search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் சங்கம்"

    • தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி, 

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், சிவசாமியின் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் ராமகவுண்டர் பேசும் போது தமிழக அரசு கடந்த காலங்களில் கர்நாடகா அரசுடன் பேசி, காவிரியில் இருந்து தண்ணீரை விடுவிக்க வைத்து காய்ந்து போன நெல் பயிர்களை காப்பாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

    தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், நட்பு ரீதியில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா முதல் மந்திரியுடன் பேசி தண்ணீரை விடுவிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    அதே போல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்னும் இடத்தில் தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜா, பெருமாள், அசோக்குமார், வேலு, வரதராஜ், நசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனுமந்த ராஜ் நன்றி கூறினார்.

    • ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
    • காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது. காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.

    புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், ஆழ்குழாய் நீரும் இன்றி, விவசாயிகள் குறுவையை காப்பாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் 600 ஹெக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, புதுச்சேரி முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர், கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

    • அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.
    • அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    சென்னிமலை:

    கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. 'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சென்னிமலை கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக அமைச்சர் சு.முத்துசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் அரசின் டாஸ்மார்க் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.

    பெரும்பாலும் இந்த கண்ணாடி பாட்டில்கள் 180 எம்.எல். அளவுள்ள சிறிய பாட்டிகளாகவே உள்ளன. மது அருந்துவோர் இந்த பாட்டில்களை பயன்படுத்திவிட்டு கண்ட கண்ட இடங்களில் போட்டு விடுகின்றனர்.

    குறிப்பாக பாசனக்கால்வாய் செல்லும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சிறு பாட்டில்கள் கொட்டி கிடப்பதை காணலாம். அதோடு வேளாண் விளை நிலங்களில் வேலை செய்யும் பலரும் இந்த பாட்டில்களை வயலில் பல்வேறு இடங்களில் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

    இந்த பாட்டில்களை சேகரித்து ஒழுங்கு செய்ய இயலுவதில்லை. எனவே வயல் வேலைகளில் டிராக்டர் உழவு செய்யும் போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து வேளாண் பணிகள் ஈடுபடுகின்றவர்களை கால்களை வெட்டி விடுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் நெல் அறுவடையில் அறுவடை எந்திரங்கள் இந்த பாட்டில்களையும் நெல்லோடு சேகரித்து விடுகின்றன. அவை நொறுங்கி போய் அரிசியிலும் கூட கண்ணாடி துகள்கள் கலந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதால் பெரும்பாலும் கிராமப் புறத்தில் உள்ள வேளாண் விளை நிலங்களையும், கால்வாய்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.

    அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அட்டை பாட்டில்களின் மூலமாக மதுபானங்களை அடைத்து விற்பனை செய்தால் தற்போது கண்ணாடி பாட்டில்களினால் ஏற்பட்டு வரும் பெரும் சூழல் கேடு தவிர்க்கப்பட முடியும்.

    எனவே அரசு கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக அட்டை மூலம் செய்யப்பட்ட பாட்டில்களை 'டெட்ராபேக்' பயன்படுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
    • அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

    அவிநாசி : 

    விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி கூறியதாவது:- தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போன்று கள்ளுக்கான தடையை நீக்கி, கள் இறக்கி விற்க அனுமதி வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிவசுப்ரமணியம் அறிக்கையை அமல்படுத்தினாலே, கள்ளுக்கான தடை நீங்கும்.

    பாமாயில் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்க வேண்டும். அன்னூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது.

    பல்லடம் :

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மதம் குறித்து நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது. ஆனால் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த சம்பவங்கள் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×