search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை மோசடி"

    காஞ்சிபுரம் கோவில் தங்கசிலை மோசடி தொடர்பாக அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் வீரசண்முக மணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். #EkambaranatharTemple
    சென்னை:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.

    இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த சிலை மோசடியில் அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனரான வீரசண்முக மணிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இருப்பினும் அவரை உடனடியாக கைது செய்யாத போலீசார் அதற்கான ஆவணங்களை திரட்டி வந்தனர்.

    இதனையடுத்து நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசண்முக மணியை கைது செய்தனர். அவரிடம் சோமஸ்கந்தர் சிலை மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதிகாரி வீரசண்முக மணி அறநிலையத்துறையில் பணியாற்றியபோது அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்தார்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் அவர் பணி புரிந்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறநிலையத்துறையில் பணியாற்றிய 2 பெண் அதிகாரிகளை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்த நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரியான வீரசண்முகமணி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EkambaranatharTemple

    பழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.

    இதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.

    அவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


    மேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    புதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    விரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel
    திருவாருர்:

    திருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.

    சிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.



    இதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling #PonManickavel
    சிலை கடத்தல் வழக்கில் பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜரானார்கள். #Statuesmuggling

    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகளான ரன்வீர்ஷாவின் சைதாப்பேடை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கல் தூண்கள், சிலைகள் ஆகியவையும் சிக்கின. இது தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 2 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை

    கிரண்ராவின் அலுவலக மேலாளர் செந்தில், ஊழியர் தீனதயாளன் உள்ளிட்ட சிலருக்கும். சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று செந்தில், தீனதயாளன் இருவரும் இன்று கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிலைகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை இன்று போலீசார் ஆய்வு செய்தனர். #Statuesmuggling

    கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் தொடர்பாக அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.

    அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை உள்பட 3 சிலைகள் மாற்றப்பட்டன.

    சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    சிலை மாற்றம் செய்யப்பட்ட புன்னை வனநாதர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். 3 சிலைகள் மாற்றப்பட்டது ஏன் என்று விசாரித்தார்.

    இதைத் தொடர்ந்து பழைய மூன்று சிலைகளும் எங்கே, அந்த சிலைகளை என்ன செய்தீர்கள் என்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மாற்றப்பட்ட மூன்று பழைய சிலைகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புன்னை வனநாதர் சன்னதி எதிரே இருந்த நந்தி சிலை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. எனவே மாயமான 3 முக்கிய சிலைகள் புதைக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டது.


    இதுதொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய இணை ஆணையர் காவேரி மற்றும் கூடுதல் ஆணையர் திருமகள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து 3 சிலைகளை மாற்றியது தொடர்பான ஆவணங்களை தருமாறு அறநிலையத்துறை அதிகாரிகளிடம், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கேட்டார். ஆனால் அதற்கான ஆவணங்களையும் அறநிலையத்துறை பெண் அதிகாரிகளால் கொடுக்க இயலவில்லை.

    இதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானதில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியிள்ளனர்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வியாசர்பாடியில் உள்ள கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். சுமார் 30 நிமி டங்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்று தெரிய வில்லை.

    கூடுதல் ஆணையர் திருமகளிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அவர் தெரிவித்துள்ள தகவல்களின் பேரில் மயிலாப்பூர் கோவில் சிலைகள் மாயமான விவகாரம் சூடுபிடித்துள்ளது. #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள். #IdolSmugglingCases #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிப்பவர், தொழில் அதிபர் ரன்வீர்ஷா. இவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பழமையான சிலைகள், கலை நயமிக்க கல்தூண்கள் உள்பட 91 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் ‘சம்மன்’ அனுப்பினார்கள். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உஷார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் ரன்வீர்ஷாவின் புகைப்படத்துடன் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    தன்னை கைது செய்யாமல் இருக்க தொழில் அதிபர் ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    சம்மன் அனுப்பப்பட்ட ரன்வீர்ஷா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி ரன்வீர்ஷா நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டார். ஆனால் கால அவகாசம் கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகை ஒன்றில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அந்த விருந்தினர் மாளிகையில் ரன்வீர்ஷாவுக்கு ஒரு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே ஏராளமான சிலைகள் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

    அங்கு 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார்கள். அங்கு 2 கலைநயமிக்க கல்தூண்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் வெளியே எடுத்தனர். அதில் ஒரு கல்தூண் சிலையோடு சேர்ந்து காணப்பட்டது. மேலும் அங்கு பூமிக்கடியில் ஏராளமான சிலைகளை புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் தோண்டு பணியில் போலீசார் இன்று(சனிக் கிழமை) ஈடுபடுகிறார்கள். #IdolTheft #IdolSmugglingCases #PonManickavel #RanvirShah
    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி கும்பகோணம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #Idolsmuggling

    கும்பகோணம்:

    பழனி பால தண்டாயுத பாணி சிலை வடிவமைப் பதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை வடிவமைத்த கோவில் ஸ்தபதி முத்தையா என்பவர் பழனி கோவில் இணை ஆணையராக பதவி வகித்த ராஜா 2 பேரையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    மேலும் இந்தவழக்கில் நகை சரிபார்ப்பு அலுவலர்களான புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கிடையில் 2முறை முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தனபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பிறகு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்தவழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் கும்பகோணத்தில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தனபால் வருகைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கும்பகோணம் 2-வது நடுவர் நீதிமன்றத்தில் தனபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை அடுத்து காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் தனபால் சரண் அடைந்தார்.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கோதண்டராமன் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து அதுவரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். #Idolsmuggling

    பழனி கோவில் சிலை மோசடி விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்கியதால் டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #Idolsmuggling

    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை கடந்த 2004-ம் ஆண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன் மற்றும் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    குறிப்பாக டி.எஸ்.பி. கருணாகரன் 2 மாதமாக பழனியில் முகாமிட்டு குருக்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற் கொண்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

    நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி.க்கு சிலை கடதல் வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரணை நடத்தி வந்தனர்.

    தற்போது டி.எஸ்.பி. கருணாகரன் கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியதால் டி.எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளார். நேர்மையான முறையில் சிலை கடத்தலை வெளிகொண்டு வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டிலும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அரசு தரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    கோர்ட்டு உத்தரவால் மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரித்ததால் பல உண்மைகள் வெளிவந்து குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். மீண்டும் டி.எஸ்.பி. கருணாகரனே விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்றனர். #Idolsmuggling

    பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு புதிதாக ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக முருகன் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே. ராஜா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறையினர் மலைக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர். அதேபோல் கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, அப்போதைய அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஐம்பொன் சிலை மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சம்பந்தப்பட்டிருப்பது கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐம்பொன் சிலையில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கவேண்டும், சிலையின் வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரியாக தனபால் இருந்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    முன்னாள் ஆணையர் தனபாலை விசாரணைக்கு வரும்படி கூறி 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. எனவே அவருடைய வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். சிலருடைய உதவியுடன் முன்னாள் ஆணையர் தனபால் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனபால் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு தனபால் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “இந்த வழக்கில் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    பழனி கோவில் சிலை மோசடியில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Palanitemple

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்தது தெரியவரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவரவே அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 4 நாட்களாக நடத்திய விசாரணையில் மேலும் சில முக்கிய ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

    மேலும் முன்னாள் ஊழியர்கள், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோரது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தியதுடன் அவர்கள் அளித்த தகவல்களையும் பதிவு செய்து கொண்டனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பழனி கோவில் சிலை மோசடியில் முக்கிய திருப்பமாக கடந்த 2004ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் சம்மந்தப்பட்டிருப்ழுது தெரிய வந்துள்ளது.

    புதிய சிலை தயாரிக்க முடிவெடுத்தது, அதற்கு தங்கம் உள்பட உலோகங்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும், எவ்வாறு சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வழங்குவதற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கும் அதிகாரியாகவும் தனபால் இருந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களாக பல்வேறு ஊழியர்கள் மற்றும் குருக்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்தாக்குறிச்சியில் வசிக்கும் தனபால் வீட்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றுள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்ததும் தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே இவரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர உள்ளனர். அதன்பின்பு மேலும் சிலரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

    பழனி கோவில் சிலை மோசடியில் அதிரடி திருப்பமாக முன்னாள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரை அதிகாரிகள் நெருங்கி உள்ளதால் அடுத்து யார்? கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. #Palanitemple

    பழனி கோவில் சிலை மோசடியில் உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

    கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ம் கட்ட விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல்துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் மலைக்கோவில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலை, சின்னக்குமாரசாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 2004-ம் ஆண்டு பழனி கோவிலில் உதவி ஆணையராக பணிபுரிந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். புகழேந்தி அதன் பிறகு திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதில் சிலை மோசடி நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளோம். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.



    ×