அண்ணாமலையின் கருத்தெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க - மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்நாவிஸ்
- அண்ணாமலை டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர்.
- மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா?
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கு எதிராக பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் கருத்து மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்ணாமலைக்கு சரியாக இந்தி பேச வராது. அவரின் கருத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம். அதேபோல அண்ணாமலை மகாராஷ்டிராவை சேர்ந்தவரும் அல்ல. அவர் பாஜகவின் தேசிய தலைவரும் அல்ல. ஆகவே அவருடைய கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யாதீர்கள்" என்று தெரிவித்தார்.