search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னேற துடிக்கும் மாணவர்கள் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசியபோது எடுத்த படம். அருகில் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    முன்னேற துடிக்கும் மாணவர்கள் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
    • சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, கனிமொழி எம்.பி. சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    கனிமொழி எம்.பி.

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம், ஆங்கிலத்துறைத் தலைவர் ராமபாரதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இயற்பியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கு வந்து பேச வாய்ப்பளித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் வாழ்க்கை என்பது மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5 முறையும், இந்தியா முழுவதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்தவர் கலைஞர்.

    தனது கருத்துக்களை கையெழுத்து ஏடுகள் மூலம் தொடங்கி அனைவருக்கும் தெரியப்படுத்தியவர் கலைஞர். இன்று நமக்கெல்லாம் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வளர்ந்து விட்ட நிலையில், கலைஞரின் இளமைக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையில் கையெழுத்து மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.

    இதன் மூலமும், நாடகங்கள் மூலமும் தனது கருத்துக்களை தெரிவித்தும், ஜாதியால், பொருளாதாரத்தால் பின்தங்கி இருந்தவர்களை தன்னம்பிக்கை, உழைப்பு, பணி மூன்றும் இருந்தால் வெற்றி பெறலாம் என அனைவரும் அறியச் செய்தவர் கலைஞர். எனவே மாணவ, மாணவிகள் கலைஞரின் வரலாற்றை படித்துப் பார்த்தாலே தங்களுக்குள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தாமாகவே வந்து விடும்.

    மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி துறையில் முன்னேற வேண்டும் என கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்தவர் கலைஞர். இன்று இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகள், கலை கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்கியவர் கலைஞர். தனது கடைசி காலம் வரை நாட்டுக்காக உழைத்தவர் கலைஞர்.

    திராவிட மாடல்

    அவரது வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி, கனிமொழி எம்.பி.யிடம் உங்களுக்கு பிடித்த பெண் ஆளுமை யார் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி., பெண் ஆளுமை உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்காக பெண்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை கிடைக்க பாடுபட்ட தந்தை பெரியார் தான் பெண்களுக்கான ஆளுமையை உருவாக்கித் தந்தவர் என பதில் அளித்தார்.

    கல்லூரி வளர்ச்சி நிதி

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் படிப்பில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு புத்தகபை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மேல்நீதிநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஏற்பாட்டில் கல்லூரி வளர்ச்சி நிதியாக ரூ. 50,001 வழங்கப்பட்டது. முடிவில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×