search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue kidnapping cases"

    பழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.

    இதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.

    அவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


    மேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    புதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    விரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel
    திருவாருர்:

    திருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.

    சிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.



    இதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling #PonManickavel
    சிலை கடத்தல் வழக்கில் பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜரானார்கள். #Statuesmuggling

    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகளான ரன்வீர்ஷாவின் சைதாப்பேடை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கல் தூண்கள், சிலைகள் ஆகியவையும் சிக்கின. இது தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 2 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை

    கிரண்ராவின் அலுவலக மேலாளர் செந்தில், ஊழியர் தீனதயாளன் உள்ளிட்ட சிலருக்கும். சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று செந்தில், தீனதயாளன் இருவரும் இன்று கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிலைகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை இன்று போலீசார் ஆய்வு செய்தனர். #Statuesmuggling

    குறைந்த போலீசார் இருப்பதால் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சி.பி.ஐ. மறுத்துவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #IdolSmugglingCases
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இதுவரை விசாரித்து வந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இவர் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டதால் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாற்றும் நிலவியது.

    ஆனாலும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தனக்கு ஒதுக்கிய குறைந்த அளவு போலீசாரை வைத்துக் கொண்டு பல்வேறு திருட்டு சிலைகளை கண்டுபிடித்தார்.

    சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கினார்கள்.

    ஏராளமான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் ‘இண்டர்போல்’ போலீஸ் உதவியை நாடுவதில் சிரமம் இருப்பதாக கூறி இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்படி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதை ஏற்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது.


    சி.பி.ஐ.யில் ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும் சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்க போதிய போலீசார் இல்லை என்பதால் தங்களால் விசாரிக்க இயலாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடித போக்குவரத்து சம்பந்தமாக உதவுவதாகவும், இண்டர்போல் போலீசாரிடம் கேட்டு பெற வேண்டிய தகவல்களை பெற்று தருவதாகவும் சி.பி.ஐ. கூறி உள்ளது.

    வழக்குகளை முழுமையாக எடுத்து விசாரிக்க இயலாது என்று சி.பி.ஐ. கூறி இருப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-


    சிலை கடத்தல் வழக்குகள் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் திறமையாகத்தான் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழக போலீசார் திறமையானவர்கள் தான்.

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வந்தாலும் அவர் ஓய்வுபெற்ற பிறகு வேறொரு அதிகாரிதான் இந்த வழக்குகளை விசாரிப்பார்.

    எனவே வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் ஏற்படாது. பொன்மாணிக்கவேல் போல் எத்தனையோ திறமையான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் உள்ளனர். இருந்தாலும் சி.பி.ஐயிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வந்து சேரவில்லை. கோர்ட்டில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    ×