலதா திட்டம் குறித்து விளக்கி பேசினார் . தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., நகரம் ஊராட்சி தலைவர் அமுதா ரமணிபாய் செல்வமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர், எக்கோ, இ.சி.ஜி., மார்பக புற்றுநோய், தொழுநோய், காசநோய், கருப்பைவாய் புற்றுநோய் கண்டறிதல், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மன நல மருத்துவம், சித்த மருத்துவம் வழங்கி மருந்து, மாத்திரை சிகிச்சை வழங்கப்பட்டது.

      இதில் சங்கரன்கோவில் மற்றும் தென்காசி ஆர்.டி.ஓ.க்கள், ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன், மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் திருமலை நன்றி கூறினார்.

      • சிவகிரி பேரூராட்சி பகுதியில் வடிகால் சுத்தம் செய்தல்,போஸ்டர்கள் அகற்றுதல் பணிகள் நடைபெற்றது.
      • பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

      சிவகிரி:

      சென்னை பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்பேரில், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படி, சிவகிரி பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி வடிகால் சுத்தம் செய்தல், பஸ் நிலையத்தில் போஸ்டர்களை அகற்றுதல் ஆகிய பணிகளை தொடர்ந்து சிவகிரி வனச்சரக அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் விபத்து நடைபெற்றது.
      • இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

      கடையம்:

      அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      கனிம வளங்கள்

      கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் களக்காட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

      இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

      இது போன்று குற்றா லத்தில் பள்ளி செல்லும் சிறுவன் மீது வாகனம் ஏற்றி விபத்துக் குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறான். அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

      இது போன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு, பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாத சாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகிற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

      திரும்ப பெற வேண்டும்

      இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

      எனவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு- பகலாக குவாரிகள் இயங்குவதை பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • ம.தி.மு.க. சார்பில் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்று பேசினாார்.தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் பொன் ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, தென்காசி, விருதுநகர் இணையதள மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலெட்சுமி சுப்பையா, இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமது ஹக்கீம், பூக்கடை பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

      • ரெயில் எண் 06004 கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      • மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.

      தென்காசி:

      மதுரை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு, பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் ஒரு கோரிக்கை மனு எழுதியுள்ளார்.

      கடையநல்லூர்

      அதில், நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக செல்லும் தாம்பரம் ரெயிலானது கடையநல்லூர் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி என்பதால் இங்கு பொதுமக்கள் மாணவ, மாணவிகள் வியாபாரிகள் அதிகளவில் வெளியூர்களுக்கும், பெருநகரங்களுக்கும் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

      எனவே ரெயில் எண் 06004 கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவை ஜூன் மாத இறுதியுடன் முடிவடைய இருப்பதால் இந்த ரெயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.

      தென் மாவட்டம்

      தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் பணிபுரிந்து வருவதாலும் நெல்லை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, பழனி, ஆகிய நகரங்களில் பிரசித்தி பெற்ற கோவில்கள் இருப்பதாலும் மக்கள் அங்கு எளிதாக பயணிப்பதற்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.

      கோயமுத்தூர்- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் -கோயம்புத்தூர் ரெயில் சேவையை விருதுநகர், செங்கோட்டை மற்றும் செங்கோட்டை விருதுநகர் இணைப்பு முறை ரெயிலாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×