search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் கழிவு"

    • நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
    • குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பையை உரமாக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி பயன்பாட்டிற்காக அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து உதவ வேண்டுமாறு நகர்மன்ற தலைவர் மு. கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.

    சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.

    இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.

    மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

    ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

    இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.

    மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.

    இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.

    பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.

    இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.

    பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.

    இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
    • புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    உடுமலை :

    நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கியத்திற்கு தூய்மையான காற்றும் சுகாதாரத்துடன் கூடிய சுற்றுச்சூழலும் முக்கியமாகும். ஆனால் உடுமலை நகராட்சி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.

    ஆங்காங்கே அலட்சிய போக்கோடு பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காற்று மாசு, சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில்:- சுகாதாரமான காற்றை பெற்று ஆரோக்கியத்துடன் திகழ சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உடுமலை பகுதியில் சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.அதில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம், புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இதனால் நடைபயிற்சி உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்ற பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டு கொள்வதில்லை.இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புற சுகாதார நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை உடுமலை பகுதியில் முற்றிலுமாக தடை செய்வதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • 40 பேர் பணியில் ஈடுபட்டனர்
    • பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து கோட்டை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநகராட்சி ஊழியர்கள் 40 பேர், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் 15 பேர், என 55 பேர் கோட்டை நுழைவாயில், கோட்டை வளாகம் முழுவதும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

    மேலும் கோட்டையினுள் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க ப்படும் பகுதி என எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உதவி என்ஜினீயர்கள் சுஷ்மிதா, சவுந்தர்யா, உதவி மேலாளர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும்
    • சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குளச்சல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் என பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து இரு வேறு குப்பை தொட்டிகளில் தூய்மை பணியாளர்களிடம் வழங்கவும் அறிவுறுத் தப்பட்டு வருகிறது.

    பொதுமக்களால் பிரித்து அளிக்கப்படும் காய்கறி கழிவு, பழக்கழிவு, உணவு கழிவு, பூக்கழிவு, முட்டை ஓடு போன்ற மட்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுயிர் உர கூடத்திற்கு எடுத்து சென்று இயற்கை முறையில் உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மறு சுழற்சி செய்து நீர், காற்று மாசுபடுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக குளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்ட 12.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குஜராத் மாநிலம் சூரத் நகர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்ற தலைவர் நசீர், ஆணையர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சுகா தார அலுவலர் பிச்சையா பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பி.எஸ். மானேஜ்மெண்ட் நிறுவனம் மூலம் குஜராத் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுவதை தவிர்க்க நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன.

    பல்லடம் :

    அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் அவற்றை உணவாக எடுத்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியே வர முடியாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.

    சிறிது சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்து க்கொண்டிருக்கிறது.
    • பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா உத்தமதானபுரம் கிராமத்தில் பாசனம் செய்யும் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.

    இந்த வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

    இதை உடனடியாக பாசனத்திற்கு ஏற்ற வகையில் அகற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×