search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலைகழகம்"

    • 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
    • எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
    • டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    சேலம்:

    கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அங்கீகாரம் பெற்ற மையங்களில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின்தொலைதூரக்கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இப்பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் நேரடி சேர்க்கை மையங்களான , பல்கலைக்கழக வளாகம், மற்றும் கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளிலும், இப்பல்கலைக்கழகத் தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் இப்பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக தாங்களே நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் (www.msuniv.ac.in/Distance-Education) சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் இளநிலை, முதுநிலை, சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×