என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் வி
    • நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில்,  முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். 

    அதன்படி, நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற, திருவாரூர் புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இசை செல்வம் விருது அளிக்கப்பட்டது.


    விருது வழங்கியதற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

    நடனக் கலைஞர் அனிதா குகாவின் நாட்டிய சேவையை பாராட்டி, அவருக்கு நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. மெய்நானம் சகோதரர்கள் டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை கே. முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.

    ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி என தகவல் வெளியானது.

    இந்நிலையில், 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

    அதன்படி, விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.

    நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.

    அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்
    • கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர், 

    "ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்கமுடியுமா?.

    சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம். தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. விருது பெற்றிருக்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.


    விழாவில்

    முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம். கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.  

    • தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
    • எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-

    இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் தரவில்லை.

    தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

    எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
    • தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் பங்கேற்க வேண்டும்

    நாதக பொதுக்கூட்டம் டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

    "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    • ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

    விருத்தாசலத்தில் நேற்று திமுக நிர்வாகி ரங்கநாதனை தாக்கிய விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சராமாரியாக தாக்கினர். தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சீமான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் காவல்நிலையத்தில் சீமான் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
    • 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    100 நாள் வேலை திட்டத்திற்கான பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

    100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

    பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    #ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது
    • அமலாக்கத்துறை சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தது. 

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது. 

    இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் கடந்த 8ஆம் தேதி, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ்குமார் ஆஜராகதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ஆஜராவதில் இருந்து விலக்கு உள்ளதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இருவரும் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார். 

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் ஆஜரான அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனையடுத்து இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

    • ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
    • கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் ஜெயக்குமார் தோல்வியடைந்தார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஜெயக்குமார் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.

    அதிமுக தலைமை மீது ஜெயக்குமார் விரக்தியில் இருப்பதாகவும் விரைவில் அதிமுகவிலிருந்து ஜெயக்குமார் விலகுவார் என்று கூறப்பட்டது. இந்த தகவல் ஜெயக்குமார் மறுத்தார். மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், "2026 சட்டமன்றத் தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். இதில் NO DOUBT. 25 ஆண்டுகள் எனக்கு வெற்றியைக் கொடுத்த ராயபுரம் மக்களை விட்டுவிட்டு வேறு தொகுதிக்கு மாற மாட்டேன்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.

    • பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
    • தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை.

    சென்னை:

    தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

    புதிய ஆண்டிலும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவு குறையாது.

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது போர் பதட்டம் இல்லாத சூழலிலும் தங்கம் விலை உயருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால் மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது.

    தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம், பண்டம் மாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

    தங்கத்தின் விலை கூடினாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சுபகாரியங்களுக்கு மக்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். வாங்கும் அளவு குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்த போதிலும் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து பொருளாதாரமும் உயர்ந்து உள்ளது.

    இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடி உள்ளது. தங்கம் கிராம் 250 ரூபாய் முதல் ரூ.12,500 வரை உயர்ந்து வந்துள்ளதை நான் அறிந்துள்ளேன் என்றார்.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை முதல் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
    • கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.

    அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.

    பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.

    அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.

    ×