என் மலர்
- பள்ளி வளாகத்தில் மக்கா, மதினா போன்ற மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
- முகமது ரஜப் பக்ரீத் தினத்தைப் பற்றி மாணவ- மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பக்ரீத் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் மக்கா, மதினா போன்ற மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பள்ளியின் கணித ஆசிரியர் டாக்டர் முகமது ரஜப் பக்ரீத் தினத்தைப் பற்றி மாணவ- மாணவிகளுக்கு எடுத்து கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.
- சங்கர் கணேஷ் என்பவருக்கு காந்தி கலாம் விருது வழங்கப்பட்டது.
- பெரும்பாலான போட்டிகளில் நேரில் சென்று வீரர்களை சங்கர் கணேஷ் உற்சாகப்படுத்துகிறார்.
தென்காசி:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை அழைத்து அவர்களை கவுரவிக்கும் விதமாக காந்தி கலாம் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி தென்காசியில் உள்ள தனியார் ஓட்டலில் செங்கோட்டை காந்தியவாதி விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்கு காந்தி கலாம் விருது வழங்கப்பட்டது. அதில் 45 வயதுடைய சங்கர் கணேஷ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பூபால்ராஜாபட்டியை சேர்ந்தவர் ஆவார். விளையாட்டு வீரர்களுக்கான பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஆனால் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தும் செயலையும் ஆர்வமுடன் செய்து வருகிறார்.
நாளிதழ் மற்றும் சுவரொட்டிகளின் மூலம் விளையாட்டுப் போட்டிகளை அறிந்து கொண்டு அங்கு நேரில் சென்று விளையாட்டு வீரர்களுக்கு தேவையானவற்றையும் முன் நின்று செய்து கொடுப்பார். எனவே இவருக்கு சிறந்த சேவையாளர் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
- சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, கனிமொழி எம்.பி. சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கனிமொழி எம்.பி.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம், ஆங்கிலத்துறைத் தலைவர் ராமபாரதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயற்பியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கு வந்து பேச வாய்ப்பளித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் வாழ்க்கை என்பது மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5 முறையும், இந்தியா முழுவதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்தவர் கலைஞர்.
தனது கருத்துக்களை கையெழுத்து ஏடுகள் மூலம் தொடங்கி அனைவருக்கும் தெரியப்படுத்தியவர் கலைஞர். இன்று நமக்கெல்லாம் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வளர்ந்து விட்ட நிலையில், கலைஞரின் இளமைக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையில் கையெழுத்து மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.
இதன் மூலமும், நாடகங்கள் மூலமும் தனது கருத்துக்களை தெரிவித்தும், ஜாதியால், பொருளாதாரத்தால் பின்தங்கி இருந்தவர்களை தன்னம்பிக்கை, உழைப்பு, பணி மூன்றும் இருந்தால் வெற்றி பெறலாம் என அனைவரும் அறியச் செய்தவர் கலைஞர். எனவே மாணவ, மாணவிகள் கலைஞரின் வரலாற்றை படித்துப் பார்த்தாலே தங்களுக்குள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தாமாகவே வந்து விடும்.
மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி துறையில் முன்னேற வேண்டும் என கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்தவர் கலைஞர். இன்று இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகள், கலை கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்கியவர் கலைஞர். தனது கடைசி காலம் வரை நாட்டுக்காக உழைத்தவர் கலைஞர்.
திராவிட மாடல்
அவரது வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது உண்மை.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி, கனிமொழி எம்.பி.யிடம் உங்களுக்கு பிடித்த பெண் ஆளுமை யார் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி., பெண் ஆளுமை உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்காக பெண்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை கிடைக்க பாடுபட்ட தந்தை பெரியார் தான் பெண்களுக்கான ஆளுமையை உருவாக்கித் தந்தவர் என பதில் அளித்தார்.
கல்லூரி வளர்ச்சி நிதி
தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் படிப்பில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு புத்தகபை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதனைத் தொடர்ந்து மேல்நீதிநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஏற்பாட்டில் கல்லூரி வளர்ச்சி நிதியாக ரூ. 50,001 வழங்கப்பட்டது. முடிவில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது.
- குளம், ஏரிகளின் பரப்பளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.
தென்காசி:
தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை விரி வாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடியும், வலது பக்கம் சுமார் 50 அடியும் சாலை அமைப்பதற்காக பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு கையகப் படுத்த ப்பட்டு மண்ணைக் கொட்டி சாலை அமைக்கின்றனர்.
இந்த குளத்தின் நீர் பாசனத்தை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காக ஏராளமான பொதுமக்களும் இருந்து வரும் நிலையில் தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது என அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே குளத்தின் மேலே பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்பது அவர் களின் கருத்தாக உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு ஆக்கிரமிப்பு களில் இருந்து நீர் நிலை களை பாதுகாக்க குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிர மிப்புகள் அகற்றும் சட்ட த்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு ஏரி களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றல் சட்டம் 2007 -ன் படி நீர்நிலைகள் அதாவது குளம் மற்றும் ஏரிகளின் பரப்பளவையோ அல்லது நீரின் கொள்ளளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.
எனவே இந்த சட்டவிரோத செயலில் தலையிட்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி குளத்தின் நடுவே மேம்பாலம் அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளருமான மருது பாண்டியன், தமிழ்நாடு கோட்ட பொறியாளர் மற்றும் சாலை மேம்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
- குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.
- அனைத்து தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை தூர்வாருதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தல், குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு தனிஅறை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் பேசுவதற்கு எழுந்தார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
- திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதல் -அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 2022-2023-ம் ஆண்டி ற்கான நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது, விளையா ட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தென்காசி மாவட்டத்தில் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்விளையாட்டு மற்றும் பல்நோக்கு விளை யாட்டரங்கம் அமைப்பதற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்ட த்திற்கு மேலும் பல பரிசுகள் பெற்று பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தனுஷ் குமார் எம்.பி. பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் பிற திறமைகளை வளர்த்து கொண்டு பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
தென்காசி சித்திர சபை நாட்டியாஞ்சலி குரு புருசோத்தமன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் , விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடந்தது.
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1500 வீரர், வீராங்க னைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் சிறப்பாக பணியாற்றிய உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியைகள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அரசு ஊழியர்கள் பிரிவில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் , மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
- சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பழைய மார்க்கெட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காய்கறிகள் சந்தை நடத்தப்பட்டு வந்தது.
கால்நடை சந்தை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மார்க்கெட்டுக்குள் வைத்து ஆடு மற்றும் மாடுகள் சந்தையும் புதிதாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சந்தைக்கு பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாக பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட் பகுதி இருப்பதால் பொது மக்களின் கழிப்பிட வசதிக்காக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிட கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிபபு இல்லாமல் தண்ணீர் வசதியின்றி கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அதனை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சமூகஆர்வலர்கள் கோரிக்கை
இதனால் சந்தை நடை பெறும் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கீழப்பாவூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளின் நலன் கருதி பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்குள் இயங்காமல் இருக்கும் கழிப்பிட கட்டிடத்தில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.
- சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் இணையவழி மூலம் ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தான் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தானில் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது, கணக்கு வாய்ப்பாடு, ஆங்கிலத்தில் கதை சொல்வது என பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.
இதனை சரிவர முடித்து செயல்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் 3 இடத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நூஸ்மா பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.
- மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது.
தென்காசி:
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பாக தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா நடைபெற்றது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-
மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. அவற்றை பயன்படுத்தி இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. எனவே அவற்றை பயன்படுத்தி முறையாக அணுகி தொழில் முனைவோராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் பராசக்தி கல்லூரி முதல்வர் ஜெயினிலா சுந்தரி, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்திய அரசு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சேவை, ஏழைகள்நலன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளடக்கிய புத்தங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வாங்கி சென்றனர்.
தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகளும் மதியம் கிராமிய குழு நடனமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சம்பவ இடத்திற்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள அரியூர் மலையடி வாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலையில் பெய்யும் மழை நீரானது குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுபதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது.
எனவே மலையை சுற்றியு ள்ள 5 கிராம மக்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி கால்நடைகளை கூட மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலை அவலநிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக இருமன்குளம், வடக்குப் புதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டர், அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீ சார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பழனிவேல்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்க ளிடம் கல்குவாரி சம்பந்தமான கோரிக்கை மாவட்ட கலெக்டர் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த மலையை பார்வையிட சென்ற போதுதான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்களுக்கும், கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கியதாக சீமான் உள்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
- கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார்.
- தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
தமிழ்நாடு மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பபெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செய லாளர் சுதா பாலசுப்பிர மணியன், சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட ம.தி.மு.க. துணைச்செயலாளர் சக்தி கோமதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, ஒன்றிய இணைச்செயலாளர் மணி சேகர், வாசுதேவ நல்லூர் ம.தி.மு.க. செயலா ளர் பாசறை கணேசன், தி.மு.க. செயலாளர் பாலசுப்பிர மணியன், மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு முருகன், வி.சி.க. சுரேஷ், முஸ்லீம் லீக் செய்யது சாகுல் ஹமீது, த.மு.மு.க. ஜமால், ம.தி.மு.க. மெடிக்கல் கருப்பையா, மாரியப்பன், விழி மணி, கோமதிசங்கர், முருகன், சந்திரன், ஆனந்த முருகன், சம்சுதீன், காளிராஜ், ராமநாதபுரம் முருகன், ராயகிரி சங்கையா, ம.தி.மு.க. துணைச்செயலாளர் தர்மர், தி.மு.க. மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் செல்லத்துரை, கட்ட பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார்.
- கலெக்டரிடம் 300 மனுக்களையும் சிவபத்மநாதன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு ஒன்றியம், நகரம், பேரூர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார். அதில் பொது மக்களின் கோரிக்கைகளான முதலியார்பட்டி ஊராட்சி இந்திராநகர், வாகைகுளம், கடையம் பெரும்பத்து ஊராட்சி சபரி நகர் பகுதியைசேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டியும், அங்கபுரம் பொதுமக்கள் புதிய ரேஷன் கடை கட்டிடம் வேண்டியும் மற்றும் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகள் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி வேண்டியும், கடையம் ஒன்றியத்தில் மேற்கு பகுதியில் வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படுகிற பாதிப்பை தடுக்க கோரியும், கடையம் முதல் ராமநதி அணை வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையை சீர் செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மின்மோட்டார் வாகனம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை வேண்டியும் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுத்த 300 மனுக்களை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வழங்கினார்.







