search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் - உயர் அதிகாரி தகவல்
    X

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் - உயர் அதிகாரி தகவல்

    குறைந்த போலீசார் இருப்பதால் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சி.பி.ஐ. மறுத்துவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #IdolSmugglingCases
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இதுவரை விசாரித்து வந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இவர் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டதால் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாற்றும் நிலவியது.

    ஆனாலும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தனக்கு ஒதுக்கிய குறைந்த அளவு போலீசாரை வைத்துக் கொண்டு பல்வேறு திருட்டு சிலைகளை கண்டுபிடித்தார்.

    சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கினார்கள்.

    ஏராளமான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் ‘இண்டர்போல்’ போலீஸ் உதவியை நாடுவதில் சிரமம் இருப்பதாக கூறி இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்படி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதை ஏற்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது.


    சி.பி.ஐ.யில் ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும் சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்க போதிய போலீசார் இல்லை என்பதால் தங்களால் விசாரிக்க இயலாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடித போக்குவரத்து சம்பந்தமாக உதவுவதாகவும், இண்டர்போல் போலீசாரிடம் கேட்டு பெற வேண்டிய தகவல்களை பெற்று தருவதாகவும் சி.பி.ஐ. கூறி உள்ளது.

    வழக்குகளை முழுமையாக எடுத்து விசாரிக்க இயலாது என்று சி.பி.ஐ. கூறி இருப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-


    சிலை கடத்தல் வழக்குகள் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் திறமையாகத்தான் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழக போலீசார் திறமையானவர்கள் தான்.

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வந்தாலும் அவர் ஓய்வுபெற்ற பிறகு வேறொரு அதிகாரிதான் இந்த வழக்குகளை விசாரிப்பார்.

    எனவே வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் ஏற்படாது. பொன்மாணிக்கவேல் போல் எத்தனையோ திறமையான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் உள்ளனர். இருந்தாலும் சி.பி.ஐயிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வந்து சேரவில்லை. கோர்ட்டில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    Next Story
    ×